Wednesday, February 06, 2008

பனி விழு மலர் வனம்















Friday, April 14, 2006

காத்திருக்கும் காலம்

காலம் நீண்டு செல்கின்றது
என் மண்ணில்
ஒரு சுதந்திர மூச்சுக்காய்
காத்திருக்கும் காலம்
நீண்டு செல்கின்றது

பச்சை வயல்களையும்
குச்சு வீடுகளையும்
அலையெறியும் கடலையும் -அதில்
துடிக்கும் கதிரொளியையும்

பார்த்து நாளாகின்றது
பாசத்துடன் ஒரு அழைப்பையும்
நடு நடுங்கும் கரங்களின்
தலை தடவலையும் -அதை
உணரும் ஆன்மத்தின் சிலிர்ப்பையும்

நாட்கள் யுகங்களாகின்றது
பச்சை டாலர்களும்
பகட்டு வாழ்க்கையும்
வெட்கமின்றித் திருடிக்கொள்ளும்
எல்லாவற்றையும்

காலம் நீண்டு செல்கின்றது
காலடியில் நிழலளக்கும் நேரமும்
கூரையின் மேலால் குதித்துவரும்
சூரியனும் பச்சைப் பூவரசில்
தேங்கி விடும் வெப்பமும்
அதற்கும் மேலான சுதந்திரமும்

என்மனதில் பதிந்துவிட்ட வாழ்க்கையோ
ஆழ்கடலின் அமுக்கத்தில்
பொருமி நிற்கும் அமைதிபோல
ஒரு புயலுக்கு முன்னாலுள்ள
சினக்கும் கணங்கள் போல

பார்த்து நாளாகின்றது
போகும் தூரம் நீண்டுவிடுகின்ற
போதிலும் தளரா நம்பிக்கை
தளையிட்டே நிற்கின்றது
ஏறி மிதித்துவிடும் வேகத்துடனும்

தோளில் சுமையுடனும்
தடையில்லா நம்பிக்கையுடனும்
மூச்சில் அனலுடனும்
முன்னால் போகின்றவர்களே
நானும் வந்து விடுவேன்-நம்
வாழ்க்கை பற்றிய பாடல்களுடன்

காத்திருக்கும் காலம்
யுகமானாலும் ஒரு நூற்றாண்டுக்
கனவுகளுடன் என் மண்ணில்
ஒரு சுதந்திர மூச்சுடனும்
அதற்கான நியாயங்களுடனும்

Wednesday, April 05, 2006

ஒரு துளியாய்

ஒற்றைச்
சபலத்தின்
ஓர வெடிப்பில்
விம்மிப்பரவும்
பெருவெளியில்
ஒரு துளியாய்

மூடிய
சிப்பியின்
முதுகில் வழியும்
நீர்த் தாரையாய்
நீளும்
கற்பங்களை
நிமிர்த்திக்
கழியும்
பிரயத்தனத்தில்

பகலும் இரவும்
பாதித்
தூக்கமும்
பசியுமான
விளங்கமுடியா
மர்மத்தின்
முடிச்சில்

காலடி தெரியா
கற்பத்தின்
இருட்டைப்போல்
காலக்
கணிதத்தின்
கழித்தலிலும்
கூட்டலிலும்

சுற்றிச் சுழலும்
புழுவைப்போல
நகர்ந்து போக
நீள்கிறது
வாழ்க்கை.

Monday, March 06, 2006

நீளும் பொழுது


கழுவித் துடைத்து
நாரி நிமிர்த்த
சுருட்டி இழுக்கும்
முதுகு வலி

ஈரம் துடைக்கும்
விரல்கள்
சிக்கிக் கொள்ளும்
கிழிசல்

'அம்மா வர்ரேன்'
கனத்துத் தொங்கும்
வார்த்தைகள்
வீட்டின் திசைகளுக்குள்
ஒட்டிக் கொள்ளும்

முன் படிகள்
கால்கள் தாண்ட
குளிர் காற்றின்
உரசலில்
விடைக்கும் மூக்கு
'ச்..சூ......ய் '

கந்து வட்டிக்
கடன்காரன்
கண்ணீர் தீர்த்த
பட்டினிப் பிள்ளை
ஊதல் காற்றில்
போதை தீர்க்கும்
புருஷன்

யார்
நினைத்திருப்பார்கள் ?

பிசிறிய ஒளியில்
வெளுத்திருந்த
பிறை
மரங்களின் தலையில்
ஒழுகிய
வெளிச்சக் கரைசல்
இருட்டைப் பறித்து
துப்பிய வழி

கொடிய விஷங்கள்
கருக்கும்
கணங்களுள்
எட்டி வைக்கும்
கால்களில்
நீளும் பொழுது

Sunday, March 05, 2006

பிரார்த்தனை

செப்புக் குடம்
சிறு குழந்தை
சிவந்த உதட்டைப்
பிரித்தது சிரிப்பு

வட்டக் குழலாய்
வாழ்க்கைச் சக்கரம்
நகர்ந்து போன
பாதைத் தடம்

சுட்டுச் சுடுகாடாக்கி
வெட்டி விழுத்தி
விதி என்றே
நடந்து போகும்

மண்ணிற்குள்ளும்
மனதிற்குள்ளும்
புதைந்து போன
அனுபவத்தின்
எச்சங்கள்

வாசிக்கும்போதும்
சுவாசிக்கும்போதும்
மூச்சடங்கி
முகமழிந்து
போகாதிருக்க

பிரார்த்தனை செய்தது
உடைந்து போன
கலயத் துண்டு.

Friday, February 24, 2006

எனது குழந்தை

பயணம் மிகவும் நீண்டு கொண்டிருந்தது. வாழ்க்கைப் பயணம் போலும் குழப்பம் மிகுந்ததாய் இல்லாவிட்டாலும் முதலும் முடிவும் அறிந்து வைக்கப்பட்டிருக்கக் கூடியதாயிருந்தாலும் ஒவ்வொரு பயணத்தின் இடையிலும் இவ்வாறு தான் உணரப் படுகின்றது. முடிந்து போகவேண்டுமென்ற ஆசையும் முடியப் போகின்றதே என்ற துக்கமும் முடிய வேண்டாமோவென்ற அங்கலாய்ப்பும் மிக்கதாகத் தான் இருக்கின்றது. பயணித்துக் கொண்டிருக்கின்ற ஒவ்வொருவரும் பயணத்தைப் பற்றி நினைப்பது இயல்புதான். பயணத்தைப் பற்றி மட்டுந்தானா ? ஓய்ந்திருக்கும் வேளையும் ஓய்ந்திருப்பதனால் கிடைக்கும் நேரமும் எத்தனையோ விடயங்களை நினைத்துப் பார்க்கத் தூண்டுகின்றது. நடந்தது நடக்கப் போவது அல்லது நடக்க வேண்டியது அல்லது நடக்கக் கூடியது என்று மனது எதையெல்லாம் எண்ணிக் கொள்கின்றதோ அதையெல்லாம் நினைத்துப் பார்க்கின்றது. சமயத்தில் வாழ்க்கையின் சரி பிழைகளைச் சலித்துப் பார்த்து சோர்வும் கொள்கின்றது. எத்தனைதான் முயன்றாலும் வாழ்க்கைக்கு தன் போக்கில் போவதில் ஆனந்தம் மிகுதியாயிருக்கின்றது. இல்லாவிட்டால் எண்ணங்களையும் ஆசைகளையும் மீறிய ஒரு திசையில் வாழ்க்கை நகர்ந்து போவதை பார்த்துக் கொண்டிருக்க வேண்டியிருக்கிறதே. வாழ்க்கை அப்படித்தான் நிகழ்ந்திருக்கின்றது. சொந்த வாழ்க்கையென்றாலும் ஒரு பார்வையாளனாக சும்மா நின்று பார்த்துக் கொள்ளும் படிக்கே வாழ்க்கை அமைந்து விடுகின்றது. கவலைகளை மட்டும் சுமந்து கொண்டு வாழத் தெரியாமல் அவதிப் படுவதை என்னவென்று சொல்லமுடியும்.

எனக்கு குழந்தை பிறந்து இரண்டு நாளாகின்றது. இன்னும் குழந்தையைப் பார்க்க முடியாத படிக்கு வாழ்க்கை என்னைத் தள்ளி வைத்திருக்கின்றது. திட்டமிட்டதற்கும் முன்னால் குழந்தை எதனால் பிறந்தது. இதற்கெல்லாம் யாரும் காரணம் சொல்லமுடியுமா? வாழ்க்கை பற்றி அறிந்து கொண்டதற்கும் அப்பால் வாழ்க்கை ஒரு மர்மத்துடன் நகர்ந்து கொண்டிருக்கின்றது. அறிந்து கொள்ளமுடியாத மர்மங்களின் கூட்டாகத் தான் அது இருந்து கொண்டிருக்கின்றது. எளிய அளவு கோல்களுடன் கூட இணைந்து வர முடியாதபடிக்கு அதன் ஓட்டம் நிலையில்லாது மாறிக்கொண்டிருக்கின்றது.

வாழ்க்கையை எளிமைப்படுத்தக் கூடிய எனது முயற்சிகளும் சதா வாழ்க்கையைக் குழப்பி வாழ்க்கையை மேலும் சிக்கலாக்கிக் கொள்ளும் எனது மனைவியையும் சந்திக்க வைத்ததே அதன் நிலையில்லாமைக்குச் சான்றாக இருக்கின்றதே. எதையும் செய் நேர்த்தியுடன் செய்ய வேண்டுமென்ற எனது செயல்களுக்கும் மறதிக்கும் அரைகுறை அவசர வேலைக்கும் பேர்போன அவள் செயல்களுக்கும் சம்பந்தப்படுத்திப் பார்க்கின்றதே. நேர விரயமென்பது மிகவும் கோபத்துக்குரியதாக சுட்டெரிக்க வைக்கும் என்னையும் எதையும் வைத்துவிட்டு வைத்த இடத்தை மறந்து விட்டு வீடு முழுதும் தேடும் அவளையும் வாழ்க்கையில் இணைத்து வைத்திருக்கின்றதே.

ஒழுங்கும் செய்நேர்த்தியும் பழக்கத்தினால் வருவதென்பது எனது அசைக்கமுடியா நம்பிக்கையாகும். அப்படி எதுவும் கிடையாதென்பது அவளின் கொள்கை. ஆயிரம் முறை மீட்டி மீட்டிச் சொன்னாலும் அதை கடைப் பிடிக்க முடியாதவொரு மெத்தனம் அவள் செயல்களில் காணப்படும். சீறிச் சினக்கையில் மறதியைக் காரணம் காட்டி தப்பிக் கொள்ள முயற்சி செய்கையில் கோபம் பூதாகரமாக வியாபித்து எழும். எனக்குண்டான உயர் இரத்த அழுத்தத்திற்கும் நெஞ்செரிவிற்கும் இவளும் இவள் செய்கைகளுமே காரணம் என்று நம்பிக்கை தோன்றி வெகுகாலமாய் விட்டிருந்தது. எப்படிச் சொல்லிக்கொடுத்தாலும் அப்படியே திருப்பிச் செய்ய முடியா தத்தை குணம் இவள் மேல் இருக்கும் கோபத்தை இவள் தகப்பன் மேல் திருப்பி விட்டிருந்தது. தாயில்லாப் பிள்ளையென்று செல்லம் கொடுத்து இவளைச் சீரழித்திருந்தாரென்பது எனது குற்றச் சாட்டு. தாய் இருந்திருந்தால் ஒரு வேளை இவள் வேறு பட்டவளாக என்னைப் போல குணங்கொண்டவளாக வளர்ந்திருக்க கூடுமோ என்றும் அடிக்கடி தோன்றிக் கொண்டிருக்கும். தாய்மை இன்னும் கூடுதலாக அவளை நெருங்கிப் புடம் போட்டிருக்கக் கூடும்.

ஒரு நெருக்கடி மிகுந்த காலமாக வாழ்க்கை நகர்ந்து கொண்டிருந்தது. நம்பி வந்தவளைக் கை விடும் துணிச்சலும் இன்றி வாழ்க்கையிலும் இணைந்து போக முடியா சங்கடத்துடனும் இதோ ஒரு வருடத்தின் முடிவில் எனக்கொரு குழந்தை பிறந்திருக்கின்றது. யாரிலும் நம்பிக்கையில்லாமல் நானே எல்லாக் காரியங்களையும் கவனித்திருந்தேன். பிரசவ தேதிக்கிடையில் வந்த அவசர அலுவலக வேலை காரணமாக பட்டினத்திற்குப் போயிருந்த போது குழந்தை பிறந்து விட்டிருந்தது.
எதிர்பார்த்திருந்த தேதிக்கும் முன்னதாகவே இது நிகழ்ந்து விட்டிருந்தது.

என் இரத்தத்தைப் பார்க்கும் துடிப்புடன் வீட்டினுள் நுழைந்தேன். மனைவியின் தந்தை தான் கதவினைத் திறந்து விட்டிருந்தார். அவரின் பணிவும் என்னைக் கண்ட போது ஏற்பட்டகுதூகலமும் என்னுள் மகிழ்வினை ஏற்படுத்துவதற்குப் பதிலாக எரிச்சலையே ஏற்படுத்தியது. நானில்லாத வேளைகளில் என்ன குழறுபடிகளை ஏற்படுத்தி வைத்திருப்பார்களோ என்ற கவலையே நெஞ்சை நெருடியது. புத்தியில்லாத பெண்ணும் விவேகமில்லாத தந்தையும் என்ற எனது கணிப்பு அவ்வளவு உறுதியுடன் இருந்தது. குழந்தையும் தாயும் நலமுடன் இருந்தது சிறிது ஆறுதல்ப் படுத்தியது. மனதில் ஆசுவாசத்தை ஏற்படுத்தியது. அவ்வளவு அவசரமாக வீட்டிற்கு வர வேண்டிய தேவை என்னவென்று யோசிக்க வைத்தது. எல்லாம் மகிழ்வுடன் நடந்தேறியதில் மகிழ்ச்சி என்னையும் தொற்றிக் கொண்டது. குழந்தையை அள்ளி அணைத்துக் கொண்டேன். பெண் குழந்தை. மகாலட்சுமி. வீட்டிற்கு முதல் குழந்தை பெண் குழந்தையாயிருப்பது விசேஷம் என்பார்கள். என் விருப்பமும் அவ்வாறே இருந்தது. வாழ்க்கை அவ்வாறே தந்து கண்ணாமூச்சி ஆட்டத்தை இங்கே தவிர்த்திருந்தது. சலனம் கேட்டு என் மனைவி எழுந்து கொண்டாள். அவள் புன்னகைக்க முயற்சி செய்தாள். முடியாமல் மிகவும் களைத்திருந்தாள். ஜன்னலால் அவள் தந்தை தவிப்புடன் எங்களையே பார்ப்பதை உணரமுடிந்தது. குழந்தை நெஞ்சில் எட்டி உதைத்தது. அந்தத் தவிப்பு என்னிடமும் தொற்றிக் கொள்வதை உணர்ந்தேன். மனைவியின் நெற்றியை வாஞ்சையுடன் தடவி விட்டேன். அவள் என் கரங்களைப் பற்றிக் கொண்டாள்.

யதார்த்தம்

இவ்வளவு பணத்தையும் கொண்டு போவது பற்றி என்னைப் போலவே அவருக்கும் பிரச்சனை இருந்தது. ஒரு ஆட்டோவைப் பிடித்துப் போகும் படிக்கு எனக்கு ஆலோசனை வழங்கினார். ஆட்டோவைப் பிடிப்பது என்றாலும் அதற்காகும் பணத்திற்கும் இந்தப் பணத்திலிருந்து தான் எடுத்துக் கொள்ள வேண்டுமென்ற சங்கடம் எனக்கு மட்டுமே தெரிந்திருந்தது. அதை நண்பருக்குச் சொல்லும் அசந்தர்ப்பத்தைத் தவிர்த்துக் கொள்ளவே விரும்பினேன். அதனாலேயே பஸ்ஸில் போவதை அசெளகர்யக் குறையாயில்லை என்பதை அழுத்திச் சொன்னேன். பணம் ஏற்கனவே கட்டப்பட்டு பத்திரிகைக்கட்டொன்றை எடுத்துச் செல்வது போல ஒழுங்கு படுத்தியிருந்தேன். பார்க்கும் யாருக்கும் சந்தேகம் வராதிருக்கவே இந்த ஏற்பாடு. ஆனாலும் இவ்வளவு பெருந்தொகைப் பணத்தையும் இவ்வாறு அஜாக்கிரதையாக எடுத்துச் செல்வதாகவே நண்பர் நம்பினார். கூடுதல் பாதுகாப்பு அதிக கவனத்தை ஏற்படுத்தும் என்றும் அதனால் வேண்டாதவர்களின் பார்வை என் மீது விழுந்து விடக் கூடுமென்றும் நான் நம்பினேன். ஒவ்வொருவரின் பார்வையும் எண்ணங்களும் வேறுபட்டிருப்பது தானே இங்கு இயல்பாயிருக்கின்றது. ஆட்டோவில் போகலாமென்ற அவரின் புத்திமதி எனக்கும் உவப்பாய்த்தானிருந்தது. ஆனாலும் என் பாக்கெட்டில் அதற்கான கனமில்லை என்று எப்படி சொல்லிக் கொள்வது. அவரிடம் கேட்டால் இன்னுமொரு இருபது ரூபாய்களைத் தர மறுப்பேதும் சொல்லிவிட மாட்டாரென்பதும் எனக்குத் தெரியும். அந்த இருபது ரூபாய்களுக்காக என்னுடைய சுய மரியாதையை விட்டுக் கொடுப்பதில் எனக்கு உடன்பாடில்லை. ஏற்கனவே எனது நட்புக்காக இத்தனை உதவி செய்திருக்கும் அவரை மேலும் தர்மசங்கடப் படுத்தக் கூடாதென்ற நல்லெண்ணமும் என்று வைத்துக் கொள்ளுங்களேன்.

மகளின் திருமணம் இனி நல்லபடியாக நடந்து விடும் என்ற நம்பிக்கை எனக்கு ஏற்பட்டிருந்தது. இது பேசிச் செய்யும் திருமணமில்லை. எனது மகளும் மாப்பிள்ளையும் ஒரே இடத்தில் வேலை செய்பவர்கள். ஒருவரில் ஒருவர் மனம் விரும்பி விட்டிருந்தார்கள். அவர்களாகவே பெண் கேட்டு வந்தபோது எங்கள் எல்லோருக்கும் மகிழ்ச்சியாகவே இருந்தது. அவர்களை பற்றிய உயரிய விம்பமும் தோன்றியிருந்தது. மகளுக்கும் ஒரு நல்ல வாழ்க்கை அமைந்ததென்றும் ஆனந்தப் பட்டுக்கொண்டோம். ஆனாலும் அந்த மகிழ்ச்சிக்கும் ஒரு விலை உண்டென அவர்களுடன் பேசியபோது உணரமுடிந்தது. என்னதான் மனம் விரும்பியிருந்தாலும், பெரியவர்களுக்கும் சம்மதமென்றிருந்தாலும் சிலசில சம்பிரதாயங்களை விட்டுக்கொடுக்க முடியாதென்று தெரிவித்து விட்டார்கள். மூத்த மகளின் திருமணம். வீட்டில் எல்லோருக்கும் பிடித்திருந்தது. ஆனாலும் அவர்களின் எதிர்பார்ப்பு எங்கள் வசதிக்கும் மேலால் இருந்தது தான் கவலைப் படுத்தியது. இதற்கு மேல் அவர்களால் இறங்கி வரமுடியாதென்பது அவர்களிடம் பேசிப்பார்த்ததில் புரிந்தது. நல்ல சம்பந்தம். ஆனாலும் பெண்ணைப் பெத்தவர்களின் அவஸ்தைகளைப் புரிந்து கொள்ள முடியாதவர்களை என்ன செய்வது. பெண்ணின் கவலையையும் பெற்றவளின் வருத்தத்தையும் கண்கொண்டு பார்க்கச் சகிக்கவில்லை. மூத்தவள் வழிவிடக் காத்திருக்கும் இளையவள். வாழ்க்கை அதன் கடின முகத்தைக் காட்டத் துணிந்துவிட்டது என்பதை உணர்ந்து கொண்டேன். எதற்கும் ஒரு தீர்வு இருக்கும் என்பதை நம்பினாலும் அதை எப்படிக்கண்டு பிடிப்பது என்பதுதான் புரியாமலிருந்தது. அந்த நேரத்தில் உதவ வந்த நண்பனிடம் தான் பணத்தை வாங்கிக் கொண்டு புறப்பட்டுக் கொண்டிருந்தேன்.

நண்பனும் பஸ் தரிப்பிடம் வரை கூடவே வந்திருந்தான். அவன் கூட இருந்தது எனக்கும் தெம்பாக இருந்தது. என்னதான் நான் பெரிதாக வீரம் பேசியிருந்தாலும் பணத்தை கையில் எடுத்ததிலிருந்து பயம் பிடித்துக் கொண்டது. இதை ஒழுங்காகக் கொண்டு சேர்த்து விடவேண்டுமேயென்ற கவலை தொற்றிக் கொண்டது. வந்த பஸ்களும் ஜனக்கூட்டத்துடன் பிதுங்கி வழிந்தபடியே வந்தன. வந்தபடியே நிற்காமலே போய்ச் சேர்ந்தன. நண்பனின் தொணதொணப்பும் அதிகரித்துக் கொண்டேயிருந்தது. எனது பிடிவாதம் காரணமற்றது என்று விளாசிக் கொண்டிருந்தான். எனது தவறு எனக்கு உறைக்கத்தான் செய்தது. சில தறுகளை நாங்கள் வேண்டுமென்றே செய்வதில்லை தானே. சந்தர்ப்ப சூழ்நிலைகள் எவ்வாறெல்லாம் செயற்பட வைக்கின்றது. அவனிடம் என் கையாலாகாத் தன்மையை ஒத்துக் கொள்ளவும் பாழாய்ப்போன தன்மானம் இடங்கொடுக்கமாட்டேன்கிறதே.

அடுத்து வந்த பஸ் ஒன்று தரித்து நின்றது. பாய்ந்துபோய் ஏறினேன். படியை விட்டு மேலேற முடியவில்லை. "இறங்கி விடு இறங்கி விடு" என்று நண்பன் அலறுவது கேட்டது. " இல்லை பரவாயில்லை. சமாளித்து விடுவேன் " என்று அவனுக்குக் கூறிக்கொண்டே உள் நுழைய முயற்சித்தேன். அவனிடம் இருந்து தப்பிக் கொள்வதற்கும் என் தன்மானத்தைக் காப்பாற்றிக் கொள்வதற்கும் இதை விட்டால் வேறு வழி எனக்குத் தெரியவில்லை.உள்ளே நுழைய முடிந்தால் தானே. உள்ளிருந்து வெளித்தள்ளிய நெருக்குவாரத்தைச் சமாளிப்பதே பெரும் பாடாக இருந்தது. பணக் கட்டை நெஞ்சுடன் சேர்த்து அணைத்துக் கொண்டேன். எனக்கும் கீழே நின்றவன் குரல் கொடுத்தான். " சார் பயப்படாதே நான் உன்னை விழாமப் பிடிச்சிக்கிரேன் " பான் பராக் போட்டிருந்தான் போலும். எச்சில் பறக்கப் பேசினான். அப்பொழுது தான் அவனை நன்கு கவனித்தேன். தலை கலைந்து பறக்க நாலு நாள் சவரம் செய்யாத தாடி மீசையுடன் ரவுடியைப் போல தோன்றினான். என்னையே குறி வைத்து வந்திருப்பானோ?
மயிர்க்கால்களெல்லாம் சில்லிட்டுப் போய் விட்டன. அவனைப் பார்க்கும் போதெல்லாம் ஜாலியாகச் சிரித்தான். சிரிப்புக்குள் ஏதோ புதைந்திருப்பது போல என்னை இன்னும் இன்னும் பயங்கூட்டியது. அவனின் பார்வையைத் தவிர்க்கும் நோக்கில் உடலைத் திருப்ப முயற்சித்தேன். எனக்கும் மேலே பெருத்த உடலுடன் ஒருவன் முழுப் பாதையையும் அடைத்தவண்ணம் நின்றிருந்தான். அவன் மட்டும் உள்ளே சென்று விட்டால் பெரிய இடம் கிடைக்கக் கூடும். அந்த இடைவெளியில் நானும் ஊள்ளே சென்று விடக் கூடும். அவனை உள்ளிற்குத் தள்ளும் முயற்சியில் முதுகால் நெம்பித்தள்ளினேன். அந்த பெருத்த உடல் அசைந்தால் தானே. எனக்கு மூச்சுத்தான் வாங்கியது.

அந்தவேளையில் தான் அந்த எதிர்பாராத சம்பவம் நிகழ்ந்தது. பெருத்த உடல் காரன் தன் இடக்கையினை விசுக்கென பின்னால் விசுறினான். சரியாய் குறிவைத்ததுபோல என் பணக்கட்டில் வந்து மோதியது. என் கையின் இறுக்கத்தை மீறி பணக் கட்டு எகிறிப் பறந்தது. பாய்ந்து அதனைப் பற்றிப் பிடிக்க முயன்ற போது பின்னங்கையில் பட்டு வாசலை நோக்கிப் பறந்தது. வாசலில் நின்ற தாடிக் காரன் அதனைப் பாய்ந்து பிடிக்க முயற்சிக்க அது மீண்டும் தட்டுப் பட்டு என் கைகளுக்குள்ளேயே வந்து விழுந்தது.
அதே நேரத்தில் கைகளின் பிடிப்பை விட்டிருந்த தாடிக்காரனின் கால்கள் பலன்ஸை நழுவ விட காற்றில் அலைந்து வேகமாக அடுத்த லேனில் வந்த காரில் மோதி இரத்தம் கக்கி சக்கரத்துள் நசிபட்டு வீதியின் ஓரத்தில் இரத்தச் சகதியாக 'அது' போய் விழுந்தது.

பஸ்ஸினுள் எழுந்த அலறலும் அதனைத் தொடர்ந்து கிரீச்சிட்டு நின்ற வாகனங்களும் ,நின்ற பஸ்ஸினின்றும் குபுகுபுவென இறங்கி ஓடியவர்கள் என்னையும் வீதியோரத்தில் தள்ளிவிட பணம் காப்பாற்றப் பட்ட நிம்மதியுடன் நடந்து கொண்டிருந்தேன்.

என்னை நானே

அச்சு இயந்திரத்தின் அழுத்தத்தில்
நச்சு மையின் வாசனையில்
என்னை நானே பார்க்கையில்
எண்ணம் தொலைத்து நிற்கின்றேன்

கருப்பையில் கவி உணர்ந்தவன்
கனவினில் தினவு சேர்த்தவனோ - இல்லை
கழனியில் ஏர் உழுதவன்
களைப்பினில் மலர்ந்து கொண்டவனோ

வாழ்க்கையில் இடறி விழுந்தவன்
வார்த்தையில் வடிவம் எடுத்தவனோ -இல்லை
தலையினில் சுடர் சூட்டியவன்
எச்சியினில் உமிழ்ந்து வழிந்தவனோ

பிய்த்துப் போட்ட யோனியில்
பிறந்த உதிரத் துளிகளோ - இல்லை
குதறிப் பறித்த வாழ்க்கையின்
குவிந்து போன துயரமோ

வார்த்தை நல் ஜாலங்களில்
வந்துதித்த குறைப் பிறப்போ -இல்லை
தத்துவத்துக்கு தலை கொடுத்தவன்
தயவில் வந்து தொலைத்தவனோ

யாரோ ஆயினும்,

என்னைப் படிக்கையில் உன்
எண்ணம் பொங்கி எழுவதுவும்
இறுக்கி மூடுகையில் உந்தன்
இமைகள் நனைந்து வழிவதுவும்

என்னை நானே கவிதை
என்றே சொல்லப் பெருமிதமே.

Wednesday, February 22, 2006

ஒரு வாழ்க்கைக்கான பயணம்

அவர்கள் போகிறார்கள்
தட்டு முட்டுச் சாமான்கள்
தட்டிப்போட நாலைந்து பாய்
தலை வால் மடிநிரப்பி சைக்கிள்
கோயில் தேர்போல் நிரம்பி வழிய
மெலிந்தகாலும் கையும் தாங்கிப்பிடிக்க
ஓர்மம் தள்ளிக் கொண்டுபோக
தலையில் கக்கத்தில் கடகமும்
இடுப்பில் இறங்குப்பெட்டியும்
தலைச்சனிலும் அடுத்ததிலும்
அஞ்சாறு துணிப்பைகளுடனும்
ஊர் கூடித் தேரிழுப்ப்பதுபோல
உருளும் சைக்கிளுடன் ஊர்ந்து
நடையாயும் நடைப்பிணமுமாய்
முந்தியடிச்சு முள்ளில் விழுந்து
ஒரே திசையில் ஓடும் ஆறுபோல
அலறிக் கொண்டும் சிதறிக் கொண்டும்
வடக்கில் பல்லி சொல்லாமல்
வாசலில் காகம் கத்தாமல்
வால் நட்சத்திரமும் வழி சொல்லாமல்
வாழ்வதற்கு வழியும் இல்லாமல்
சன்னங்கள் வராத தூரத்துக்கு
நினைவுக்கும் நிலமைக்கும் இடையிலான
நம்பிக்கையைப் பிடித்துக்கொண்டு
ஒரு வாழ்க்கைக்கான பயணத்தில்
அவர்கள் போகிறார்கள் ..........

வன் செய் மனது

கார் கால மழை மேகத்தின் இறுக்கத்துடன் மனது எண்ணங்களால் கூடு கட்டி கனத்துப் போய் இருக்கின்றது. பின் பனிக்காலத்தின் இளகிய குளிர் ஜன்னலால் ஊடுருவும் முயற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தது. ஹீற்றரை சரிப்படுத்திக் கொண்டான். மனதின் தகிப்பையும் இவ்வாறு சரிப்பண்ணிக் கொள்ள முடிந்தால் இன்னும் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. அதற்கான மார்க்கங்கள் கண்டு கொள்ளப்படும் வரை இவ்வாறு மன உளைச்சலில் மறுகிக் கொண்டிருப்பது தவிர்க்க முடியாதது தான். இல்லை என்றால் வாழ்க்கை இவ்வாறு கனம் கூட்டிப் பயங்காட்டிக் கொண்டிருக்குமா ?

முப்பத்து மூன்று வயதிற்கு இன்னும் ஒரு தெளிவும் இல்லாக் குழப்பத்தில் வாழ்க்கை கண்ணாமூச்சி ஆட்டம் காட்டிக் கொண்டிருந்தது. வீட்டிலிருந்து கடிதம் வந்திருந்தது. எத்தனை தீர்மானித்துத் திட்டம் போட்டு காய் நகர்த்தினாலும் யாரோ பின்னிருந்து கால் இழுத்து விளையாடுவதாகவே பட்டது. இல்லையெனில் இவ்வாறெல்லாம் நடக்குமா என்ன? எவ்வளவு சிரமத்துடன் கடன் பட்டு வாழ்க்கையின் ஒன்றிரண்டு வருடத்தை இதற்காக ஒதுக்கி அந்தப் பணத்தை அனுப்பியிருந்தான். தம்பியும் வந்து விட்டால் உனக்கும் உதவியாய் இருக்கும் என்ற அம்மாவின் வார்த்தகளிலும் இருந்த
நியாயம் கடன் படும் எண்ணத்தை உருவாக்கி விட்டிருந்தது. தம்பிக்கு முன்னால் வளர்ந்து ஆளாகிவிட்ட இரண்டு தங்கைகள் வேறு பயமுறுத்திக் கொண்டிருந்தார்கள்.

யுத்தமும் யுத்தத்தினால் விளைந்த இடப்பெயர்வுகளும் அதுகாட்டிய கோரமும் எத்தனை பேரைத் துவைத்துப் போட்டிருந்தது. வாழ்க்கை என்பது என்னவென்றே அறியாப் பருவத்தில் எங்கெங்கோ தூக்கியெறிந்து என்னவென்றே அறியா சுமைகளையெல்லாம் தோள்களில் சுமத்திவிட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது. எல்லோருக்கும் வாய்த்த துயரம் என்பதற்கப்பால் மனங்களை வளரவிடாது துன்பத்திலும் துயரத்திலும் தனிமையிலும் வாடவிட்டு வாழ்க்கையையே காயப் போட்டுக் கொண்டிருந்தது. அரச பயங்கரவாதமும் ஒரு இனத்தின் துயரமும் மனிதர்களைத் தனிமையில் கூறிட்டு வாழ்க்கை பற்றிய பயத்தை ஊட்டிக்கொண்டிருந்தது. அங்கு வாழ நேர்ந்து விட்ட கொடுமையினால் இதை விட வேறுவழியில்லாத தன்மையினால் இவ்வாறே பற்றிக் கொள்வதும் பற்றிக் கொள்வதை விடாது பிடித்துக் கொள்வதும் இயல்பாய் போய்விட்டிருந்தது.

இவ்வாறான நெருக்கடிகள் ஏற்படுத்தும் தனி மனித நெருக்குவாரங்கள் பற்றியும் வாழ்க்கைக் கட்டுமானத்தில் ஏற்படுத்தக் கூடிய சிதைவுகள் பற்றியும் யாரும் கருத்தில் கொள்ளவில்லை என்பது தான் சோகம்.
தம்பியும் எங்கெங்கோ சுத்தி விட்டு வீட்டிற்கே திரும்பி விட்டிருந்தான். அம்மாவும் சாதாரணமாகவே அதை எழுதியிருந்தாள். 'என்ன செய்வது எங்களின்ர கஷ்ட காலம்' என்பதுடன் அதற்கொரு முற்றுப் புள்ளி வைத்திருந்தாள். தன் வாழ்க்கையின் ஒரிரு வருடத்தை அள்ளிக் கொண்ட அந்தக் கஷ்ட காலம் இத்துடன் முடிந்து விடப்போவதில்லை என்பது மட்டும் அவனுக்குத் தெளிவாக விளங்கியது. ஒரு இனத்துக்கான போராட்டத்தின் விலை ஒவ்வொரு தனிமனிதர்களிடமும் கொள்வனவு செய்யும் விலை அதிகமென்றே அவனுக்குத் தோன்றியது. இல்லையென்றால் இப்படி. பலரின் வாழ்க்கையை அல்லவா விலை கொள்கின்றது.

பல நாட்களின் முன்னர் நடந்த தர்க்கமும் அவன் ஞாபத்தில் வந்தது. அவனைப் போலவே பெயர்ந்து வந்து அவனுடன் தங்கியிருக்கும் வசந்தனின் கதைகளை அவனால் ஜீரணிக்கவே முடியவில்லை. வாழ்க்கை பற்றிய எண்ணங்கள் எவ்விதமெல்லாம் மாறு பாடடையக் கூடியது என்பதை அவன் அன்று கண்டான். தன்னால் நினைத்தும் பார்க்க முடியாத கோணங்களில் எல்லாம் வசந்தன் சிந்தித்துப் பார்ப்பதை அவன் உணர்ந்தான். வாழ்க்கை என்பது அவர் அவர் கொண்டிருக்கும் எண்ணங்களால் மட்டுமே தீர்மானிக்கப் படுவது என்பதில் சிறு விட்டுக் கொடுப்பும் இல்லாது அவன் விவாதித்தான். சமூகப் பரிமாணம் மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்பது பற்றிய எண்ணங்களையெல்லாம் மறுதலித்து விட்டிருந்தான். சமூக எண்ணமென்பது தனி மனிதர்களின் எண்னம் என்பதை நிறுவுவதிலேயே அவன் குறியாக இருந்தான். அவனுக்கும் தன்னைப் போலவே குடும்பம் இருப்பதையும் அவனைச் சார்ந்திருப்பதையும் இவன் அறிவான். அதற்காக தன் தனிப்பட்ட வாழ்க்கையைத் தியாகம் செய்துவிட வேண்டுமென்பது போலித் தனமானது என்றே வாதிட்டான். அப்படி ஒரு சந்தர்ப்பம் கிடைத்தால் தான் அதை நடைமுறைப் படுத்துவதிலும் தயங்கங் காட்டப் போவதில்லை என்று உறுதி படவே கூறியிருந்தான். ஆனாலும் வசந்தன் அப்படிச் செய்வான் என்று இவன் முழுமையாக நம்பவில்லை. ஒரு விவாதத்திற்காக பேசுவதாகவே இவனுக்குப் பட்டது.

வசந்தனின் சில கதைகளையும் அரசல் புரசலாக அறிந்தே வைத்திருந்தான். ஒரு மொரோக்கோப் பிள்ளையுடன் பழகுவதாகவும் அவன் அறிந்து வைத்திருந்தான். தனிமையில் இருக்கும் இளவயதுப் பிள்ளைகளின் சாதாரண நடை முறை என்றே அதனை அலட்சியம் செய்து விட்டிருந்தான். புலம் பெயர்ந்த தேசங்களில் இவ்வாறு சில சமூகக் கட்டுகள் கட்டுடைத்துப் போய்விட்டிருப்பதையும் பல சந்தர்ப்பங்களில் அவதானித்திருந்தான். சில துணிச்சல் காரர்கள் சேர்ந்து வாழ்வது வரை முன்னேறிவிட்டிருப்பார்கள். தூரமும் தனிமையும் அவர்களைத் தூண்டி விடுவதாகவே இவன் முடிவு கண்டிருந்தான். தூக்கமுடியாச் சுமைகளின் அழுத்துதலில் தமக்கென ஒரு வாழ்வு பற்றிய சிந்தனைகள் இன்றி இருப்பவர்கள் இவ்வாறான தற்காலிக வடிகால்களைத் தேடுவதை எவ்வகையில் நியாயப் படுத்துவது என்பதை அறியாதிருந்தான்.ஒரு கட்டுப் பெட்டிச் சமூகத்தின் நாற்றங்கால்களில் இருந்து இவ்வாறான புரட்சிகரச்சிந்தனைகள் வெளிவருவதே பாபமாக நோக்கப் படுவதையும் அவன் அறிவான். மேற்கில் புடுங்கி நடப்பட்டாலும் கிழக்கின் கூட்டுப் புழு மனப் பான்மையிலிருந்து விடுபடுவது சாத்தியமே அற்றது என்பதை இவன் முழுவதுமாக நம்பினான். அவ்வாறு இருப்பது மேலான தியாகம் என்பதாகக் கிலாகிக்கப் படுவதயும் அந்தச்சூட்டில் குளிர் காய்வதை விட்டு விடாத ஒரு போலித் தனத்தைப் போர்த்துக் கொள்வதையும் இவன் விரும்பினான். அதுவே இவனிடம் இருந்து எதிர்பார்க்கப் படுவதையும் இவன் புரிந்து கொண்டான்.

'இன்னாரின் பிள்ளை வெளிநாடு போயும் ஒரு கெட்ட பழக்கமில்லை. சொக்கத்தங்கம் . எவ்வளவு பொறுப்பு ' என்று கிலாகிக்கப்படுவதையும் அதனாலேயே கொண்டு
சேர்க்கப்படக் கூடிய கொழுத்த சீதனத்தையும் கனவு காண்கிறீர்கள்' என்றும் வசந்தனால் நேரடியாகவே தயவு தாட்சண்யமற்று குற்றம் சாட்டப்பட்ட போது உண்மையிலேயே இவன் மனம் புண்பட்டுத்தான் போனது.

குடும்பம் பற்றிய அக்கறை உண்மையான பாசம் எப்படி இவர்களால் கொச்சைப்படுத்தப் படுகின்றது என்பதை இவனால் ஜீரணிக்க முடியாமலேயே இருந்தது. உங்கள் உணர்ச்சிகளைக் காயப் போடுவது தான் தியாகமா? என்ற அவன் கேள்விக்கு மட்டும் இவனால் பதில் காணவே முடியவில்லை.

வசந்தன் இன்றில்லா விட்டாலும் என்றோ ஒரு நாள் அந்த மொரக்கோப் பெண்ணுடன் வாழப் போயே போய் விடுவான் என்று இப்போது தோன்றியது. அவ்வாறு நடப்பதும் நல்லது தான் என்றவாறே நினைக்க விரும்பாக் கணத்திலும் ஏன் தோன்றிக் கொண்டிருக்கின்றது. விடை காண முடியாத கேள்விகள் தான் வாழ்க்கையில் எத்தனையெத்தனை. அவற்றில் இதுவும் ஒன்றுபோலும்.