Friday, February 24, 2006

எனது குழந்தை

பயணம் மிகவும் நீண்டு கொண்டிருந்தது. வாழ்க்கைப் பயணம் போலும் குழப்பம் மிகுந்ததாய் இல்லாவிட்டாலும் முதலும் முடிவும் அறிந்து வைக்கப்பட்டிருக்கக் கூடியதாயிருந்தாலும் ஒவ்வொரு பயணத்தின் இடையிலும் இவ்வாறு தான் உணரப் படுகின்றது. முடிந்து போகவேண்டுமென்ற ஆசையும் முடியப் போகின்றதே என்ற துக்கமும் முடிய வேண்டாமோவென்ற அங்கலாய்ப்பும் மிக்கதாகத் தான் இருக்கின்றது. பயணித்துக் கொண்டிருக்கின்ற ஒவ்வொருவரும் பயணத்தைப் பற்றி நினைப்பது இயல்புதான். பயணத்தைப் பற்றி மட்டுந்தானா ? ஓய்ந்திருக்கும் வேளையும் ஓய்ந்திருப்பதனால் கிடைக்கும் நேரமும் எத்தனையோ விடயங்களை நினைத்துப் பார்க்கத் தூண்டுகின்றது. நடந்தது நடக்கப் போவது அல்லது நடக்க வேண்டியது அல்லது நடக்கக் கூடியது என்று மனது எதையெல்லாம் எண்ணிக் கொள்கின்றதோ அதையெல்லாம் நினைத்துப் பார்க்கின்றது. சமயத்தில் வாழ்க்கையின் சரி பிழைகளைச் சலித்துப் பார்த்து சோர்வும் கொள்கின்றது. எத்தனைதான் முயன்றாலும் வாழ்க்கைக்கு தன் போக்கில் போவதில் ஆனந்தம் மிகுதியாயிருக்கின்றது. இல்லாவிட்டால் எண்ணங்களையும் ஆசைகளையும் மீறிய ஒரு திசையில் வாழ்க்கை நகர்ந்து போவதை பார்த்துக் கொண்டிருக்க வேண்டியிருக்கிறதே. வாழ்க்கை அப்படித்தான் நிகழ்ந்திருக்கின்றது. சொந்த வாழ்க்கையென்றாலும் ஒரு பார்வையாளனாக சும்மா நின்று பார்த்துக் கொள்ளும் படிக்கே வாழ்க்கை அமைந்து விடுகின்றது. கவலைகளை மட்டும் சுமந்து கொண்டு வாழத் தெரியாமல் அவதிப் படுவதை என்னவென்று சொல்லமுடியும்.

எனக்கு குழந்தை பிறந்து இரண்டு நாளாகின்றது. இன்னும் குழந்தையைப் பார்க்க முடியாத படிக்கு வாழ்க்கை என்னைத் தள்ளி வைத்திருக்கின்றது. திட்டமிட்டதற்கும் முன்னால் குழந்தை எதனால் பிறந்தது. இதற்கெல்லாம் யாரும் காரணம் சொல்லமுடியுமா? வாழ்க்கை பற்றி அறிந்து கொண்டதற்கும் அப்பால் வாழ்க்கை ஒரு மர்மத்துடன் நகர்ந்து கொண்டிருக்கின்றது. அறிந்து கொள்ளமுடியாத மர்மங்களின் கூட்டாகத் தான் அது இருந்து கொண்டிருக்கின்றது. எளிய அளவு கோல்களுடன் கூட இணைந்து வர முடியாதபடிக்கு அதன் ஓட்டம் நிலையில்லாது மாறிக்கொண்டிருக்கின்றது.

வாழ்க்கையை எளிமைப்படுத்தக் கூடிய எனது முயற்சிகளும் சதா வாழ்க்கையைக் குழப்பி வாழ்க்கையை மேலும் சிக்கலாக்கிக் கொள்ளும் எனது மனைவியையும் சந்திக்க வைத்ததே அதன் நிலையில்லாமைக்குச் சான்றாக இருக்கின்றதே. எதையும் செய் நேர்த்தியுடன் செய்ய வேண்டுமென்ற எனது செயல்களுக்கும் மறதிக்கும் அரைகுறை அவசர வேலைக்கும் பேர்போன அவள் செயல்களுக்கும் சம்பந்தப்படுத்திப் பார்க்கின்றதே. நேர விரயமென்பது மிகவும் கோபத்துக்குரியதாக சுட்டெரிக்க வைக்கும் என்னையும் எதையும் வைத்துவிட்டு வைத்த இடத்தை மறந்து விட்டு வீடு முழுதும் தேடும் அவளையும் வாழ்க்கையில் இணைத்து வைத்திருக்கின்றதே.

ஒழுங்கும் செய்நேர்த்தியும் பழக்கத்தினால் வருவதென்பது எனது அசைக்கமுடியா நம்பிக்கையாகும். அப்படி எதுவும் கிடையாதென்பது அவளின் கொள்கை. ஆயிரம் முறை மீட்டி மீட்டிச் சொன்னாலும் அதை கடைப் பிடிக்க முடியாதவொரு மெத்தனம் அவள் செயல்களில் காணப்படும். சீறிச் சினக்கையில் மறதியைக் காரணம் காட்டி தப்பிக் கொள்ள முயற்சி செய்கையில் கோபம் பூதாகரமாக வியாபித்து எழும். எனக்குண்டான உயர் இரத்த அழுத்தத்திற்கும் நெஞ்செரிவிற்கும் இவளும் இவள் செய்கைகளுமே காரணம் என்று நம்பிக்கை தோன்றி வெகுகாலமாய் விட்டிருந்தது. எப்படிச் சொல்லிக்கொடுத்தாலும் அப்படியே திருப்பிச் செய்ய முடியா தத்தை குணம் இவள் மேல் இருக்கும் கோபத்தை இவள் தகப்பன் மேல் திருப்பி விட்டிருந்தது. தாயில்லாப் பிள்ளையென்று செல்லம் கொடுத்து இவளைச் சீரழித்திருந்தாரென்பது எனது குற்றச் சாட்டு. தாய் இருந்திருந்தால் ஒரு வேளை இவள் வேறு பட்டவளாக என்னைப் போல குணங்கொண்டவளாக வளர்ந்திருக்க கூடுமோ என்றும் அடிக்கடி தோன்றிக் கொண்டிருக்கும். தாய்மை இன்னும் கூடுதலாக அவளை நெருங்கிப் புடம் போட்டிருக்கக் கூடும்.

ஒரு நெருக்கடி மிகுந்த காலமாக வாழ்க்கை நகர்ந்து கொண்டிருந்தது. நம்பி வந்தவளைக் கை விடும் துணிச்சலும் இன்றி வாழ்க்கையிலும் இணைந்து போக முடியா சங்கடத்துடனும் இதோ ஒரு வருடத்தின் முடிவில் எனக்கொரு குழந்தை பிறந்திருக்கின்றது. யாரிலும் நம்பிக்கையில்லாமல் நானே எல்லாக் காரியங்களையும் கவனித்திருந்தேன். பிரசவ தேதிக்கிடையில் வந்த அவசர அலுவலக வேலை காரணமாக பட்டினத்திற்குப் போயிருந்த போது குழந்தை பிறந்து விட்டிருந்தது.
எதிர்பார்த்திருந்த தேதிக்கும் முன்னதாகவே இது நிகழ்ந்து விட்டிருந்தது.

என் இரத்தத்தைப் பார்க்கும் துடிப்புடன் வீட்டினுள் நுழைந்தேன். மனைவியின் தந்தை தான் கதவினைத் திறந்து விட்டிருந்தார். அவரின் பணிவும் என்னைக் கண்ட போது ஏற்பட்டகுதூகலமும் என்னுள் மகிழ்வினை ஏற்படுத்துவதற்குப் பதிலாக எரிச்சலையே ஏற்படுத்தியது. நானில்லாத வேளைகளில் என்ன குழறுபடிகளை ஏற்படுத்தி வைத்திருப்பார்களோ என்ற கவலையே நெஞ்சை நெருடியது. புத்தியில்லாத பெண்ணும் விவேகமில்லாத தந்தையும் என்ற எனது கணிப்பு அவ்வளவு உறுதியுடன் இருந்தது. குழந்தையும் தாயும் நலமுடன் இருந்தது சிறிது ஆறுதல்ப் படுத்தியது. மனதில் ஆசுவாசத்தை ஏற்படுத்தியது. அவ்வளவு அவசரமாக வீட்டிற்கு வர வேண்டிய தேவை என்னவென்று யோசிக்க வைத்தது. எல்லாம் மகிழ்வுடன் நடந்தேறியதில் மகிழ்ச்சி என்னையும் தொற்றிக் கொண்டது. குழந்தையை அள்ளி அணைத்துக் கொண்டேன். பெண் குழந்தை. மகாலட்சுமி. வீட்டிற்கு முதல் குழந்தை பெண் குழந்தையாயிருப்பது விசேஷம் என்பார்கள். என் விருப்பமும் அவ்வாறே இருந்தது. வாழ்க்கை அவ்வாறே தந்து கண்ணாமூச்சி ஆட்டத்தை இங்கே தவிர்த்திருந்தது. சலனம் கேட்டு என் மனைவி எழுந்து கொண்டாள். அவள் புன்னகைக்க முயற்சி செய்தாள். முடியாமல் மிகவும் களைத்திருந்தாள். ஜன்னலால் அவள் தந்தை தவிப்புடன் எங்களையே பார்ப்பதை உணரமுடிந்தது. குழந்தை நெஞ்சில் எட்டி உதைத்தது. அந்தத் தவிப்பு என்னிடமும் தொற்றிக் கொள்வதை உணர்ந்தேன். மனைவியின் நெற்றியை வாஞ்சையுடன் தடவி விட்டேன். அவள் என் கரங்களைப் பற்றிக் கொண்டாள்.

யதார்த்தம்

இவ்வளவு பணத்தையும் கொண்டு போவது பற்றி என்னைப் போலவே அவருக்கும் பிரச்சனை இருந்தது. ஒரு ஆட்டோவைப் பிடித்துப் போகும் படிக்கு எனக்கு ஆலோசனை வழங்கினார். ஆட்டோவைப் பிடிப்பது என்றாலும் அதற்காகும் பணத்திற்கும் இந்தப் பணத்திலிருந்து தான் எடுத்துக் கொள்ள வேண்டுமென்ற சங்கடம் எனக்கு மட்டுமே தெரிந்திருந்தது. அதை நண்பருக்குச் சொல்லும் அசந்தர்ப்பத்தைத் தவிர்த்துக் கொள்ளவே விரும்பினேன். அதனாலேயே பஸ்ஸில் போவதை அசெளகர்யக் குறையாயில்லை என்பதை அழுத்திச் சொன்னேன். பணம் ஏற்கனவே கட்டப்பட்டு பத்திரிகைக்கட்டொன்றை எடுத்துச் செல்வது போல ஒழுங்கு படுத்தியிருந்தேன். பார்க்கும் யாருக்கும் சந்தேகம் வராதிருக்கவே இந்த ஏற்பாடு. ஆனாலும் இவ்வளவு பெருந்தொகைப் பணத்தையும் இவ்வாறு அஜாக்கிரதையாக எடுத்துச் செல்வதாகவே நண்பர் நம்பினார். கூடுதல் பாதுகாப்பு அதிக கவனத்தை ஏற்படுத்தும் என்றும் அதனால் வேண்டாதவர்களின் பார்வை என் மீது விழுந்து விடக் கூடுமென்றும் நான் நம்பினேன். ஒவ்வொருவரின் பார்வையும் எண்ணங்களும் வேறுபட்டிருப்பது தானே இங்கு இயல்பாயிருக்கின்றது. ஆட்டோவில் போகலாமென்ற அவரின் புத்திமதி எனக்கும் உவப்பாய்த்தானிருந்தது. ஆனாலும் என் பாக்கெட்டில் அதற்கான கனமில்லை என்று எப்படி சொல்லிக் கொள்வது. அவரிடம் கேட்டால் இன்னுமொரு இருபது ரூபாய்களைத் தர மறுப்பேதும் சொல்லிவிட மாட்டாரென்பதும் எனக்குத் தெரியும். அந்த இருபது ரூபாய்களுக்காக என்னுடைய சுய மரியாதையை விட்டுக் கொடுப்பதில் எனக்கு உடன்பாடில்லை. ஏற்கனவே எனது நட்புக்காக இத்தனை உதவி செய்திருக்கும் அவரை மேலும் தர்மசங்கடப் படுத்தக் கூடாதென்ற நல்லெண்ணமும் என்று வைத்துக் கொள்ளுங்களேன்.

மகளின் திருமணம் இனி நல்லபடியாக நடந்து விடும் என்ற நம்பிக்கை எனக்கு ஏற்பட்டிருந்தது. இது பேசிச் செய்யும் திருமணமில்லை. எனது மகளும் மாப்பிள்ளையும் ஒரே இடத்தில் வேலை செய்பவர்கள். ஒருவரில் ஒருவர் மனம் விரும்பி விட்டிருந்தார்கள். அவர்களாகவே பெண் கேட்டு வந்தபோது எங்கள் எல்லோருக்கும் மகிழ்ச்சியாகவே இருந்தது. அவர்களை பற்றிய உயரிய விம்பமும் தோன்றியிருந்தது. மகளுக்கும் ஒரு நல்ல வாழ்க்கை அமைந்ததென்றும் ஆனந்தப் பட்டுக்கொண்டோம். ஆனாலும் அந்த மகிழ்ச்சிக்கும் ஒரு விலை உண்டென அவர்களுடன் பேசியபோது உணரமுடிந்தது. என்னதான் மனம் விரும்பியிருந்தாலும், பெரியவர்களுக்கும் சம்மதமென்றிருந்தாலும் சிலசில சம்பிரதாயங்களை விட்டுக்கொடுக்க முடியாதென்று தெரிவித்து விட்டார்கள். மூத்த மகளின் திருமணம். வீட்டில் எல்லோருக்கும் பிடித்திருந்தது. ஆனாலும் அவர்களின் எதிர்பார்ப்பு எங்கள் வசதிக்கும் மேலால் இருந்தது தான் கவலைப் படுத்தியது. இதற்கு மேல் அவர்களால் இறங்கி வரமுடியாதென்பது அவர்களிடம் பேசிப்பார்த்ததில் புரிந்தது. நல்ல சம்பந்தம். ஆனாலும் பெண்ணைப் பெத்தவர்களின் அவஸ்தைகளைப் புரிந்து கொள்ள முடியாதவர்களை என்ன செய்வது. பெண்ணின் கவலையையும் பெற்றவளின் வருத்தத்தையும் கண்கொண்டு பார்க்கச் சகிக்கவில்லை. மூத்தவள் வழிவிடக் காத்திருக்கும் இளையவள். வாழ்க்கை அதன் கடின முகத்தைக் காட்டத் துணிந்துவிட்டது என்பதை உணர்ந்து கொண்டேன். எதற்கும் ஒரு தீர்வு இருக்கும் என்பதை நம்பினாலும் அதை எப்படிக்கண்டு பிடிப்பது என்பதுதான் புரியாமலிருந்தது. அந்த நேரத்தில் உதவ வந்த நண்பனிடம் தான் பணத்தை வாங்கிக் கொண்டு புறப்பட்டுக் கொண்டிருந்தேன்.

நண்பனும் பஸ் தரிப்பிடம் வரை கூடவே வந்திருந்தான். அவன் கூட இருந்தது எனக்கும் தெம்பாக இருந்தது. என்னதான் நான் பெரிதாக வீரம் பேசியிருந்தாலும் பணத்தை கையில் எடுத்ததிலிருந்து பயம் பிடித்துக் கொண்டது. இதை ஒழுங்காகக் கொண்டு சேர்த்து விடவேண்டுமேயென்ற கவலை தொற்றிக் கொண்டது. வந்த பஸ்களும் ஜனக்கூட்டத்துடன் பிதுங்கி வழிந்தபடியே வந்தன. வந்தபடியே நிற்காமலே போய்ச் சேர்ந்தன. நண்பனின் தொணதொணப்பும் அதிகரித்துக் கொண்டேயிருந்தது. எனது பிடிவாதம் காரணமற்றது என்று விளாசிக் கொண்டிருந்தான். எனது தவறு எனக்கு உறைக்கத்தான் செய்தது. சில தறுகளை நாங்கள் வேண்டுமென்றே செய்வதில்லை தானே. சந்தர்ப்ப சூழ்நிலைகள் எவ்வாறெல்லாம் செயற்பட வைக்கின்றது. அவனிடம் என் கையாலாகாத் தன்மையை ஒத்துக் கொள்ளவும் பாழாய்ப்போன தன்மானம் இடங்கொடுக்கமாட்டேன்கிறதே.

அடுத்து வந்த பஸ் ஒன்று தரித்து நின்றது. பாய்ந்துபோய் ஏறினேன். படியை விட்டு மேலேற முடியவில்லை. "இறங்கி விடு இறங்கி விடு" என்று நண்பன் அலறுவது கேட்டது. " இல்லை பரவாயில்லை. சமாளித்து விடுவேன் " என்று அவனுக்குக் கூறிக்கொண்டே உள் நுழைய முயற்சித்தேன். அவனிடம் இருந்து தப்பிக் கொள்வதற்கும் என் தன்மானத்தைக் காப்பாற்றிக் கொள்வதற்கும் இதை விட்டால் வேறு வழி எனக்குத் தெரியவில்லை.உள்ளே நுழைய முடிந்தால் தானே. உள்ளிருந்து வெளித்தள்ளிய நெருக்குவாரத்தைச் சமாளிப்பதே பெரும் பாடாக இருந்தது. பணக் கட்டை நெஞ்சுடன் சேர்த்து அணைத்துக் கொண்டேன். எனக்கும் கீழே நின்றவன் குரல் கொடுத்தான். " சார் பயப்படாதே நான் உன்னை விழாமப் பிடிச்சிக்கிரேன் " பான் பராக் போட்டிருந்தான் போலும். எச்சில் பறக்கப் பேசினான். அப்பொழுது தான் அவனை நன்கு கவனித்தேன். தலை கலைந்து பறக்க நாலு நாள் சவரம் செய்யாத தாடி மீசையுடன் ரவுடியைப் போல தோன்றினான். என்னையே குறி வைத்து வந்திருப்பானோ?
மயிர்க்கால்களெல்லாம் சில்லிட்டுப் போய் விட்டன. அவனைப் பார்க்கும் போதெல்லாம் ஜாலியாகச் சிரித்தான். சிரிப்புக்குள் ஏதோ புதைந்திருப்பது போல என்னை இன்னும் இன்னும் பயங்கூட்டியது. அவனின் பார்வையைத் தவிர்க்கும் நோக்கில் உடலைத் திருப்ப முயற்சித்தேன். எனக்கும் மேலே பெருத்த உடலுடன் ஒருவன் முழுப் பாதையையும் அடைத்தவண்ணம் நின்றிருந்தான். அவன் மட்டும் உள்ளே சென்று விட்டால் பெரிய இடம் கிடைக்கக் கூடும். அந்த இடைவெளியில் நானும் ஊள்ளே சென்று விடக் கூடும். அவனை உள்ளிற்குத் தள்ளும் முயற்சியில் முதுகால் நெம்பித்தள்ளினேன். அந்த பெருத்த உடல் அசைந்தால் தானே. எனக்கு மூச்சுத்தான் வாங்கியது.

அந்தவேளையில் தான் அந்த எதிர்பாராத சம்பவம் நிகழ்ந்தது. பெருத்த உடல் காரன் தன் இடக்கையினை விசுக்கென பின்னால் விசுறினான். சரியாய் குறிவைத்ததுபோல என் பணக்கட்டில் வந்து மோதியது. என் கையின் இறுக்கத்தை மீறி பணக் கட்டு எகிறிப் பறந்தது. பாய்ந்து அதனைப் பற்றிப் பிடிக்க முயன்ற போது பின்னங்கையில் பட்டு வாசலை நோக்கிப் பறந்தது. வாசலில் நின்ற தாடிக் காரன் அதனைப் பாய்ந்து பிடிக்க முயற்சிக்க அது மீண்டும் தட்டுப் பட்டு என் கைகளுக்குள்ளேயே வந்து விழுந்தது.
அதே நேரத்தில் கைகளின் பிடிப்பை விட்டிருந்த தாடிக்காரனின் கால்கள் பலன்ஸை நழுவ விட காற்றில் அலைந்து வேகமாக அடுத்த லேனில் வந்த காரில் மோதி இரத்தம் கக்கி சக்கரத்துள் நசிபட்டு வீதியின் ஓரத்தில் இரத்தச் சகதியாக 'அது' போய் விழுந்தது.

பஸ்ஸினுள் எழுந்த அலறலும் அதனைத் தொடர்ந்து கிரீச்சிட்டு நின்ற வாகனங்களும் ,நின்ற பஸ்ஸினின்றும் குபுகுபுவென இறங்கி ஓடியவர்கள் என்னையும் வீதியோரத்தில் தள்ளிவிட பணம் காப்பாற்றப் பட்ட நிம்மதியுடன் நடந்து கொண்டிருந்தேன்.

என்னை நானே

அச்சு இயந்திரத்தின் அழுத்தத்தில்
நச்சு மையின் வாசனையில்
என்னை நானே பார்க்கையில்
எண்ணம் தொலைத்து நிற்கின்றேன்

கருப்பையில் கவி உணர்ந்தவன்
கனவினில் தினவு சேர்த்தவனோ - இல்லை
கழனியில் ஏர் உழுதவன்
களைப்பினில் மலர்ந்து கொண்டவனோ

வாழ்க்கையில் இடறி விழுந்தவன்
வார்த்தையில் வடிவம் எடுத்தவனோ -இல்லை
தலையினில் சுடர் சூட்டியவன்
எச்சியினில் உமிழ்ந்து வழிந்தவனோ

பிய்த்துப் போட்ட யோனியில்
பிறந்த உதிரத் துளிகளோ - இல்லை
குதறிப் பறித்த வாழ்க்கையின்
குவிந்து போன துயரமோ

வார்த்தை நல் ஜாலங்களில்
வந்துதித்த குறைப் பிறப்போ -இல்லை
தத்துவத்துக்கு தலை கொடுத்தவன்
தயவில் வந்து தொலைத்தவனோ

யாரோ ஆயினும்,

என்னைப் படிக்கையில் உன்
எண்ணம் பொங்கி எழுவதுவும்
இறுக்கி மூடுகையில் உந்தன்
இமைகள் நனைந்து வழிவதுவும்

என்னை நானே கவிதை
என்றே சொல்லப் பெருமிதமே.

Wednesday, February 22, 2006

ஒரு வாழ்க்கைக்கான பயணம்

அவர்கள் போகிறார்கள்
தட்டு முட்டுச் சாமான்கள்
தட்டிப்போட நாலைந்து பாய்
தலை வால் மடிநிரப்பி சைக்கிள்
கோயில் தேர்போல் நிரம்பி வழிய
மெலிந்தகாலும் கையும் தாங்கிப்பிடிக்க
ஓர்மம் தள்ளிக் கொண்டுபோக
தலையில் கக்கத்தில் கடகமும்
இடுப்பில் இறங்குப்பெட்டியும்
தலைச்சனிலும் அடுத்ததிலும்
அஞ்சாறு துணிப்பைகளுடனும்
ஊர் கூடித் தேரிழுப்ப்பதுபோல
உருளும் சைக்கிளுடன் ஊர்ந்து
நடையாயும் நடைப்பிணமுமாய்
முந்தியடிச்சு முள்ளில் விழுந்து
ஒரே திசையில் ஓடும் ஆறுபோல
அலறிக் கொண்டும் சிதறிக் கொண்டும்
வடக்கில் பல்லி சொல்லாமல்
வாசலில் காகம் கத்தாமல்
வால் நட்சத்திரமும் வழி சொல்லாமல்
வாழ்வதற்கு வழியும் இல்லாமல்
சன்னங்கள் வராத தூரத்துக்கு
நினைவுக்கும் நிலமைக்கும் இடையிலான
நம்பிக்கையைப் பிடித்துக்கொண்டு
ஒரு வாழ்க்கைக்கான பயணத்தில்
அவர்கள் போகிறார்கள் ..........

வன் செய் மனது

கார் கால மழை மேகத்தின் இறுக்கத்துடன் மனது எண்ணங்களால் கூடு கட்டி கனத்துப் போய் இருக்கின்றது. பின் பனிக்காலத்தின் இளகிய குளிர் ஜன்னலால் ஊடுருவும் முயற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தது. ஹீற்றரை சரிப்படுத்திக் கொண்டான். மனதின் தகிப்பையும் இவ்வாறு சரிப்பண்ணிக் கொள்ள முடிந்தால் இன்னும் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. அதற்கான மார்க்கங்கள் கண்டு கொள்ளப்படும் வரை இவ்வாறு மன உளைச்சலில் மறுகிக் கொண்டிருப்பது தவிர்க்க முடியாதது தான். இல்லை என்றால் வாழ்க்கை இவ்வாறு கனம் கூட்டிப் பயங்காட்டிக் கொண்டிருக்குமா ?

முப்பத்து மூன்று வயதிற்கு இன்னும் ஒரு தெளிவும் இல்லாக் குழப்பத்தில் வாழ்க்கை கண்ணாமூச்சி ஆட்டம் காட்டிக் கொண்டிருந்தது. வீட்டிலிருந்து கடிதம் வந்திருந்தது. எத்தனை தீர்மானித்துத் திட்டம் போட்டு காய் நகர்த்தினாலும் யாரோ பின்னிருந்து கால் இழுத்து விளையாடுவதாகவே பட்டது. இல்லையெனில் இவ்வாறெல்லாம் நடக்குமா என்ன? எவ்வளவு சிரமத்துடன் கடன் பட்டு வாழ்க்கையின் ஒன்றிரண்டு வருடத்தை இதற்காக ஒதுக்கி அந்தப் பணத்தை அனுப்பியிருந்தான். தம்பியும் வந்து விட்டால் உனக்கும் உதவியாய் இருக்கும் என்ற அம்மாவின் வார்த்தகளிலும் இருந்த
நியாயம் கடன் படும் எண்ணத்தை உருவாக்கி விட்டிருந்தது. தம்பிக்கு முன்னால் வளர்ந்து ஆளாகிவிட்ட இரண்டு தங்கைகள் வேறு பயமுறுத்திக் கொண்டிருந்தார்கள்.

யுத்தமும் யுத்தத்தினால் விளைந்த இடப்பெயர்வுகளும் அதுகாட்டிய கோரமும் எத்தனை பேரைத் துவைத்துப் போட்டிருந்தது. வாழ்க்கை என்பது என்னவென்றே அறியாப் பருவத்தில் எங்கெங்கோ தூக்கியெறிந்து என்னவென்றே அறியா சுமைகளையெல்லாம் தோள்களில் சுமத்திவிட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது. எல்லோருக்கும் வாய்த்த துயரம் என்பதற்கப்பால் மனங்களை வளரவிடாது துன்பத்திலும் துயரத்திலும் தனிமையிலும் வாடவிட்டு வாழ்க்கையையே காயப் போட்டுக் கொண்டிருந்தது. அரச பயங்கரவாதமும் ஒரு இனத்தின் துயரமும் மனிதர்களைத் தனிமையில் கூறிட்டு வாழ்க்கை பற்றிய பயத்தை ஊட்டிக்கொண்டிருந்தது. அங்கு வாழ நேர்ந்து விட்ட கொடுமையினால் இதை விட வேறுவழியில்லாத தன்மையினால் இவ்வாறே பற்றிக் கொள்வதும் பற்றிக் கொள்வதை விடாது பிடித்துக் கொள்வதும் இயல்பாய் போய்விட்டிருந்தது.

இவ்வாறான நெருக்கடிகள் ஏற்படுத்தும் தனி மனித நெருக்குவாரங்கள் பற்றியும் வாழ்க்கைக் கட்டுமானத்தில் ஏற்படுத்தக் கூடிய சிதைவுகள் பற்றியும் யாரும் கருத்தில் கொள்ளவில்லை என்பது தான் சோகம்.
தம்பியும் எங்கெங்கோ சுத்தி விட்டு வீட்டிற்கே திரும்பி விட்டிருந்தான். அம்மாவும் சாதாரணமாகவே அதை எழுதியிருந்தாள். 'என்ன செய்வது எங்களின்ர கஷ்ட காலம்' என்பதுடன் அதற்கொரு முற்றுப் புள்ளி வைத்திருந்தாள். தன் வாழ்க்கையின் ஒரிரு வருடத்தை அள்ளிக் கொண்ட அந்தக் கஷ்ட காலம் இத்துடன் முடிந்து விடப்போவதில்லை என்பது மட்டும் அவனுக்குத் தெளிவாக விளங்கியது. ஒரு இனத்துக்கான போராட்டத்தின் விலை ஒவ்வொரு தனிமனிதர்களிடமும் கொள்வனவு செய்யும் விலை அதிகமென்றே அவனுக்குத் தோன்றியது. இல்லையென்றால் இப்படி. பலரின் வாழ்க்கையை அல்லவா விலை கொள்கின்றது.

பல நாட்களின் முன்னர் நடந்த தர்க்கமும் அவன் ஞாபத்தில் வந்தது. அவனைப் போலவே பெயர்ந்து வந்து அவனுடன் தங்கியிருக்கும் வசந்தனின் கதைகளை அவனால் ஜீரணிக்கவே முடியவில்லை. வாழ்க்கை பற்றிய எண்ணங்கள் எவ்விதமெல்லாம் மாறு பாடடையக் கூடியது என்பதை அவன் அன்று கண்டான். தன்னால் நினைத்தும் பார்க்க முடியாத கோணங்களில் எல்லாம் வசந்தன் சிந்தித்துப் பார்ப்பதை அவன் உணர்ந்தான். வாழ்க்கை என்பது அவர் அவர் கொண்டிருக்கும் எண்ணங்களால் மட்டுமே தீர்மானிக்கப் படுவது என்பதில் சிறு விட்டுக் கொடுப்பும் இல்லாது அவன் விவாதித்தான். சமூகப் பரிமாணம் மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்பது பற்றிய எண்ணங்களையெல்லாம் மறுதலித்து விட்டிருந்தான். சமூக எண்ணமென்பது தனி மனிதர்களின் எண்னம் என்பதை நிறுவுவதிலேயே அவன் குறியாக இருந்தான். அவனுக்கும் தன்னைப் போலவே குடும்பம் இருப்பதையும் அவனைச் சார்ந்திருப்பதையும் இவன் அறிவான். அதற்காக தன் தனிப்பட்ட வாழ்க்கையைத் தியாகம் செய்துவிட வேண்டுமென்பது போலித் தனமானது என்றே வாதிட்டான். அப்படி ஒரு சந்தர்ப்பம் கிடைத்தால் தான் அதை நடைமுறைப் படுத்துவதிலும் தயங்கங் காட்டப் போவதில்லை என்று உறுதி படவே கூறியிருந்தான். ஆனாலும் வசந்தன் அப்படிச் செய்வான் என்று இவன் முழுமையாக நம்பவில்லை. ஒரு விவாதத்திற்காக பேசுவதாகவே இவனுக்குப் பட்டது.

வசந்தனின் சில கதைகளையும் அரசல் புரசலாக அறிந்தே வைத்திருந்தான். ஒரு மொரோக்கோப் பிள்ளையுடன் பழகுவதாகவும் அவன் அறிந்து வைத்திருந்தான். தனிமையில் இருக்கும் இளவயதுப் பிள்ளைகளின் சாதாரண நடை முறை என்றே அதனை அலட்சியம் செய்து விட்டிருந்தான். புலம் பெயர்ந்த தேசங்களில் இவ்வாறு சில சமூகக் கட்டுகள் கட்டுடைத்துப் போய்விட்டிருப்பதையும் பல சந்தர்ப்பங்களில் அவதானித்திருந்தான். சில துணிச்சல் காரர்கள் சேர்ந்து வாழ்வது வரை முன்னேறிவிட்டிருப்பார்கள். தூரமும் தனிமையும் அவர்களைத் தூண்டி விடுவதாகவே இவன் முடிவு கண்டிருந்தான். தூக்கமுடியாச் சுமைகளின் அழுத்துதலில் தமக்கென ஒரு வாழ்வு பற்றிய சிந்தனைகள் இன்றி இருப்பவர்கள் இவ்வாறான தற்காலிக வடிகால்களைத் தேடுவதை எவ்வகையில் நியாயப் படுத்துவது என்பதை அறியாதிருந்தான்.ஒரு கட்டுப் பெட்டிச் சமூகத்தின் நாற்றங்கால்களில் இருந்து இவ்வாறான புரட்சிகரச்சிந்தனைகள் வெளிவருவதே பாபமாக நோக்கப் படுவதையும் அவன் அறிவான். மேற்கில் புடுங்கி நடப்பட்டாலும் கிழக்கின் கூட்டுப் புழு மனப் பான்மையிலிருந்து விடுபடுவது சாத்தியமே அற்றது என்பதை இவன் முழுவதுமாக நம்பினான். அவ்வாறு இருப்பது மேலான தியாகம் என்பதாகக் கிலாகிக்கப் படுவதயும் அந்தச்சூட்டில் குளிர் காய்வதை விட்டு விடாத ஒரு போலித் தனத்தைப் போர்த்துக் கொள்வதையும் இவன் விரும்பினான். அதுவே இவனிடம் இருந்து எதிர்பார்க்கப் படுவதையும் இவன் புரிந்து கொண்டான்.

'இன்னாரின் பிள்ளை வெளிநாடு போயும் ஒரு கெட்ட பழக்கமில்லை. சொக்கத்தங்கம் . எவ்வளவு பொறுப்பு ' என்று கிலாகிக்கப்படுவதையும் அதனாலேயே கொண்டு
சேர்க்கப்படக் கூடிய கொழுத்த சீதனத்தையும் கனவு காண்கிறீர்கள்' என்றும் வசந்தனால் நேரடியாகவே தயவு தாட்சண்யமற்று குற்றம் சாட்டப்பட்ட போது உண்மையிலேயே இவன் மனம் புண்பட்டுத்தான் போனது.

குடும்பம் பற்றிய அக்கறை உண்மையான பாசம் எப்படி இவர்களால் கொச்சைப்படுத்தப் படுகின்றது என்பதை இவனால் ஜீரணிக்க முடியாமலேயே இருந்தது. உங்கள் உணர்ச்சிகளைக் காயப் போடுவது தான் தியாகமா? என்ற அவன் கேள்விக்கு மட்டும் இவனால் பதில் காணவே முடியவில்லை.

வசந்தன் இன்றில்லா விட்டாலும் என்றோ ஒரு நாள் அந்த மொரக்கோப் பெண்ணுடன் வாழப் போயே போய் விடுவான் என்று இப்போது தோன்றியது. அவ்வாறு நடப்பதும் நல்லது தான் என்றவாறே நினைக்க விரும்பாக் கணத்திலும் ஏன் தோன்றிக் கொண்டிருக்கின்றது. விடை காண முடியாத கேள்விகள் தான் வாழ்க்கையில் எத்தனையெத்தனை. அவற்றில் இதுவும் ஒன்றுபோலும்.

Tuesday, February 21, 2006

மோகத் தீ

செம் பருத்தி முகத்தில் புன்னகை காட்டி
செங் காந்தள் விரலில் அர்த்தம் கூட்டி
கண் விழி அம்பில் கணை ஏற்றி
கலக்கி விட்டாள் என் இதயக் குளத்தை

முல்லைச் சிறு சிரிப்பில் முத்துக் காட்டி
முன்னைக் கொன்ற இதயம் மீண்டும் கொன்று
மோகனக் குன்(று) அசைவில் மோகம் தூவி
முழுவதும் தள்ளி விட்டாள் காதல் குளத்தில்

பற்றிக் கரை ஏற பாவை மகள்
பட்டுத் துணியின் சருகைக் கரை நீட்டி
சொட்டச் சொட்ட நனைந்த என் மனது
சொக்கிப் போக முழுவதும் நனைய விட்டாள்

எச்சிச் சிறு வாணம் எகிறிப் பறக்கும்
எள்ளல் பொறி சிரிப்பு எண்ணில் அடங்காது
முக்கிப் பொதி சுமக்கும் கழுதை மனது
மோகத் தீயில் எரிந்து கருக வைத்தாள்

நன் செய் நிலத்து நாணல் போல்
வன் செய் உன் மனத்து வம்புகளால்
வளையாத திடம் கொண்ட நல் மனதோடு
வாழ்க்கையில் ஈடேறும் வரம் ஒன்று வேண்டும்.

சூது

நேரம் காலை பத்து மணியை நெருங்கிக் கொண்டிருக்கின்றது. பனி மூட்டத்துடன் பொழுது ஆரவாரமில்லாது விடிந்து விட்டிருந்தது. மேகங்கள் கவிந்து வெளிச்சத்தை வடி கட்டி அனுப்பி விட்டுக்கொண்டிருந்தது. நிலமெல்லாம் பனி போர்த்தி வெளிறிக்காணப்பட்டது. இலைகளற்ற மரக்கிளைகள் மோனப்பெருந்தவத்துள் மூழ்கிவிட்டவை போன்று அழுது வடிந்து கொண்டிருந்தன. மொத்தத்தில் உற்சாகமற்ற ஒரு காலைப் பொழுதுள் பூமி அமிழ்ந்து மூச்சு விட்டுக் கொண்ருந்தது. வளைவுகளில் வேகத்தை மட்டுப் படுத்தி காரை நிதானமாகச் செலுத்திக் கொண்டிருந்தேன். வீதியில் ஆங்காங்கே உறைந்து பளிங்காக ஜ்வலித்துக் கொண்டிருந்த பனிக்கட்டிகளில் வழுக்கிவிடக் கூடிய அபாயமும் அதிகம் இருந்தது. 401 நெடுஞ்சாலையில் இருந்து பிரிந்து 409 நெடுஞ்சாலையில் திருப்பி விட்டிருந்தேன். 427 வடக்குப் பாதையில் கொண்டு விடும் ஒரு கிளைப் பாதை அது. ஒரு அரை வட்டத்தில் திரும்பி பியர்சன் எயார் போட்டை கவனமாகத் தவிர்த்து வெளியேறி 427இல் சென்று கலக்கும். சற்றுக் கவனக் குறைவும் விமானத் தளத்துள் கொண்டு சென்று விடும். 427 இல் கலந்ததும் கார் வேகமெடுத்து சீறிப் பாய்ந்தது.

இலக்கில்லாத ஒரு பயணமாகத் தான் அது இருந்தது. வேலையைத் தொலைத்து விட்டிருந்த ஒரு காலம். நம்பிக்கைகள் வெகுவாகக் குறைந்து விட்டிருந்தன. கால்களின் கீழ் பூமி அடிக்கடி நழுவிக்கொண்டிருந்தது. எதிர்காலம் கொஞ்சமாய் பயமுறுத்திக் கொண்டிருந்தது. எதையும் துல்லியமாகத் தீர்மானிக்கமுடியாத கதியில் காலம் நகர்த்திக் கொண்டிருந்தது. வலப் பக்கம் விரிந்த வெளியில் வூட்பைன் ஹோர்ஸ் ரேஸ்ஸின் விளம்பரப் பலகை பிரமாண்டம் காட்டியது.
அந்நெடுஞ்சாலையில் பயணிக்கும் வாகனங்களைக் குறி வைக்கும் ஒரு உத்தியாகவே அங்கு நாட்டியிருந்தார்கள் என்று நினைக்கத் தோன்றியது.

நாளும் பொழுதும் அவ்வீதியால் பயணிக்கும் போதும் காணும் காட்சிதான் என்றாலும் அன்று என்னவோ அதிகம் கவர்ந்தது. அதற்குள் போய் என்னதான் இருக்கின்றது என்பதைப் பார்த்திட வேண்டும் என்று பலமுறை நினைத்ததுண்டு. நேரத்தின் பின்னால் ஓடிக்கொண்டிருக்கும் பொழுதுகளில் நினைப்பதுடன் நின்று விடும். ஆனால் இன்று போய்ப்பார்த்தால் தான் என்ன என்ற எண்ணம் தூக்கலாகவே தோன்றியது. தோன்றியதும் கார் ரெக்ஸ்டேல் வெளி வழியை எடுத்து அங்கு சென்றது.

அந்த காலை வேளையிலேயே அங்கு திரண்டிருந்த கார்களின் எண்ணிக்கை ஆச்சரியப் படுத்தியது. அண்மையில் காரை நிறுத்தமுடியாத படிக்கு கார்கள் நிறைந்திருந்தது. போதுமான தூரத்தில் நிறுத்தி விட்டு நடந்து சென்றேன். சில நிமிடங்களை விழுங்கி விட்ட தூரத்தில் நுழைவாசலை அடைந்தேன். காவலர்களின் முகமனை ஏற்றுக் கொண்ட என்னை ஆச்சரியம் தாக்கியது. வெளியுலகத்திற்கு தொடர்பேயில்லாத ஒரு உலகு கனவுகளுடன் அங்கு விரிந்திருந்தது . எங்கும் மனிதர்கள் இன்னதென்று சொல்ல முடியா உணர்வுகளுடன் ஸ்லொட் மெஷின்களின் முன்னால் மண்டியிட்டு யாசித்துக் கொண்டிருக்கும் மனிதர்கள். அவற்றின் வர்ண விளக்குகளின் ஜ்வலிப்புகளுக்கும் டிங் டிங் கென்ற வசீகரிக்கக் கூடிய சப்த ஆலாபனையுடன் டோக்கன்களை அள்ளி வழங்கும் வள்ளன்மைக்கும் அடிமையாகிப் போன ஒரு தாளகதியுடன் செயல்ப் படும் மனிதர்கள். சீன ட்ராகன்களும் புலிகளும் இன்ன பிற மிருகங்களும் பறவைகளும் பழவகைகளும் பெயரறியாச் சின்னங்களும் ஒன்று சேர்வதிலும் பிரிவதிலும் அவர்களின் அதிர்ஷ்டம் அல்லது துரதிர்ஷ்டம் சரி பார்க்கப் பட்டுக் கொண்டிருந்தது. புதிதாய் வருபவர்களைப் பற்றியோ அதுவரை அங்கிருந்து வெளியேறிச் செல்பவர்கள் பற்றியோ எந்தவிதப் பிரக்ஞையும் அற்று டிக் டிக்கென்று சுழன்று சுழன்று நிற்கும் இயந்திரங்களின் சுழற்சியை உயிர்த்துடிப்பை அடகு வைத்துக் காத்திருக்கும் மனிதர்கள். இவர்களைத் தவிர்த்து பொருமிப் பெருத்த பணப் பைகளை இடுப்பினில் சுமந்த உதவியாளர்களும் முழு உத்தியோக சீருடையுடன் காவலாளரும் வளைய வந்து கொண்டிருந்தார்கள்.

இயந்திரங்களின் முன் மண்டியிட்டு அமர்ந்திருந்தவர்களுக்கும் தங்களுக்கும் எதுவித சம்பந்தமும் அற்றவர்களைப் போல சிரிப்பும் கதையுமாக உலவிக் கொண்டிருந்தார்கள். சமயத்தில் அவர்களுக்கான உதவிகளைச் செய்து விட்டு மீண்டும் தங்கள் உலகத்தின் கதைகளைத் தொடர்ந்த வண்ணம். ஒரு பொருளாதாரக் கட்டு மானத்தின் இரண்டு பிரிவுகள் ஒன்றுடன் ஒன்று சேர்ந்து ஆனால் கலந்து விட முடியாத கவனத்துடன் ஒழுங்கு படுத்தப்பட்டிருந்தது.

ஒவ்வொரு வரிசையிலும் 25 , 50 சதங்கள் 1,2 ,5 தாலர்களை ஒவ்வொரு சுற்றுக்கும் ஒவ்வொரு தெரிவிற்கும் விலை கொள்ளும் படிக்கு ஸ்லொட் மெஷின்களை நிறுவியிருந்தார்கள். அவரவர் வசதிக்கும் விருப்பத்துக்கும் ஏற்ப தெரிவுகள் இருந்தது. இயந்திரங்களின் முன் குனிந்திருந்தவர்களில் அதிகமானவர்கள் சீனியர்கள் என்று அழைக்கப் படும் முதியவர்களாகக் காணப் பட்டார்கள். ஒரு விதத்தில் வாழ்க்கையை அனுபவித்தவர்கள் அல்லது வாழ்க்கையை முழுவதும் அனுபவிக்கத் துடிப்பவர்கள் என்று எந்த வகையில் இவர்களை வகைப் படுத்த முடியும். அவர்களின் முக இறுக்கங்களில் எதையும் உணரமுடியாத தன்மை படர்ந்திருப்பதாகத் தான் எனக்குத் தோன்றியது. வாழ்ந்தவர்கள் இவ்வித அவசரம் காட்டுவார்களா என்ற சந்தேகமும் கூடவே எழுந்தது. வாழ்க்கை பற்றிய புரிதலுக்கப்பால் வாழ்க்கையைத் தொலைத்தவர்களின் மடிகளைத் துடைப்பதில் இப்படியொரு அவசரம். புலம் பெயர்ந்து வந்த வேற்றினத்தவர்களும் தாரளமாகக் காணப்பட்டார்கள். இவர்களெல்லாம் எதைத் தேட அல்லது தொலைக்க இங்கு வந்திருந்தார்கள்.

வாழ்க்கை பற்றிய புரியாத புதிரில் அல்லது புரிந்தும் மாற்றமுடியா தவிப்பில் இதுவும் ஒன்று என்பதற்கப்பால் எது நிரந்தரம். புரிபடாத உலகத்தைப் போலவே புரிபடாத விளையாட்டும் என்னிடம் இருந்து அறுநூறு தாலர்களை கொள்ளையிட்டிருந்தது. வாழ்க்கையின் சூதைப் பற்றி எனக்கென்ன கவலை. தொலத்துவிட்ட அறுநூறு தாலர்களைப் பற்றி எண்ணிக் கொண்டு அங்கிருந்து வெளியேறினேன். மனம் கனத்துக் கொண்டிருந்தது.

Monday, February 20, 2006

கவிதை செய்வோம்

காற்றின் சிறகிலமர்ந்து
கவிதை செய்வோம் - காதல்
கவிதை செய்வோம்

நூற்கும் மழை நூலெடுத்து
பாடல் செய்வோம் - சந்தப்
பாடல் செய்வோம்

கதிரின் ஒளிச் சூடெடுத்து
அழுக்(கு) அறுப்போம் -மனதின்
அழுக்(கு) அறுப்போம்

நிலவின் தண்மை கூட்டி
பயிர் செய்வோம் - உறவின்
பயிர் செய்வோம்

காலத் தினம் பிரித்து
உலகை வெல்வோம் -மண்
உலகை வெல்வோம்

ஞானப் பண்புகள் உயர்த்தி
கனவைக் கொள்வோம் -நம்
கனவைக் கொள்வோம்

Thursday, February 16, 2006

வைத்தது யார்?
-------------------
நீராடை போர்த்த பூமி
நிமிடத்தில் நீங்கும் காற்று
நிலவுக்கும் கதிருக்கும்
பிரித்த பொழுது
பஞ்சமேயில்லாத
பிரபஞ்சம்
நடுவில் நான்
வைத்தது யார்?


சுனையூற்று
-----------------
உன்னைப் பார்த்ததும்
உமிழ்ந்தது மகிழ்ச்சி
வடிகட்டி
உதடு வீசியது
ஒரு புன்னகை
கருமியல்ல
காதல் என்பது
சுனையூற்று.

ஒரு உதயமும் ஒரு நரையும்

அலாரம் அடிக்க
சூரியன்
விழித்துக் கொண்டான்
"சே...இந்தக் கோழி"
சலித்துக் கொண்டான்
வானத்தின் கன்னம்
சிவந்து போனது
எனக்கும் கிழக்கில்
பறவைகள்
பறந்து போயின

கடலில் இருந்து
சூரியன்
எட்டிப் பார்த்தான்
கடலும் கரைந்து
சிவப்பு வர்ணத்தை
என் கால்வரை
அனுப்பிவைத்தது
தொடர்ந்த அலையும்
அதனைக் கழுவி
நுரைத்துப் போனது

பயந்த இருளும்
முதுகின் பின்னால்
விலகி ஓடியது
தொடரும் சூரியன்
மேற்கைத் தொடுகையில்
இருளும்
கிழக்கின் திசையால்
என்னை
வந்து சேரும்

விழித்த
மலர் தேடி
பசித்த தேனீ
பறந்துபோகும்
திடுக்கிட்டெழுந்த
கோவில் மணி
ஊரைக்கூட்டும்
ஒத்தைப் படலை
உள்ளிருந்து திறக்க
வீதியில்
கோலம் கூடும்

மேலெழுந்த சூரியன்
இந்த ஊர்
தாண்டி
அடுத்த ஊர்
போகும்
மறுபடி
உதயம் காண
மறுநாள் பொழுது
காத்திருக்கும்
அதுவரை
பகலும் இரவும்
ஆட்சியில்
இருக்கும்

மறுபடியும்
அலாரம்
சூரியன்
விழித்துக் கொள்வான்
அதற்கிடையில்
பூமியில்
ஒரு நரைகூடும்.

நிழல்

இருட்டுக் கதவினைத்
தட்டியது
மெழுகுவர்த்தியின்
வெளிச்சப் பொட்டு
திறந்தவுடன்
பளிச்சென
பரவிப் படர்ந்தது
இருந்தபோதும்
என் பின்னே
பதுங்கியது
கொஞ்சம் இருட்டு.

Wednesday, February 15, 2006

உன்னோடு காதல்

என்னோடு காதல்
நட்சத்திரத்துக்கான
தூரமென்றாய்
நட்சத்திரதின் ஒளியில்
வழி தெரியாதுதான்
ஆனாலும்
திசையறியலாமே
என் காதலும் தன்
திசையறியும்

உன் பார்வை
எப்போதும் தூரம்தான்
ஆனாலும்
இதயம் இருப்பதென்னவோ
என் அருகில்தானே

அழகாயிருக்கலாம்
அல்லது
அவஸ்தையாயிருக்கலாம்
அதனாலென்ன
'பச்' என்று மனதில்
ஒட்டிக்கொண்டிருக்கிறதே
உன் காதல்

கனவுகள் கலைவதால்
காலையே
வேண்டாமென்கிறேன்
அந்த காதலைச் சுமந்த
என் இதயத்தை
வேண்டாமென்பாயா?

உன்னோடு காதல்
உள்ளளவும்
உயிரோடு என்மூச்சும்
உலகிருக்கும் கண்ணே

Monday, February 13, 2006

எதுதான் காதல் என்பது ?

உன்னை நான்
அறிந்து கொள்வதும்
என்னை நீ
அறிந்துகொள்வதும் அல்ல
நம்மை நாமே
அறிந்து கொள்வது

நீ கண் மூடும்போது
நான் உறக்கம்கொள்வதும்
என் கனவுகளில்
உன் நினைவுகள் வாழ்வதும்

கம்பியில்லா தந்தியில் நீ
என் கதை படிப்பதும்
காதோரச் சில்லிப்பில்
உன்குரல் நான் கேட்பதுவும்

நீளும் உன்சிறகுகள்
பறக்கும் என்
மனமெங்கும் வானம்
தொங்கும் உன்
துப்பட்டாவில்
தூங்கும் என் கானம்

உன் கால்சலங்கையில்
துடிக்கிறது என் இதயம்
உன் பெரு மூச்சில்
வியர்க்கிறது என் உயிர்

அதனால்,

சிறுக்கிறது உன் இடை
அதுவே என் காதலுக்கு
நீ தந்த விடை.

( உலகக் காதலர்களுக்கு ஹப்பி வலண்டைன் டே)

Wednesday, February 08, 2006

பிள்ளையார் பிள்ளை

பிள்ளையார் வீதி உலா வர்ர கதை தெரியுமோ ? கோயில் திருவிழாக் காலங்களில் நாலு பேர் தூக்க உலா வர்ர கதை இல்லை. இவரே நடந்து உலா வர்ர கதை. காலில் சலங்கை கட்டி ஜல் ஜல்லென்று நடந்து வர்ர கதை. அம்மா சொல்லியிருக்கிற கதை. ரொம்ப்பத்தான் குழப்படி செய்து இராத்திரி தூங்காம லூட்டி அடிக்கிறபோது சொல்லுகிற கதை. எங்க வீட்டுக்குப் பக்கத்தில தெருவில் இருந்து ஒரு குச்சொழுங்கை கிளை பிரிந்து போகும். பின்னால இருக்கிற நாலைந்து வீட்டு மனுஷங்க பெருந் தெருவுக்கு வாரதுக்கும் போறதுக்கும் அதைதான் பயன் படுத்துவாங்க. எங்க வீட்டைச் சுத்தி மேற்கால போய் இன்னொரு குச்சொழுங்கையுடன் சேந்துக்கும். அங்கே ஒரு சின்ன கோயில் இருக்கும். யாரோ ஆசைப்பட்டு ரெண்டு சூலம் நட்டு படம் வைத்து கோயிலாக்கியிருக்கிறார்கள். பெரீய்ய பூவரசு மரத்தின் அடியில் இந்த கோயில் இருக்கும். ஊரைச் சுத்தி நாலைந்து கோயில் இருக்கும். பெரியது பிள்ளையார் கோயில். பிள்ளையார் இரவில மட்டும் இந்த கோயிலில் இருந்து வெளிக்கிட்டு ஒவ்வொரு கோயில் சாமியா சுகம் விசாரித்துக் கொண்டு வந்து எங்க வீட்டைச் சுத்தி அடுத்த ஊரில இருக்கிற இன்னொரு பிள்ளையார் கோவிலுக்குப் போவார் என்று அம்மா சொல்லியிருக்காங்க. இது அவங்களாச் சொன்னதில்லை. நாங்க கேட்ட புத்திசாலித்தனமான கேள்விங்களுக்கெல்லாம் அம்மாவும் புத்திசாலித்தனமா பதில் சொல்லப்போவ இப்படி ஒரு வடிவத்தில் கதை வந்து நின்றது. தூங்க வைப்பதற்கு இதுவொரு கடைசி ஆயுதம். "அந்தா சலங்கை சத்தம் கேட்கிது " என்று சொல்லிட்டாங்கன்னா அதன் பிறகு யாரும் வாயே தொறக்க மாட்டோம். சலங்கைச் சத்தம் கேட்கிரதா கேட்கிரதா என்று காதைத் தீட்டி வைத்துக் கொண்டிருப்போம். கண்ணை இறுக்க மூடி பிள்ளையார் வருவதற்குள் தூங்கி விட முயற்சி செய்வோம். எங்கள் அதிர்ஷடமோ பிள்ளையார் லேட்டோ தெரியாது. பிள்ளையார் வரு முன்னே தூங்கிப் போய்விடுவோம். இப்படியாக பிள்ளையாருக்கும் எனக்கும் தொடங்கியது உறவு. பிள்ளையார் மீது எனக்கொரு இரக்கமும் உண்டு. குடும்பம் குட்டி இல்லாமல் தனியாகவே இருக்கிறாரே என்றும் கவலை. ஆனாலும் என் பேவரைட் என்னமோ அவர் தம்பி முருகன் தான். முதல் கடவுளா முருகனை வைத்து மற்ற எல்லாக் கடவுளையும் கும்பிட்டுக் கொள்வேன். முருகனைக் கும்பிடறதாலே பிள்ளையாரும் நமக்கு ரொம்ப நெருக்கம். அண்ணன் தம்பி இல்லியா ? அத்தோட பிள்ளையாரின் புத்திசாலித் தனமும் ரொம்ப்ப பிடிக்கும். பிள்ளையார் கதை காலத்தில எல்லாம் கோயிலில ஆஜராகி விடுவேன். கதை கேட்க என்பதற்கும் மேலால் அங்கே ஒரு தளிகை தருவார்கள். ரொம்ப்ப நல்லாயிருக்கும். அப்போ அம்மாவுடன் காலையிலேயே குளித்து அங்கு சென்றுவிடுவேன். அப்போ நிறைய கூட்டமாயிருக்கும். காலையிலேயே பனியில உடம்பெல்லாம் கூதல் எடுத்து நடுங்கிக் கொண்டிருக்கும். கோவிலுக்குள் போய் விட்டால் கத கதப்பாய் இருக்கும். தீபங்களின் வெப்பமும் மக்களின் நெருக்கமும் இதமாய் இருக்கும். அப்போதும் வெளி மண்டபத்துக்கும் வெளியிலும் கொஞ்ச ஜனங்க நிப்பாங்க. அவங்க உள்ளே வரவே அனுமதிக்க மாட்டாங்க. பனியிலேயே நின்று கும்பிட்டுக் கொள்வாங்க. ஆடைங்களும் நல்லா இருக்காது. அழுக்கும் கந்தலுமாய் இருக்கும். குளிரில நடுங்கிக் கொண்டிருப்பாங்க. அது ஏன் அப்பிடின்னு அம்மாகிட்ட கேட்டால் அப்பிடித் தான் என்பாங்க. பிள்ளையாரைப் பற்றி சொல்லும் போது அவர் வயிறு ஏன் இவ்வளவோ பெரிசாயிருக்கு என்றும் சொல்லித்தருவார்கள். உலகத்தில உள்ள நல்லதும் கெட்டதையும் அப்படியே எடுத்து செரிக்கப் பண்ணியிடணும் என்பதைத் தான் அந்த பெரீய வயிறு சொல்லுதுன்னு சொல்லிக் கொடுத்தாங்க. அதில ஒண்ணுதான் இதுவும் அப்பிடீன்னு வெளங்கப் படுத்தினாங்க. நல்லது கெட்டது சேர்ந்தது தான் வாழ்க்கை. அதை அதை அப்பிடி அப்பிடியே எடுத்துக்கணும்னாங்க. ஏதோ வெளங்கிய மாதிரியும் வெளங்காத மாதிரியும் இருந்துது. பிள்ளையாரே சொல்லிட்டார். அப்புறம் சாமிக்குத்தமாயிடும்னு நானும் விட்டிட்டேன்.

ஒரு மாதிரி படிச்சு வெளிநாட்டில ஒரு வேலையும் கெடைச்சு வந்திட்டேன். வரும் போது மனசே சரியில்லை. அம்மாவையும் குடும்பத்தையும் விட்டிட்டு வரணுமே என்று ஒன்று. மற்றது என் கீத்துக் குட்டியை விட்டிட்டு வரணுமே என்பது இரண்டாவது. கீத்துக் குட்டி யாரென்னு கேட்கல்லியே. நம்ம ஊருதான் . நம்ம சாதி சனம் தான். என்னமோ அவகிட்ட மனசு ஒட்டிக்கிட்டது. அவவுக்கும் நம் மேல ஒரு இதுதான். ஆனா அவளுக்கு ஒரு அவநம்பிக்கை இருந்து கொண்டே இருக்கும். இது சரி வருமா வராதா என்று. ஏன்னா அவங்க என்ன தான் நம்ம சாதி சனமாய் இருந்தாலும் மச்சம் மாமிசம் சாப்பிட மாட்டார்கள். அதனாலேயே நம்மை விட தாங்க உசத்தின்னு அவ ஆளுகளுக்கு ஒரு நெனப்பு. யாரோ ஒருவர் மாமிசம் சாப்பிட பிடிக்காம விடப்போக அவங்க ஆளுகளும் அப்பிடியே வந்திட்டாங்க என்று நான் கேலி பண்ணுவேன். ஆனா அவ அதையே திருப்பித் திருப்பிச் சொல்ல எனக்கும் அந்த சந்தேகம் அடிகடி வந்து தொலைக்கும். வெளிநாடு போய் காசு பணம் சம்பாதித்தால் இது சரியாய்ப் போகும் என்று அவ சொன்னதால தான் வெளிநாட்டிற்கே கிளம்பி இருந்தேன். பிள்ளையாரப்பா துணை இருக்க என்ன கவலைன்னு மனசை தேத்திக்கிட்டேன்.

வெளி நாட்டில இவங்களுக்கு என்னென்னா நம்ம கலர்ல உள்ளவங்க எல்லாமே பாக்கி தான். ஐயா நான் பாக்கி இல்லை வேற நாடு வேற மதம்னு சொன்னாலும் புரியாது. அது மேல புரிஞ்சு கொள்ளனும்னு ஆவலும் கெடையாது. சரி அவங்க புரிதல் அவ்வளவு தான்னு நானும் விட்டிட்டேன். முன்னெல்லாம் அது பெரிய வெஷயமாயே இல்லை. 911 இற்குப் பிறகு இதெல்லாம் பெரிய பாதிப்பாய் தான் இருக்கு. இங்க உள்ளவங்க மனநிலையே ரொம்பத்தான் மாறீட்டுது. ஒரு பயத்தோடதான் பாக்கத்தொடங்கீட்டாங்கள். வெளியில யாரும் சொல்லாட்டாலும் அது தான் உண்மை. செக்கூரிட்டீல்லாம் பலப் படுத்திட்டாங்க. எவ்வளவு தூரம் நம்ம நாடுகளுக்கும் நம்மாளுகளுக்கும் வெளக்கம் இல்லாம இவங்க இருக்கிறாங்கன்னா 911 இற்குப் பின்னாடி பஞ்சாப் சிங்குகளுக்கே செமத்தியான அடி விழுந்துது. அமேரிக்காவில அவங்க கோயிலயும் கொழுத்திட்டாங்க. தொப்பி போட்டவன் எல்லாம் ஒரே மாதிரி தெரிஞ்சிருக்கிறாங்க. அதும் பின்னாடி பயந்து பயந்து தான் வாழ்க்கை போகுது. டாலரில வருமானம் வந்தாலும் நிம்மதி இல்லாம போச்சுது. இதுக்கிடையில நம்ம பிள்ளையாருக்கும் ஒரு சோதனை வந்திச்சு.

அவர் வயித்தைப் பாத்து நாங்க தத்துவம் எலாம் சொல்லிக் கொண்டிருக்க ஒரு பீர் போத்தலில அவர் படத்தை வரைஞ்சு விட்டிட்டாங்க. பீர் குடிச்சா இப்பிடிவயிறு வரும்னு சிம்பாலிக்கா சொல்லுராங்க போல. அப்புறம் இந்து சங்கங்களெல்லாம் கொடி பிடிச்சு அதை வாபஸ் வாங்கிட்டாங்க. இங்கே இருக்கிறவங்களுக்கு இதெல்லாம் ஒரு வெளையாட்டுப் போல. வைனே குடிச்சாரு யேசு. வைன் போத்தலில யேசு படம் இவங்க போட்ட மாதிரி நான் பார்க்கவே இல்லை. அரசியல் வாதிங்க படமெல்லாம் கண்டபடி போட்டுத் தள்ளுவாங்க. ஆனானப் பட்ட புஸ்ஸே தப்ப முடியாது. அவ்வளவுக்கு கருத்துச் சுதந்திரம் இங்க இருக்கு. நம்ம சாமிப் படங்களெல்லாம் இவங்களுக்கு ஒரு வேடிக்கை போல. சாமிங்களிலேயே அல்லாதான் அதிர்ஸ்டக் கார சாமின்னு நெனைச்சுக் கொள்வேன். அவருக்குத்தானே உருவமே இல்லை. மத்தச் சாமில்லாம் ஏதோ ஒரு விதத்தில் கஸ்ரப்படப் போறாங்கன்னு பிள்ளையார் படத்தோடயே நெனச்சுக் கொண்டேன். ஆப்கானிஸ்தானில புத்தருக்கு வந்த கஸ்ரத்தைப் பாத்தீங்களா? அன்பைப் பத்திப் பேசியவரை குண்டு வைச்சே அடிச்சாங்க. அமேரிக்காவும் உடனே சண்டைக்கு கெளம்பிப் போயிட்டாங்க. அமேரிக்கா சரியான சண்டைக் கோழிதாங்க. அதுவும் காலில கத்தி கட்டின சண்டைக் கோழி. எங்கேயும் முன்னாடிப் போய் நாட்டாமை காட்டுராங்க. இவங்களை நெனைக்கும் போது எனக்கு சின்ன வயசு ஸ்கூல் ஞாபகம் தான் வரும். பாலு என்னு ஒரு பையன் எங்ககூட படிச்சுக் கொண்டிருந்தான். எங்களை விட பெரிய தோற்றத்தோட முரடனாய் இருப்பான். வயசும் அதிகம் என்று ஞாபகம். என்ன பிரச்சனை என்றாலும் அவனிடம் தான் தீர்ப்புக்கு வரும். பிரசனை கேட்கு முன்னாடியே பிரச்சனை பட்ட ரெண்டு பேர் பொடரியிலயும் ஒரு அறை விழும். அது பின்னாடிதான் பிரச்சைனை பத்தியே கேட்பான். பாதிச்சவனுக்கும் அறை . பாதிக்கப் பட்டவனுக்கும் அறை. இது ஞாயமில்லேன்னு பல காலம் யோசித்தேன். அப்புறம் தான் வெளங்கிச்சு அவனுக்கு ஞாயம் சொல்லுரதில்ல முக்கியம் . தன்னைப் பற்றி ஒரு பயத்தை பசங்க மத்தியில வைச்சுக்கணும்றது தான் முக்கியம்னு பட்டுது. அது தான் அமேரிக்கா. பாலுவுக்கும் அமேரிக்காவுக்கும் அதிக வித்தியாசம் தெரியல்ல. அவங்களுக்கு அவங்களை விட ஆக்களில்ல என்ற எண்ணம். எண்ணம் தானே பிழைப்பைக் கெடுக்குது. ரஷ்யாவை ஒதுக்கின் பின்னாடி எங்கே எங்கேன்னு பாஞ்சு கொண்டிருக்காங்க.

அல்லா தப்பிட்டார் என்று பார்த்தா ப்ரொப்பெற் மொகமட்டைப் பிடித்து விட்டாங்க. கார்ட்டூன் கீறப் போக மீண்டும் கலவரம். மன்னிப்பு கேட்டு என்ன. மக்கள் மனசு இன்னும் இன்னும் விலகிப் போய்க்கொண்டே இருக்கு. இங்கே உள்ள மொகமட்டின் ஆளுங்களும் கொடி பிடித்து கோஷம் போடுறாங்க. கார்ட்டூன் போட்டவனை கொலை செய் என்னதுதான் ரூமச். அவங்க கண்ணுக்கு நாம எல்லோரும் பாக்கிதான்.

உலக நெலமை இப்பிடின்னா ந்ம்ம நெலமை ரொம்ப மோசம். நம்ம கலியாணத்துக்கு அவங்க சம்மதிக்கவே மாட்டாங்களாம். என்ன இருந்தாலும் அவங்க அவங்க தானாம் . நாங்க நாங்கதானாம். தன்னை மறக்கிரதுதான் நல்லதுன்னு கீத்துக் குட்டியே எழுதியிருக்கு. தொண்ணூத்தெட்டாவது முறை அவ லெட்டெரைப் படிச்சுட்டேன். மனசே சரீல்லீங்க. என்ன செய்து மனசை ஆறுதல் பன்ணலாம்னு யோசிச்சுக் கிட்டே வந்தேன். நவ் ஓப்பென்னு நேயொன்னில் பளிச்சிட்டது அந்த கடை போர்ட். பீர்க் கடை தாங்க. உள்ளே போய் ஓடர் பண்ணி முதல் கிளாஸை அப்பிடியே கவுத்து விட்டேன். உடம்பில சூடு பரவிச்சுது. என் வயித்தை தடவிப் பாத்தேன். பிள்ளையாரை விட சிறிசாத்தான் இருந்தது. கீத்துக் குட்டியில்லேன்னா நானும் பிள்ளையாரும் ஒண்ணுதானேன்னு எண்ணம் வந்தது. பிள்ளையாருக்கு இப்பிடி பிரசனை வந்ததா படிக்கேல்ல. ஆனா அவர் தம்பி முருகனுக்கு வந்திருக்கு. பிள்ளையாரே உதவி செய்திருக்கிறார். யானை வேசம் போட்டு. ஆமா முகம் யானை முகம் தானே. உடம்பை மட்டும் மாத்தியிருப்பார். அதனாலென்ன. இப்போ என் நெலமயில முருகனை விட பிள்ளையார் தான் என்க்கு ரொம்ப நெருக்கமாயிட்டார். அவரு தனி நானும் தனி. தத்துவம் எல்லாம் பிறக்கத் தொடங்கீட்டுது. கீத்துக் குட்டின்னு பொலம்பத் தொடங்கினேன். அவங்க அப்பா அவங்களைச் சேந்தவங்க எல்லாரையும் திட்டித் தீத்தேன். சத்தம் போட்டு திட்டினேன். பாரில் அதிக கூட்டம் இல்லை. எல்லோரும் எதேதோ துக்கத்தில் இருந்தார்கள். அல்லது அளவுக்கதிகமான உற்சாகத்தில் இருந்தார்கள். இதுவா முக்கியம். என் கீத்துக் குட்டியே இல்லாத உலகத்தில எது நடந்தால் தான் என்ன? தொடர்ந்து குடித்துக் கொண்டிருந்தேன். ஒரு அளவுக்கு மேல் முடியாமல் இருந்தது. வீட்டிற்குப் போகலாம் என்று திரும்பி நடந்தேன். எதிலோ தடக்குப் பட்டு விழுந்தேன். எதிலோ அல்ல யாரோ வேணுமென்று விழுத்தியிருந்தார்கள். எனக்கு எதைப் பற்றியும் கவலையில்லை. என் கீத்துக் குட்டீ... சட சடவென்று அடி விழுந்தது. பாக்கி என்று சத்தம் கேட்டது. நான் பாக்கி இல்லையென்று சொல்ல வேண்டுமென்று நினைத்தேன். ஆனால் சொல்லவில்லை. அதுவா முக்கியம் . என் கீத்துக் குட்டி. நினைவு தப்புவது போல இருந்தது. வாசலில் 'சொத்'தென்று தூக்கி எறிந்தார்கள். மண்டபத்தின் வெளியிலிருந்து சிலர் வா வாவென்று கூப்பிடுவது கேட்டது. இந்த நாட்டில் இவ்வளவு வறுமையுடன் கிழிசல் உடுத்தியபடி. நல்லதையும் கெட்டதையும் சரி சமனாக எடுத்து செரிக்கப் பழகுன்னு அம்மா சொல்வது தெரிகின்றது. என் கீத்துக்... அப்படியே மயங்கிப் போனேன்.

Tuesday, February 07, 2006

உன் நினைவுகள்

அசை மீட்கும்
பசுவாக
நினைவுகளை
தின்று தொலைக்க
மாலை நிழல்போல்
நீளும் பொழுது

கருவின்
இருள் தொலைத்து
ஒளியில்
கண் கூச
உடல் சிலிர்க்கும்
முதல் முத்தம்

தொப்புள் கொடியின்
நீட்சியில்
கோர்த்த கைகளின்
இறுக்கத்தில்
படரும் குருவிச்சைபோல்
உறவுகள்

ஹார்மோன் சுரப்பில்
விதிர்த்த மனதில்
அலையெறிந்த
நினைவுகள்
கரையோர நாணல்களாய்
வளராமலும் கருகாமலும்

மரத்தின்
பறவைகள் போல்
சத்தத்தில் சபைநிறைக்கும்
நெஞ்சத்தில்
கூடுகட்டிய
வரவுகளும் செலவுகளும்

தின்று தொலைக்க
சுருங்கிப்போகும் நிழல்
செரிக்காமல்
நின்று திமிறும்
உன் நினைவுகள்
முதல் காதல்

Sunday, February 05, 2006

ஊருக்கு உபகாரி

அதிகாலையிலிருந்தே தெரு அமர்க்களப் பட்டுக்கொண்டிருந்தது. கூடத்திற்கும் தெருவுக்குமாய் நடையாய் நடந்து என் மனைவி நேர் முக வருணனை கொடுத்துக் கொண்டிருக்கிறாள். போலீஸ் வண்டியும் வேடிக்கை பார்க்கும் கூட்டமுமாய் தெருவே நிறைந்திருந்தது. பாடசாலைக்குப் போவதற்கு ஆயத்தமாய் இருந்தாலும் போவதற்குத் தான் மனம் வரவில்லை. எப்படியும் அந்த வீட்டைத் தாண்டித் தான் போகவேண்டும் அதுவும் ஒரு காரணம். அந்த விழிகளின் பார்வை என்னைத் துவைத்துப் போடுவதை நான் விரும்பவில்லை.

'இவளுகளுக்கு வேணும். நல்லாய் இருந்த ஊரை நாறப் பண்ணும் போதே தெரியும் இப்படி ஒரு நாள் வரும் என்று" சொல்லிச் சொல்லி என் மனைவி மாய்ந்து கொண்டிருந்தாள். அவளுக்கு அவள் கவலை தீர்ந்ததில் பெரும் மகிழ்ச்சி. அவளைப் போல் இன்னும் எத்தனை பேருக்கு நிம்மதி வந்ததோ. ஆனால் எனக்கு மட்டும் மனம் சங்கடப் பட்டது. அவர்கள் வித்தியாசமான பெண்கள் தான். வாழ்க்கையில் வழுக்கி விழுந்தவர்கள் தான். எப்படியென்றாலும் அவர்களும் இந்த சமூகத்தில் தானே வாழ்ந்திருக்கிறார்கள். மாதவி இருக்கப் போய்த்தானே ஒரு சிலப்பதிகாரம் வந்தது. இன்றும் இந்த சமூகத்தில் மாதவிகள் இருக்கத்தானே செய்கிறார்கள். தமிழ் வாத்தியான எனக்கு தமிழ்ச் சரித்திரத்தில் தானே பாடம் சொல்ல முடியும்.

காலையும் மாலையும் அந்த வீட்டைத் தாண்டித் தான் பாடசாலைக்குப் போய் வருவேன். திடீரென்று ஒரு நாள் அந்தக் கதை பரவியது. பூட்டியிருந்த அந்த வீட்டிற்கு யாரோ புதிதாக குடிவந்திருக்கிறார்கள் என்று. பின்னர் அந்த வீட்டுக் கதையே பிரதான கதையாகவும் போய் விட்டது. ஒழுக்கம் கெட்ட பெண்களின் குடியிருப்பு என்று அறியப்பட்டாலும் யாராலும் அவர்களை அகற்றமுடியவில்லை. அரசியல் செல்வாக்கு அது இதுவென்று யாராலும் அசைத்துப் பார்க்கவும் தான் முடியவில்லை. ஒவ்வொரு வீட்டுப் பெண்ணுக்கும் ஒவ்வொரு வேலை கூடிப்போனது. தம் வீட்டுக் காரரைக் காபந்து பண்ணும் வேலையும்.

என் மனைவியும் ஆயிரம் உபதேசம். அதட்டல் உருட்டலுடன் பயமுறுத்தல் வேறு. தன் கணவனையே நம்பாமல் கட்டிப் பிடித்து ஒரு குடித்தனம் வேறு. நானும் ஆரம்பத்தில் அந்தப் பக்கம் பார்ப்பதையே தவிர்த்தபடியே அந்த வீட்டைக் கடந்து போய் வந்தேன். நாளாக நாளாக பேய் பூதம் ஒன்றும் பிடிக்காததனால் பயம் போனதோ ஆசை வந்ததோ என்று அங்கு என்ன தான் நடக்கின்றதென்று கண்காணிக்கத் தொடங்கினேன். நாளாக நாளாக பயந்து பயந்து வீட்டிற்குள் போனவர்கள் எல்லாம் சுயாதீனமாகப் போய் வரத் தொடங்கிவிட்டிருந்தார்கள். யார் யார் போய் வருகிறார்கள் என்றெல்லாம் அத்துப் படியாகிவிட்டது. சில வேளைகளில் புதிய புதிய கார்கள் எல்லாம் வந்து போகத் தொடங்கி விட்டது. எனக்கும் ஒரு வேடிக்கை பார்க்கும் இடமாகவே அது மாறி விட்டது. மனைவி ஆயிரம் சொன்னாலும் என் கண்கள் என்னை அறியாமலே அங்கு பார்க்கத்தொடங்கி விடும்.

பாடசாலைக்குப் போகும் போதும் வரும் போதும் வேடிக்கை பார்ப்பது வழமையாகிப் போனது. என்னையும் ஒரு சோடிக் கண்கள் பார்ப்பதே விதியாகிப் போனது. அழகான கண்கள். கண்களுக்குரியவளை முதல் முதல் பார்த்தபோது எனது சிலப்பதிகார மாதவியே உயிருடன் எழுந்து வந்ததைப் போல ஒரு தோற்றம். அத்தனை அழகு. என் மனைவி மட்டுமல்ல இங்கிருக்கும் அத்தனை மனைவிகளுமே அந்த அழகுக்கு ஈடாக மாட்டார்கள். இவ்வளவு அழகுள்ளவளுக்கு ஏன் இப்படியொரு வாழ்க்கை. வறுமையும் அழகுமே பெண்களுக்கு எப்போதும் எதிரிகளாகப் போய் விடுகின்றன. நான் அந்த வீட்டைக் கடக்கும் போதெல்லாம் அந்தக் கண்களும் என்னைப் பார்த்திருப்பதைக் கவனிக்கத் தொடங்கினேன். கொஞ்ச நாட்களிற்கு பட படப்பாகத் தான் எனக்கும் இருந்தது. அந்த அழகான கண்களில் இருந்த சோகம் என் நெஞ்சத்தில் ஈரத்தை கிளறி விட்டிருந்தது. அவள் பெயர் என்னவோ நானறியேன். என்னைப் பொறுத்தளவில் அவளுக்கு மாதவி என்றே வைத்துக் கொண்டேன். அவளை ஒவ்வொரு காலையில்க் காணும் வரையும் தவிப்பாக தவித்துப் போய்விடுவேன். கண்டு விட்டால் அவள் நலமாய் இருக்கிறாள், உயிருடன் இருக்கிறாள் என்று மனம் நிம்மதியடையும். யாரோ? எவளோ ? நான் ஏன் இப்படி அல்லாடுகிறேன் என்று எனக்குப் புரியாமலேயே இருந்தது. இந்த மாதவிக்கும் ஒரு கோவலன் கிடைக்கவேண்டுமே என்பது நித்தியக் கவலையாகப் போய் விட்டது.

ஒரு முறை ஒரு கவிஞன் அங்கே நுழைவதைக் கண்டேன். கவிஞன் என்று எப்படி அவனைக் கண்டுகொண்டேன். அவன் கையில் இருந்த ஜோல்னாப் பைதான் அவனைக் காட்டிக் கொடுத்தது. அந்தக் கவிஞன் அவளைத் தான் தேர்ந்தெடுத்திருப்பான் என்று நிச்சயமாக நம்பினேன். அழகை ஆராதிப்பவன் தானே கவிஞன். அந்தக் கண்களைப் பற்றி ஒரு காவியம் இல்லாவிட்டடலும் ஒரு கவிதையாவது எழுதியிருக்கக் கூடும். இரவு முழுக்கத் தூக்கம் இல்லாமல் ஏதேதோ எண்ணம். அடுத்த நாள் அந்த வீட்டைக் கடக்கும் போது அவளைத் தேடினேன். அவள் நின்றாள். கண்களைத் தேடினேன். கண்களில் அதே சோகம். ஜோல்னாப் பை வைத்திருப்பவர்களெல்லாம் கவிஞர்களாய்த் தான் இருக்க வேண்டுமென்பது இல்லையே.

ஒரு ராஜ குமாரனாவது அவளைக் காப்பாற்றக் கூடுமென நம்பினேன். அவர்களிடம் தானே பணம் இறைந்து கிடக்கின்றது. ஒரு வாய் சோறும் ஒரு முழத் துணியும் கொடுப்பதால் அவர்கள் ஒன்றும் ஏழையாய்ப் போய்விடப் போவதில்லையே. ஆழ்கடலின் அடியில்த்தான் எத்தனை வைரங்கள். அதில் இதுவும் ஒன்று போல சீந்துவாரில்லாமல்.

இன்று கைதாகியிருக்கும் அந்தக் கண்களைப் பார்க்கவும் திராணியில்லாமல் இதோ கிடக்கிறேன். நீயே கோவலனாக மாறியிருக்கலாம் என்கிறீர்களா? நான் கோவலனாக மாறமுதல் என் மனைவி கண்ணகியாக இருக்கிறாளா என்று பார்க்க வேண்டும். அவள் கண்ணகிதான். கால்ச்சிலம்பைக் கழட்டித் தரும் கண்ணகியல்ல. என் கைகளுக்கு விலங்கு பூட்டிய கண்ணகி. இப்படித்தானே குடும்ப வண்டி ஓடிக் கொண்டிருக்கின்றது. வண்டியோட இரண்டு சக்கரம் வேண்டுமென்பதல்ல. ஒரு சாரதியும் வேண்டும். ஒரேயொரு சாரதி மட்டும்.

இன்னும் தான் போலீஸ் வண்டி கிளம்பவில்லை. போலீஸ் வண்டி கிளம்பிய பின் தான் பாடசாலைக்கு போவேன் என்று கண்டிப்பாகச் சொல்லி விட்டேன். ஒழுக்கம் உள்ள ஆண்பிள்ளை என்று பத்து மார்க் கூட்டிப் போட்டுக் கொள்வாள் என்று தெரியும். இப்படித் தான் சிலவேளைகளில் ஆண்மைத் தனத்தையே கூட்டிக் கொள்ள வேண்டியிருக்கின்றது.

சுற்றி நிற்கும் கூட்டத்தில் என்னையும் கண்டு கொண்டால் சில வேளைகளில் அந்தக் கண்கள் கெஞ்சக் கூடும். பாவப் பட்டவர்கள் மேல் கல்லெறியாதிருக்கச் சொல்லச்சொல்லி கேட்கக் கூடும். முதல் கல் எறிவதற்கு அருகதை இல்லாததைப்போல் இந்தச் சமூகத்தில் முதல் கல் எறிவதைப் பற்றி சொல்வதற்கும் ஒரு தேவ குமாரன் இனிப் பிறக்க முடியாது என்பதை எப்படிச் சொல்வது. உலகம் அப்படித் தான் இருக்கின்றது.

கோவலன்கள் பிறப்பது நல்லது. இல்லையென்றால் பாவப்பட்ட மாதவிகளை யார் காப்பது ?

உறிஞ்சுமட்டும் காற்றும்

முன்னுக்குப் பின்
நகர்வதும்
முட்டிக் கொள்வதும்
இடம் மாறி
விழுவதும்
இப்படி என்பதும்
இல்லை என்று
மறுப்பதும்
விதிகளுக்குள்
அடக்குவதும்
சாயம் பூசுவதும்
இவை என்று
சொல்வதுவும்
இலக்கணம்
கட்டுவதும்
குழப்பிப் போடுவதும்
குழம்பிக் கொள்வதுவும்
இல்லை
வாழ்க்கை
குழந்தையின் சூப்பியும்
அதில்
உறுஞ்சுமட்டும் காற்றும்.

தொடங்கா(த) பாதை

கற்பப் பையில்
காத்திருக்கிறேன்
கனவுகளுடன்

எழுதத் தொடங்கும்
பிரமன் கை
ஒரு உலகம்
ஒரு வாழ்க்கை

கண்களின் முன்னால்
இருட்டு
எடுத்து வைக்கும்
கால்களின் கீழ்
செல்லும் வழி
தொடங்கா(த) பாதை

பாதையின் முடிவில்
தெரியப் போகிறது
இது
கவிதையா? காவியமா?
இல்லை
வெறும்
குற்றுத்தானா என்று

இதற்குள்
உதிர்ந்து விழும்
நட்சத்திரம் போல
முடிந்து போயிருக்கும்
வாழ்க்கை.

Saturday, February 04, 2006

அறிமுகம் செய்தவன் ஆறுமுகன்

ஊரைச் சுற்றி தென்னஞ்சோலை செழித்திருந்தது. தென்னஞ் சோலைக்குள் ஊரைப் பொதிந்து வைத்தது போல குளுகுளுவென்று காற்று வீசிக்கொண்டிருந்தது. மேற்கு மலையின் தொடர்ச்சியாக வயல் வெளி நீண்டு பரந்திருந்தது. நெக்கு விடத் தொடங்கியிருந்த கதிர்கள் இளந்தென்றலில் அலையெறிந்து சலசலத்துக் கொண்டிருந்தது. சலசலத்து அலையெறியும் அழகைப் பர்த்துக் கொண்டேயிருக்கலாம். சாய்ந்தும் நிமிர்ந்தும் நடனம் ஆடும் நெற்கதிர்கள் தேர்ந்த நாட்டியக்காரியின் நளினமும் லாவகமுங் காட்டும். வளைவது போல வளைந்து எழுவது போல எழுந்து கோலங் காட்டும் அழகு தனியழகு. தூக்கணாங் குருவியும் தேனிலையானும் தரிக்கவொண்ணாது இங்கும் அங்கும் பறந்து கொண்டிருக்கும். உயர்ந்து எழுந்த தென்னையுச்சியில் ஓலை குருத்து கிசுகிசுத்து இசை கூட்டும். கூடு கட்டிக் குஞ்சு பொரிக்கக் காத்திருக்கும் பச்சைக்கிளிகள் மூக்குரசி கதை பேசும். வீசும் காற்றின் வீச்சிற்கேற்ப தென்னம் ஓலைகள் வளைந்தும் தாழ்ந்தும் எழுந்தும் கோலம் காட்டி நிற்கும்.

மேற்கு மலையுரசி வரும் காற்று குளிர்மையையும் அள்ளி வந்து முகத்தில் அறைந்து சிலிர்ப்பூட்டிச் சென்றது. ஆறுமுகன் முகத்தில் வியர்வை வழிந்தோட மண்வெட்டியை ஓங்கி இறக்கி மண்ணை வெட்டிப் போட்டுக் கொண்டிருந்தான். தென்னைகளின் அடியில் குழி வெட்டி பாத்தி கட்டும் பணி மூன்று நாட்களாக நடந்து கொண்டிருந்தது. இன்னும் ஒரிரு நாட்களில் முடிந்து விடும். அது முடிந்தால் வயல் வேலை. வருஷம் முச்சூடும் உழைப்புக்குப் பஞ்சமில்லாத ஊர். ஓங்கி இறக்கிய ஒவ்வொரு வெட்டிலும் மண் கட்டிகள் பாளம் பாளமாகப் பெயர்ந்து கொண்டிருந்தது. புடைத்துத் திரண்ட மார்பும் கரணை கட்டிய கரங்களும் வலிமையெல்லாம் ஒன்று திரட்டி மண் வெட்டியை இறக்கிக் கொண்டிருந்தது. உடல் உழைப்பும் வஞ்சகமில்லாத உணவும் அவனை திடகாத்திரமாக வளர்த்து விட்டிருந்தது. இத்தனைக்கும் இருபது வயதே ஆகிவிட்டிருந்த அவனுக்கு இப்போதுதான் அரும்பு மீசை கோடு கட்டி முளைத்திருந்தது. தந்தையில்லாத அவனுக்கு படிப்பு ஒன்றும் சரியாக வரவில்லை. எட்டாவதுடன் படிப்பை முடித்துக் கொண்டவனுக்கு உழைப்பும் தொழிலுமே உலகத்தின் சூக்குமங்களை எல்லாம் சொல்லிக் கொடுத்துக்கொண்டிருந்தன.

படிப்பில் தான் சோடையே தவிர உழைப்பில் அவனுடன் யாரும் போட்டி போட முடியாது. உழைப்பின் சூக்குமங்கள் எல்லாம் அவனுக்கு அத்துப் படியாகியிருந்தது. தந்தையில்லாத அவனும் அவன் தாயும் தாய் மாமன் தயவிலேயே வாழ்ந்து கொண்டிருந்தார்கள். அந்தத் தயவிற்கு வஞ்சமில்லாமல் தன் உழைப்பைக் கொடுத்து நன்றி காட்டிக் கொண்டிருந்தான் அவன். '' எலே என்னலே" என்றோ "ஆறுமுகா'' என்றோ நல்ல குஷியாக இருக்கும் வேளைகளில் "மாப்பிள்ளே" என்றோ அவர் கூப்பிடும் குரலுக்கு ஆடும் பாம்பு போல அவர் முகம் சுழிக்கா வண்ணம் கருமம் ஆற்றிக் கொண்டிருந்தான். தவிர அவர் மகள் செண்பகத்தின் விருப்பங்களையும் முகம் கோணாமல் நிறைவேற்றி வைத்துக் கொண்டிருந்தான். அதில் ஒரு சுகமும் அவனுக்கு இருந்தது. அவனை விட சில வயது இளையவளான செண்பகம் அவனுக்கு மட்டும் டீச்சரம்மா. இரட்டைப் பின்னல் ஜடை காற்றில் பறக்க புள்ளி மான் போல ஓடித் திரியும் செண்பகம் அவனைப் பொறுத்தளவில் பெரிய படிப்புப் படிக்கும் படிப்பாளி. பத்தாவது படிக்கும் அவள் ஊரிலேயே அதிகம் படித்தவர்களில் ஒருத்தி. அதையே சாட்டாக வைத்து அவனைக் கேள்வி கேட்டே அவன் திணறுவதைப் பார்த்து சந்தோஷப் படுவாள். அவள் சந்தோஷப் பட வேண்டுமென்பதற்காகவே பதில் தெரிந்தாலும் தெரியாதது போல காட்டிக் கொள்வதில் அவனுக்கும் சந்தோஷமே. அவளைக் காணும் போதெல்லாம் என்னவென்றே தெரியாத மகிழ்ச்சி. அவளுடன் விளையாடுவதும் அவளைச் ச்ந்தோஷப் படுத்துவதும் அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது. ஆனால் அவள் மட்டும் அவனை ஒன்றும் தெரியாத முட்டாளாகவே நினைத்திருந்தாள். நினைத்தால் குட்டிக் கரணம் போடும் குட்டிக் குரங்காக அவனை ஆட்டம் போட வைத்திருந்தாள். அவன் சேட்டைகளைப் பார்த்துப் பார்த்து வயிறு வலிக்கச் சிரிப்பதே அவள் பொழுது போக்கு. அவர்கள் விளையாட்டையும் சிரிப்பையும் யாரும் பெரிது படுத்தவில்லை. வயதுக்கு வராத குழந்தைகளின் சிறு பிள்ளை விளையாட்டாகவே அவர்கள் எடுத்துக் கொண்டார்கள்.

அன்றும் அப்படித் தான் வேலை முடிந்து மாமன் வீட்டிற்கு வந்திருந்தான். மாமாவையும் அத்தையையும் காணவில்லை. டீச்சரம்மா மட்டும் வீட்டிலிருந்தாள். தனியாக அகப்பட்ட அவனை லோட்டி கட்டிக் கொண்டிருந்தாள். பொய்யாக அவளைத் துரத்த சிரித்த படி ஓடி தடுமாறி விழ இருந்த கணத்தில் அவளைப் பாய்ந்து பிடித்துக் கொண்டான். வலிமையான அவன் பிடியில் சிக்கியிருந்தவள் சிரிப்பு மறைய முகம் கோணிக் கொண்டு போனது. வயிற்றின் உட்தசைகள் சுருங்க ஏதோ ஒன்று உடைந்து போக அவள் அப்படியே குந்திக் கொண்டாள். தாங்க முடியாத வேதனையில் அவள் கண்களிலிருந்து கண்ணீர் கொட்டிக் கொண்டிருந்தது. அவ்வேளை அங்கே வந்த அத்தை நிலமையைப் புரிந்து கொண்டு "எலே மாப்பிள்ளை அம்மாவை வரச் சொல்லு" என்று அவனை அனுப்பி வைத்தாள்.

அப்புறம் அம்மா வந்து சொன்னாள். செண்பகம் பெரிய மனுஷி ஆகிவிட்டாளாம் என்று. பெரிய மனுஷியாவது என்னவென்றே அவனுக்குப் புரியவில்லை. சரி நாளைக்கு டீச்சரம்மாவையே கேட்டுத் தெரிஞ்சு கொண்டால் போச்சு என்று எண்ணிக் கொண்டான்.

அதிகாலையிலேயே மாமா வீட்டிற்குப் போனவன் " மாமா மாமா " என்று குரல் கொடுத்தான். ஆறு முகனின் குரல் கேட்டதும் வாசலுக்கு ஓடுவதற்கு எத்தனித்தவள் ஏதோ தயங்கினாள். ஒரு நாளும் இல்லாமல் இதுவென்ன ஒரு வெட்கம். இரவு முழுவதும் அவன் தகட்டு மார்பும் கரணைக் கைகளும் அவன் கரத்தின் வலிமையும் வந்து வந்து அவள் தூக்கத்தை கெடுத்துக் கொண்டிருந்தது. இப்போதென்னடாவென்றால் வெட்கம் வேறு வந்து கால்களைக் கட்டிப் போட்டுக் கொண்டிருந்தது. ஆறு முகனின் குரல் கேட்டுக் கொண்டிருந்தது. வானொலியில் "அறிமுகம் செய்தவன் ஆறுமுகன் " என்ற பாடல் பக்தியுடன் ஒலித்துக் கொண்டிருந்தது. "இது வேற..." அவள் முகம் சிவந்து கொண்டிருந்தது.

நஞ்சுண்ட கண்டம்

பால் போல் நிலவு பொழிந்து கொண்டிருந்தது. சலசலத்தோடும் பாலாறு வெள்ளித் தகடுகளாக மினுங்கிக் கொண்டிருந்தது. தலை தடவும் இளந்தென்றலின் கரம் பற்றி அலை எறிந்து துள்ளிக் குதித்து உற்சாகமாக ஓடிக்கொண்டிருந்தது ஆறு. ஆற்றோரத்தில் வளர்ந்திருந்த நாணலும் அதனைச்சுற்றிலும் அடர்ந்திருந்த காடும் அற்புத அழகுடன் நிலவொளியில் குளித்துக் கொண்டிருந்தது. மரங்களின் செல்லச் சிலிர்ப்பில் அங்கு கூடு கட்டியிருந்த பறவைகள் எல்லாம் கால்மாற்றிக் கால் வைத்து சிறுநடனம் ஆடிய படியே சந்தோஷத்தில் கிர்க் கிர்கென்று சிறு இசை பாடவும் செய்தன. சிள்வண்டுகளின் ரீங்காரமும் சுதி சேர்க்க ஒரு மோக லயம் காற்றில் பரவிக் கொண்டிருந்தது.

அந்த ஆற்றங்கரையில் உயர்ந்து வளர்ந்திருந்த பாலை மரத்தின் கீழ் அவர்கள் நின்றிருந்தனர். பூவும் பழமுமாய் நிறைந்திருந்த அந்தப் பாலை மரத்திலிருந்து ரம்மியமான வாசனை ஒன்று நாசியை நிறைத்துக் கொண்டிருந்தது. அதன் சிறிய மலர்களை உதிர்த்து அக்காதலர்களை அது ஆசீர்வதித்துக் கொண்டிருந்தது. தலையில் உதிர்ந்த மலர்களை விடுவித்துக் கொண்டே மாறன் கேட்டான். ''என்ன யோசனை குழலி, பெளர்ணமி நிலவில் ஆற்றில் குளிப்பது தான் எத்தனை சுகம் " என்றவாறு அவள் முகத்தைப் பார்த்தான். கூந்தல் எல்லாம் பாலை மரத்தின் பூ அபிஷேகத்துடன் ஒரு தேவதையைப் போல ஜொலித்துக் கொண்டிருந்தாள் பூங்குழலி. தரையில் பரந்திருந்த மலர்ப் படுக்கையில் தன் பாதங்களை வைத்த படியே அவனைப் பார்த்தவள் பதிலும் கூறினாள். " எத்தனை முறை இந்த ஆற்றங்கரை வழியே சென்றிருக்கின்றோம். இன்று தான் உங்களுடன் சேர்ந்து குளிக்கும் சந்தர்ப்பம் வந்திருக்கின்றது" சொன்னவள் மெல்ல நகைத்துக் கொண்டாள். மனதுக்குப் பிடித்த காதலனுடன் சேர்ந்து குளிப்பதென்றால் அது தரும் சுகமே அலாதி தான் என்பதை எண்ணும் போதே அவள் முகம் குங்குமமாகச் சிவந்து விட்டது.

நிலவு உச்சியை நெருங்கிக் கொண்டிருந்தது. பெளர்ணமி நிலவு பொழிந்து கொண்டிருந்தது. கண்ணகி அம்மன் ஆலயத்திலிருந்து குரவைப் பாடல் இடையிடையே காற்றில் மிதந்து வந்து கேட்டுக் கொண்டிருந்தது. மனதிற்கு மிகவும் இதமாக இருந்தது. பெளர்ணமிப் பொங்கலிட்டு மக்கள் விடிய விடியக் கொண்டாடுவார்கள். " மக்கள் எவ்வளவு மகிழ்ச்சியுடன் இருக்கின்றார்கள்" என்ற படியே நீரலையை எற்றி அவன் மார்பை நனைத்து விளையாடினாள் பூங்குழலி. " தமிழ் இராட்சியத்தில் மக்களுக்கு ஏது குறை ? " என்றவன் நீரலையை அவளை நோக்கி எற்றினான். அவள் முகத்தில் சிதறிப் பரவிய நீர் முத்துக்களாக அவள் கன்னக் கதப்பில் பரவி மின்னிக் கொண்டிருந்தன. பிறை நுதலும் கரிய நீண்ட இமைகள் வரம்பிட்ட படபடக்கும் கண்களும் கூர் நாசியும் சிவந்த அழகிய இதழ்களும் அவளுக்கு அழகுக்கு அழகு சேர்த்தன. இவள் தான் எத்தனை அழகு.
அவன் அவள் அழகையே பருகிக் கொண்டிருந்தான். அவன் பார்வையில் நாணம் மீதூரப் பெற்றவள் நீரினுள் ஒரு முறை அமிழ்ந்து வெளிக் கிளம்பினாள். நீர்ப் போர்வையை விலத்தி மேலெழும் போது மதர்த்துத் திரண்ட கொங்கைகள் அதன் செழுமையை வெளிக்காட்டி மீண்டும் நீரில் அமிழ்ந்து போயின. அவன் ஆண்மைக்குச் சேதி சொல்லிப் போன அந்தக் கணங்களில் அவன் விக்கித்துப் போய் நின்றிருந்தான். கல கலத்துச் சிரிக்கும் அவள் சிரிப்பொலி அவன் நினைவுகளை மீண்டும் நனவுலகிற்கு மீட்டு வந்தது. போதும் போதும் என்ற அளவில் நீராடிய பின்னர் கரையேறினர். கரையினில் கிடந்த வஸ்திரங்களை எடுத்து உடுத்திக் கொண்டனர். நாணச் சிவப்பேறிய அவள் முகம் செங்கமலமாக மலர்ந்து சிரித்தது. புஷ்டியான உடல் பூரித்துக் குலுங்கியது.

ஓடிக் களைத்த மழை மேகம் ஓய்ந்து இறங்கி அவள் கூந்தலாகிக் குவிந்தது போல் பரவித் தரை தொட்ட து அவள் கூந்தல். காற்றினில் அழகுக் கூந்தலைப் பிரித்து உலர்த்திக் கொண்டிருந்தாள். மயிர்க்கீற்றுகளின் இடையிறங்கிய நிலவொளி அவள் முகத்தில் திருஷ்டிப் பொட்டு வைத்தது. அவள் கூந்தல் அழகைப் பார்த்துக் கொண்டிருந்தவன் எங்கோ சென்று கணத்தினில் திரும்பி வந்தான். அவன் கரங்களில் அல்லிப் பூக்களும் பட்டிப் பூக்களும் சிவப்பும் வெள்ளையுமாக நிறைந்து காணப் பட்டன. அப்பூக்களை அவள் கூந்தலில் சூட்டியவன் அவளைப் பார்த்து நிறைவுடன் சொன்னான் "இப்பொழுது தான் பூங்குழலி என்பது பொருத்தமாய் இருக்கின்றது''

கும்மென்று நிமிர்ந்த மார்புக் கச்சையின் ஒடுக்கத்தில் நழுவி இடுப்பினைச் சுற்றி இறங்கிய வஸ்திரம் நழுவிக் கொள்ள அவள் ஆலிலை வயிறு அவனுக்கு ஒரு சேதி சொல்ல மீண்டும் எங்கோ சென்றவன் கணத்தினில் மீண்டான். கோலிய இலை நிறைந்த பாலைப் பழங்களை அவளிடம் நீட்டினான். குண்டு குண்டான பொன் மஞ்சளில் தக தகத்த பாலைப் பழங்கள் அமிர்தம் போல சுவையாயிருந்தன.
அவள் பாலைப் பழங்களை விரும்பி உண்பதை இரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தவன் "உன்னிடம் ஒன்று கேட்க வேண்டுமே " என்றான். அவனை நிமிர்ந்து பார்த்தாள். "என்னவாயிருக்கும்" குழப்பம் கண்களில் வலை போட்டு உட்கார்ந்திருந்தது. ''கேளுங்கள்" என்றவள் காதல் மீதூர அவனைப் பார்த்தாள். "பரவாயில்லை பிறகு கேட்கின்றேன் " என்றவன் அவளை அணைத்து தன்னுடன் சாய்த்துக் கொண்டான். அவன் பரந்த மார்புகளுக்குள் தன்னை புதைத்துக் கொண்டவள் நீண்ட தளிர் விரல்களால் அவன் மார்புக் கேசத்தை அளைந்து விளையாடினாள். புலால் தீயுண்ட நாற்றத்தை அவள் நாசி நுகர்ந்தது. அவன் மார்பில் தாங்கி நின்ற பெரும் விழுப்புண்ணைத் தன் காந்தள் விரல்களால் தடவி விட்டுக் கொண்டாள். "எத்துணை மாபெரும் வீரன் இவன் " எண்ணும் போதே அவன் மீது தான் கொண்ட காதலும் பொங்கி நுரைத்துப் புதுப் புனலாய் வெளி வருவதை உணர்ந்த அக்கணத்திலேயே அவனுடன் தன்னை இன்னும் நெருக்கிக் கொண்டாள். அவள் கூந்தலின் வாசனை நாசியில் ஏற ஏகக்கிறக்கத்துடன் அவள் காதின் ஓரங்களில் மூக்கினால் உரசினான். அவர்களின் மோகத்தின் மோனத்தைக் காடும் ஒரு முறை நின்று பார்த்து கலகலத்துச் சிரித்தது.

தன் காதலியின் பிரிவை எண்ணி எங்கோ ஒருவன் பாடும் ஏக்கக் குரல் காற்றினிலே மிதந்து வந்து கொண்டிருந்தது. அந்தக் குரலில் இருந்த ஏக்கம் அவர்களின் இதயத்தில் இறங்கிச் சென்று சிம்மாசனம் இட்டு உட்கார்ந்து கொண்டிருந்தது. எத்தனை காலத்து ஏக்கம் இந்தக் காதல் ஏக்கம். அவனிடம் இருந்து ஒரு பெருமூச்சு வெளிக் கிளம்பியது. அதன் வலியை உணர்ந்தவள் போல அவனிடம் இன்னும் நெருங்கிக் கொண்டாள்.

நிலவு உச்சியை கடந்து மேற்கில் இறங்கிக் கொண்டிருந்தது. சிள்வண்டுககளின் ரீங்கரிப்பைத் தவிர அனைத்துப் பறவைகளின் ஆர்ப்பரிப்பும் அடங்கிப் போயிருந்தன. இன்பக் கலவியின் பின்னால் அவை உறங்கிப் போயிருக்க வேண்டும். ஆறு மட்டும் உற்சாகத்துடன் அலை எறிந்து நுரை பரத்தி ஓடிக்கொண்டிருந்தது. நிலவின் பாலொளியை பறித்து பட்டுச் சருகாக்கி அலை ஆடையுடுத்தி உற்சாகத்தில் சிலு சிலுத்துக் கொண்டிருந்தது. மோன மயக்கம் நீங்கப் பெற்றவன் அவள் முகம் நிமிர்த்தி அவளைப் பார்த்தான். ஒரு விபரிக்க முடியா பூரண நிறைவில் அவள் முகம் ஜ்வலித்துக் கொண்டிருந்தது. அவன் பார்வையின் வீர்யத்தத் தாங்க மாட்டாது அவள் முகம் மீண்டுமொரு முறை குங்குமத்தில் குளித்து நின்றது. அவள் கண்களை ஊடுருவியவன் " உன்னிடம் ஒன்று கேட்க வேண்டுமே பூங்குழலி" என்றான். "கேளுங்கள்" என்றவள் தன் கரிய பெரிய விழிகளை விரித்து அவனைப் பார்த்தாள். இவன் என்ன கேட்கப் போகின்றான் என்ற ஆச்சரியமும் ஏன் தயங்குகின்றான் என்ற குழப்பமும் அவள் பார்வையில் விரவி நின்றது.

கேட்டு விடுவது என்ற முடிவிற்கு வந்தவனாய் அவன் கேட்டான். " செங்கமலம் போன்ற உன் சிவந்த மேனியில் நீலாம்பல் போல உன் கண்டம் மட்டும் நீலம் பாரித்திருப்பது ஏன்? " அவனை மீண்டும் பார்த்தவள் தொண்டையைக் கனைத்துக் கொண்டாள். " மார்பில் குண்டடி பட்டு நீங்கள் இறந்தது போல் நச்சுக் குப்பியை(சயனைட்)க் கடித்து நான் மரணித்ததை மறந்து விட்டீர்களா ?" என்றவள் அந்தக் கணத்தின் வலியின் வேதனையைத் தாங்க முடியாதவள் போல் துயரம் உடலெங்கும் உலுக்கிப் போட தலையைக் குனிந்து கொண்டாள். அவன் இதயம் ஒரு முறை குலுங்கி நடுங்கியது. எத்துணை மாபெரும் தியாகம், எப்படி மறந்து போனேன். நினைத்துக் கொண்டவன் அவளை ஆதுரத்துடன் அணைத்துக் கொண்டான். இருவரும் ஒன்றும் பேசா மெளனத்துடன் வானில் ஏறிப் பறந்து சென்றனர்.

Thursday, February 02, 2006

ஆனந்தம் அதுதானோ ?

காலைச் சூரியன்
கதிரெறிந்தால்
கொண்டைச் சேவல்
குரல்கொடுக்கும்

வாலைச் சூரியன்
மேலெழுந்தால்
வானம் கவிழ்ந்து
நிலம் நோக்கும்

மாலைச் சூரியன்
மதியிழந்தால்
மனதும் மதுவின்
போதையுறும்

உன்விழிச் சூரியன்
கணை தொடுத்தால்
என்மனம் காதல்
கதிர் அறுக்கும்

பாலை சூனிய
வெளியினிலே
பாத்தி கட்டி
முடித்தவளே

தேடித் திரிந்த
முகில் மேகம்
ஓய்ந்து இறங்கிய(து)
உன் குழலோ

நிலவின் தண்மையும்
எந்தன் அண்மையும்
உந்தன் விழியில்
பூத்ததுவோ

எந்தன் உயிரது
உந்தன் அடியில்-அதனால்
என்நிழல்
தொடர்ந்தனையோ

ஒரு புதுமஞ்சம்
அதுதொடர் பிரபஞ்சம்
ஆனது வாழ்க்கை
ஆனந்தம் அதுதானோ

Wednesday, February 01, 2006

விடியாத இரவு

தூக்கம் வராது திரும்பித் திரும்பி படுத்துக்கொண்டான். எங்கே தான் போய்த் தொலைந்தது இந்தத் தூக்கம். இரவின் நிசப்தத்தில் வீதியில் செல்லும் இரண்டொரு வாகனங்களின் இரைச்சல் இடையிடையே விட்டு விட்டுக் கேட்டுக் கொண்டிருந்தது. அதை விட பால்கனியில் கூடு கட்டி முட்டை இட்டிருந்த புறாவின் குறு குறுப்பும் சிலவேளகளில் எழுந்து அடங்கிக் கொண்டிருந்தது. மற்றும் படி இரவின் நிசப்தம் அடர்த்தியாக இறங்கியிருந்தது.

கண்களைத் திறந்து நேரத்தைப் பார்த்தான். 2.37 சிவப்பு நிற டிஜிட்டரில் பளீரிட்டுத் தெரிந்தது. இன்னும் ஒரு மூன்று மணி நேரம் தூங்கலாம். தூக்கம் வர வேண்டும் வந்தால் அதிர்ஸ்டம். இல்லையென்றால் என்ன ? நாளாந்தக் கடமையைத் தள்ளிப் போடவா முடியும்? மீண்டும் நேரத்தைப் பார்த்தான். இப்போது 2.39 இற்கு மாறியிருந்தது. மறு பக்கம் திரும்பி மீண்டும் தூங்குவதற்கு முயற்சி செய்து பார்த்தான். அந்தப் பக்கம் சற்று விலகியிருந்த ஜன்னல் சீலையின் நீக்கலினூடாக தெரு விளக்கின் மஞ்சள் ஒளிக் கசிவு துகளாக கீழ் நோக்கிப் பரவி இறங்கிக் கொண்டிருந்தது. மூடிய கண்களினூடாக மெலிதாக பழுப்பு நிறத்தில் ஒளி ஊடுருவ இம்சையாக இருந்தது. எழுந்து சென்று திரச்சீலையை நன்கு இழுத்துவிட ஆசை எழுந்தது. சோம்பலால் அதைத் தவிர்த்து மறு படியும் மறுபக்கம் திரும்பிப் படுத்துக் கொண்டான்.

சர்ரென்று சீறிப் பாய்ந்த வாகனம் சற்றுப் பேரிரைச்சலை எழுப்பித் தேய்ந்து போனது. ஒரு ட்ரக் வண்டியாய் இருக்கலாம். அல்லது வொஜாயர் ரக ஜீப் வண்டியாக இருக்கலாம். இதுவா இப்போ முக்கியம். தூங்க வேண்டும். மெத்தென்றிருந்த தலையணையால் தலையை மூடிய படி தூங்க முயற்சித்தான். வெளியோசைகள் கட்டுப்பட்ட போதும் மனது தூங்க மறுத்து அடம்பிடித்துக் கொண்டிருந்தது.

சந்தோஷமாய் தொடங்கிய திருமண வாழ்க்கை. இன்று சத்தமும் குழப்பமும் நிறைந்து போய் விட்டது. முதல் குழந்தையும் பிறந்து விட்ட நிலையில் அது இன்னும் அதிகரித்துக் கொண்டு தான் செல்கின்றது. முதல் முதல் சந்தோஷம் போல முதல் முதல் சண்டையும் வெகு சீக்கிரமே வந்து சேர்ந்தது. தனது வார்த்தையை முதல் முதல் எதிர்த்துப் பேசிய மனைவியையும் பார்த்தான். இரு மனம் சேர்ந்ததே திரு மணம் என்ற பொய்மையையும் முதல்முதலில் உணர்ந்து கொண்டான். இரண்டு உயிர்களின் விருப்பு வெறுப்புகள் ஒரே கோட்டில் வர முடியாது அடம்பிடித்துக் கொண்டிருந்தன.

கணவனுக்கு அடங்கி போக வேண்டியவள் மனைவி என்பதில் அவன் உறுதியாக நின்றான். அதை விளங்கிக் கொள்வதில் அவள் காட்டிய அலட்சியமும் முடியாதென்ற பிடிவாதமும் அவனைக் கோபப்படுத்தியது. காலம் காலமாக அவனுக்கிருந்த நம்பிக்கையை விட்டுக் கொடுக்க அவன் தயாராக இல்லை. அடங்காப் பிடாரியான ஒரு பெண் தனக்கு மனைவியாக வந்ததையிட்டு துக்கப் பட்டான். என்ன செய்யலாம் இவளை. இவளுடன் சேர்ந்து வாழ்வதெபது இனியும் சாத்தியம் என்று அவனுக்குத் தோன்றவில்லை. பிள்ளைகள் பிறக்கும் போது எல்லாம் சரியாகும் என்று அவனுக்கு சொல்லப் பட்டபோது அதை நம்பினான். பிள்ளை பிறந்தபோதும் எதுவும் சரியாகவில்லை. இன்றும் சில வேளைகளில் முகத்தை தூக்கி வைத்திருக்கும் தந்தையையும் முகத்தை முந்தானையில் துடைத்துக் கொண்டிருக்கும் தாயையும் இப்போது புரிந்து கொள்ள முடிந்தது. ஆறு பிள்ளை பெற்று கரை சேர்த்து பேரப்பிள்ளைகளையும் பார்த்த பின்னும் கண்ணைக் கசக்கும் அம்மாவையும் கோபத்தில் விட்டத்தை வெறிக்கும் அப்பாவையும் புரிந்து கொண்டான். பொய்மையை நம்பி பொய்மையில் வாழும் ஒரு அற்ப வாழ்க்கை.

தானும் அவ்வாறு வாழ்வது சாத்தியமில்லை என்று பட்டது. தனது சுதந்திரம் ஆசை, தேவை எல்லாவற்றையும் விட்டுக் கொடுப்பது அல்லது சமரசம் செய்து கொள்வது தேவையில்லை என்று பட்டது. சமைப்பது வீட்டு வேலை செய்வது எல்லாவற்றிலும் தனது பங்கினையும் அவள் எதிர்பார்த்தபோது அவனுக்கு அதிர்ச்சியாக இருந்தது. தானும் வேலை பார்ப்பதுவும் தனக்கும் இருக்கக் கூடிய அயர்ச்சியையும் களைப்பையும் கூறி மறுத்தபோது படித்ததனால் வந்த தலைக்கனம் என்றே தோன்றியது.

காலையில் இருந்து மாலை வரை சண்டை போடுவதற்கென்றே பொழுது விடிவதாக அவனுக்குத் தோன்றியது. anatomy is not destiny என்ற அவளது வாதம் தான் அவனை மிகவும் கோபப்படுத்தியது. தாய்மையும் இனப்பெருக்கமும் இயற்கையின் தேவையாக பெண்ணை அடங்கிப் போதல் ஒன்றிற்குத் தானே வழிகாட்டுகின்றது. இது தானே காலம் காலமாக சொல்லப்பட்டிருக்கின்றது. அவளுடைய வார்த்தைகள் இந்த சமூகத்தின் அடித்தளத்தையல்லவா புரட்டிப் போடப் போகின்றது. அவன் மிகவும் பயந்தான். தன் மேலாண்மையை கேள்விக்குள்ளாக்கும் அவளை சகித்துக் கொள்ள முடியாதிருந்தது. என்ன மாதிரியான ஒரு பெண் இவள். ஏன் மற்றவர்களைப் போல இவள் இல்லை. கணவனை வேலைக்கனுப்பி மாலையில் எதிர்பார்த்து பணிவிடை செய்து மஞ்சத்தில் சுகம் தந்து ... இதுவல்லவோ வாழ்க்கை. தன்னைத் தவிர ஆண்கள் எல்லோருமே அதிர்ஷ்டசாலிகளாகவே அவனுக்குத் தோன்றியது. தனக்கு மட்டும் ஏன் இப்படி வாய்த்திருக்கின்றது.

பிள்ளையைப் பெத்துக் கொண்டது மகாதப்பு என்று இப்போது தோன்றியது. இவளை விட்டு ஓட முடிந்தாலும் அந்த பிஞ்சுக்குழந்தையை விட்டு ஓட முடியும் என்று அவனுக்குத் தோன்றவில்லை. தன்னிடம் மட்டும் குழந்தையைத் தந்துவிட இந்த ராட்சசி ஒரு போதும் ஒத்துக் கொள்வாள் என்றும் தோன்றவில்லை. தன்னைப்போல இன்னும் ஒரு பெண்ணாகத் தான் அவள் இந்தப் பெண்குழந்தையையும் வளர்க்கச் செய்வாள். என் அம்மாவைப் போல் இந்தக் குழந்தையும் வளர்ந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். குடும்பக் கெளரவத்தை எப்போதும் விட்டுக் கொடுக்காது அடுக்களையுள் மட்டும் தன் துக்கத்தையும் கண்ணீரையும் துடைத்துக் கொள்ளும் அம்மா. கோபத்தையும் துக்கத்தையும் வீட்டினுள்ளேயே அடைத்து வைத்து வெளியுலகில் மஞ்சள் குங்குமத்துடன் பெரு வாழ்வு வாழும் அம்மா. பெண்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு அவன் அம்மாவை விட பெரிய சாட்சியம் யாரும் இருக்க முடியாது. காலால் இட்ட வேலையை தலையால் செய்யும் அம்மாவை அவன் பெரிதும் நேசித்தான். அவளைப் போலவே தனக்கும் ஒரு பெண் கிடைக்க வேண்டுமென்ற அவன் கனவு ஆசை எல்லாம் மண்ணோடு மண்ணாய்ப் போய் விட்டது.

இடையிடயே இரைந்து செல்லும் வாகனங்களைப் போல அவன் வாழ்விலும் அங்கொன்றும் இங்கொன்றுமாக சில சந்தோஷங்கள் இருக்கத் தான் செய்தது. அவள் ஈஷலும் நெருக்கமும் சலனமில்லாக் குளத்தில் தோன்றி மறையும் குமிழிகள் போல் தோன்றித் தோன்றி மறைந்தன. அது மட்டுமா வாழ்க்கை? கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன் என்று போற்ற மறுக்கும் இவள் அவன் மனதை எத்தனை தூரம் காயப் படுத்தியிருக்கின்றாள். கணவனிடம் அடங்கி அன்பைப் பெறுவதைத் தவிர வாழ்க்கை என்று இவள் எதைத் தான் சொல்லுகின்றாள் என்பது அவனுக்கு இன்னும் புரியாத புதிராகவே தோன்றியது.

கண்ணகி சீதை என்று எத்தனை உத்தமிகள் தோன்றிய மண்ணில் இப்படியும் ஒரு பெண்ணா ? கணவனை மதித்ததனாலன்றோ இன்றும் அவர்களை உலகோர் கொண்டாடுகின்றார்கள். படித்த இவள் இவை எல்லாவற்றையும் அறியாமல் போனது எப்படி. ஒரு ஆணாக அவனால் இதையெல்லாம் புரிந்து கொள்ள முடியாது தான். ஆண்களால் புரிந்து கொள்ள முடியாததால்த் தான் விவாகரத்திற்காக ஒரு கூட்டமே காத்திருக்கின்றது. அடங்காப் பிடாரிகளை மனைவிகளாகக் கொண்ட தன்னைப் போன்றவர்களால் வேறு என்ன தான் செய்ய முடியும் என்று அவனுக்குத் தோன்றியது. குழந்தைகளில் வைக்கக் கூடிய பாசத்தையும் குறைத்துக் கொள்ள பழக்கப் படுத்த வேண்டியது தான். கல் மனத்துடன் வாழ்வதற்கு மேற்கு நாட்டவரைப் போல வேறு பழக்கங்களையும் பழகிக் கொள்ளவேண்டும். மது கஞ்சா கட்டை போல.

முடியுமா என்பதற்கு முதல் ஏற்றுக் கொள்வார்களா ? என்று மற்றொரு பயம் தோன்றியது. காசி ராமேச்வரம் என்று கிளம்ப வேண்டியது தான். சன்னியாசிகளும் சாதுகளும் தானே வழிகாட்டியிருக்கிறார்கள். பாவம் அவர்களும் தான் எவ்வளவு பாடுபட்டிருப்பார்கள். சும்மாவா பட்டினத்தார் எல்லாம் இத்தனை பாடி வைத்திருக்கிறார். " பெண் என்னும் மாயப் பிசாசு" என்னைப் போல கஸ்ரப் பட்ட யாரோ ஒருவன் சொல்லிப் போயிருக்கிறான் . நூத்தில் ஒரு வார்த்தை. பெண்னின் சொல் கேட்டு சமையலுக்கு காய் கறி நறுக்குவதை விட இவையெல்லாம் கடினமாயில்லையா ? என்றொரு குரல் எங்கோ ஒரு மூலையில் கேட்டது. உன் சுக துக்கங்களில் பங்கு பெற வந்தவளை மகிழ்ச்சிப் படுத்துவது உனதும் மகிழ்ச்சியில்லையா? என்ற உறுத்தலை மூடி மறைத்துக் கொண்டான். மனம் ஒரு குரங்கென்று சும்மாவா சொல்லியிருக்கிறார்கள். அங்கும் இங்கும் தாவுவதைத் தவிர அதற்கு என்ன தான் தெரியும்.

கண்ணைத் திறந்து நேரத்தைப் பார்த்தான். 4.47 சிவப்பில் உறுத்தியது. இன்னும் விடியவில்லை. ஆனாலும் இனித் தூங்க முடியாது. படுக்கையில் இருந்து எழுந்து ஜன்னல் திரையை விலக்கி வெளியே பார்த்தான். மஞ்சள் வெளிச்சத்தில் தெரு பளிச்சென்று தெரிந்தது. வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்திருந்தது. Early birds இரை தேட வெளிக்கிட்டு விட்டார்கள். புழுக்கள் தூங்கிக் கொண்டிருக்கக் கூடும். எப்படியும் இரையாவதென்னவோ புழுக்கள் தான். வாழ்க்கை அப்படித்தானே இருக்கின்றது. மேலே அண்ணாந்து பார்த்தான். முழு நிலவு மேற்கில் சரிந்திருந்தது. தரையில் தெரியாத நிலவொளி. செயற்கை வெளிச்சங்கள் நிறைந்த இங்கு தேவையில்லாத நிலவொளி. சிம்னி விளக்கில் ஒளியைத் தேடும் கண்களில் பொக்கிஷமான பால் ஒளி. இங்கு தேவையில்லாது வீணாகிக் கொண்டிருக்கின்றது. நிலவிலும் கறை . இங்கு எதுவும் பூரணம் இல்லாதது . மேலும் கீழும் தொங்கிக் கொண்டிருக்கும் வாழ்க்கையப் போல.