Tuesday, January 31, 2006

முதல் சந்திப்பு

கண்ணிமை மூடுவதற்குள் -ஒரு
புன்னகை மலர்வதற்குள்

விரலின் நடுக்கம் உணர்வதற்குள்
விருட்டென்று
ஒட்டிக்கொள்கிறது பயம்

எல்லாக் கண்களும்
எங்களையே பார்ப்பது போல

இருந்த போதும்
என்னுள் ஏதோ
இடம் மாறிப்போய் விட்டது

Sunday, January 29, 2006

கறுப்புப் பூனை

வீட்டில் ஒரு கறுப்புப் பூனை இருந்தது. என்னுடன் மிகவும் நெருக்கமாய் இருந்தது. அல்லது நான் அதனுடன் நெருக்கமாய் இருந்தேன் என்றுதான் சொல்லவேண்டும். மனிதர்கள் என்னை ஒதுக்க ஒதுக்க அதனுடன் நெருங்கிப் போவது எனக்கும் இலகுவாயிருந்தது. அதனை முழுவதும் கவனித்துக் கொள்ளும் பொறுப்பும் என்னிடமே இருந்தது. செல்வத்தின் செழிப்பு அதனிடமும் சேரச் சேர மிகவும் கொழுப்புடன் காட்சியளித்தது. செல்வச் செழிப்பைக் காட்டிக் கொள்வதற்காக என் மனைவி ஒருமுறை கொண்டு வந்திருந்தது. கொண்டு வந்ததுடன் அவள் கடமை முடிந்து விடும். வருவோர் போவோருக்கான காட்சிப் பொருளாக அங்கே வளைய வந்து கொண்டிருந்தது என்னைப் போலவே. ஆனாலும் எனக்கு மட்டும் அதனிடம் நிறைய விடயங்கள் பிடித்திருந்தது. அதனுடைய கூரிய நகங்கள், பல்லின் கூர்மை , கோபச் சிலிர்ப்பு எல்லாமே பிடித்திருந்தது. இரவில் பளபளக்கும் கண்களின் பளபளப்பு. அதன் பின்னால் ஒளிந்திருக்கும் கொடூரம் எல்லாமே.

அதனை கோபப் படுத்தி ரசிப்பதே எனது பொழுது போக்காகியது. வேறு என்ன தான் செய்வது. வேலை வெட்டியில்லாது இருக்கும் எனக்கும் ஏதாவது வேலை வேண்டுமே. மனைவியின் பின்னால் கோட்டும் சூட்டுமாக போய் காட்சிப் பொருளாக நிற்பதை விடவேறு வேலையில்லாத நான் என்ன தான் செய்ய முடியும். எனக்கென்று எந்த அடையாளங்களும் இல்லாத அந்த இடங்களுக்குப் போவதையே வெறுக்கின்றேன். பணத்தின் செழிப்புடன் கண்களில் சதா போதையுடன் உலவும் அந்த இடங்களில் என்னால் ஒட்ட முடியாமல் போனது. தங்கள் 'பெற்'களைப் போலவே என்னையும் அறிமுகப் படுத்திக் கொள்ளும் பெண்களின் கூட்டம் அது. பணத்தில் திமிர்த்த கனவான்களின் கொழுப்பெடுத்த பெண்களின் கூட்டம் அது. சிரித்தபடியே நிற்பதைதவிர வேறு வேலை எதுவும் எனக்குக் கிடையாது. அவர்களின் 'பெற்'களின் கழுத்தில் ஒரு சங்கிலி இருக்கும், என்க்கு அது இல்லை என்பதைத் தவிர பெரிதாக வித்தியாசம் எதுவும் இருந்து விடாது. இந்த வேலை தீர்ந்த வேளைகளில் அந்தக் கறுத்தப் பூனையைக் கோபப்படுத்துவது தான் எனது வேலையாயிருக்கும். என்னாலும் ஒரு உயிரைச் சீண்ட முடியும் என்பதை நான் மறக்காமல் இருப்பதற்கும் இது ஒரு வகையில் எனக்கு உதவியாகத் தான் இருக்கின்றது. இல்லாவிட்டால் என் மனைவி சொல்வது போல் நான் ஒரு அப்பிராணி. அவளைப் பொறுத்த வரையில் அவளைச் சேர்ந்தவர்கள் சொல்லிக் கொள்வது போல் நான் ஒரு சாதுவான மனிதன் தான். எனது படிப்பும் தகமையும் ஒரு பொருட்டாக இல்லாத இந்தச் சூழலில் என்க்கு மிகவும் பொருந்திய வேடம் இதுவாகத் தான் இருக்கின்றது. ஒருவரின் துன்பத்துக்கும் போகாது எல்லாத் துன்பத்துக்கும் சிரித்துக் கொண்டிருக்கும் ஒரு மனதிற்கு சாது என்ற இந்த வேடம் நன்றாகவே பொருந்தி வருகின்றது. சாது என்ற வேடத்தை நான் துறந்து விட்டிருப்பது இந்த கறுத்தப் பூனையுடன் நான் இருக்கும் நேரங்களில் மட்டும் தான். அதனுடைய சிலிர்ப்பும் நகங்களின் நீட்சியும் என் மனதில் ஒரு உற்சாகத்தை ஏற்படுத்தும். இருட்டில் அதன் பளபளக்கும் கண்களைப் பார்ப்பதே சுகமாக இருக்கும்.

இப்படியான ஒரு காலையில் தான் அந்த செய்தி பெரிதாக அடிபட்டுக் கொண்டிருந்தது. ஒரு பெண்ணைக் கொலை செய்து அவள் உடலுறுப்புக்களை கண்ட கண்ட இடங்களில் போடப்பட்டிருந்ததை பொலீஸ் கண்டு பிடித்து நகரம் அல்லோலகல்லோலப் பட்டுக் கொண்டிருந்தது. என் மனைவியும் அவள் நண்பிகளும் அதைப் பற்றியே மாங்கு மாங்கென்று பேசிக் கொண்டிருந்தார்கள். அவர்களை அந்த நிகழ்வு பாதித்து விட்டிருந்தது என்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது. குப்பைக் கூடையில் கையின் ஒரு பாகம் கிடைத்ததை படம் போட்டுக் காட்டிக் கொண்டிருந்தார்கள். அதையும் பார்த்து தங்கள் கைகளையும் பார்த்து நடுங்கிக் கொண்டிருந்தார்கள் இந்தப் பெண்கள். அந்தக் கொடூரத்தை நேரிலேயே உணர்ந்தவர்கள் போல அவர்கள் பேசிக் கொண்டிருந்தது தான் விந்தையாக இருந்தது. உண்மையில் அதைச் செய்த யாரோ ஒருவன் இவர்களையும் நிறையவே பயப்படுத்தி விட்டிருந்தான். இப்படியும் மனிதர்கள் இருப்பார்களா என்று திட்டித் தீர்த்துக் கொண்டிருந்தார்கள். அது எப்படி நடந்தது ? எங்கே நடந்தது என்பது கேள்வியல்ல. எதனால் நடந்தது என்பது தான் கேள்வியாக இருந்தது. ஒன்று மட்டும் எனக்கு நன்கு விளங்கியது . இதனைச் செய்தவன் நல்லதொரு நடிகன் இல்லையென்பது மட்டுமே. ஆனாலும் என் மனைவி போன்றவர்களைப் பயப்படுத்திய வகையில் அவன் நல்லதையே செய்திருந்ததாகவே எனக்குப் பட்டது. என்னைப் போல் வேடம் போடுவது அதுவும் தொடர்ந்து செய்வது அவனுக்கு சாத்தியமில்லாமல் போய்விட்டது பாவம். என்னைப் போல் இன்னும் ஒருவன் என்பதை மட்டுமே விளங்கிக் கொள்ள முடிகின்றது. ஒவ்வொரு காரியத்துக்கும் ஒவ்வொரு காரணம் இருக்கக் கூடும். என்னை எது மாற்றியதோ அதைப் போல் அவனையும் மாற்றியிருக்கக் கூடும். மலர்களையும் மனிதர்களையும் நேசித்த என்னால் பூனையின் நகங்களையும் பளபளக்கும் கண்களையும் அதன் பின்னால் ஒளிந்திருக்கக் கூடிய கொடூரத்தையும் நேசிக்க முடிவதைப் போல மாற்றியிருக்கக் கூடும்.

மனதில் விழக்கூடிய அடிகளும் வேதனைகளும் கொடூரத்தை விதைத்துப் போகக் கூடும். பழி வாங்கும் எண்ணத்தை உசுப்பேத்தக் கூடும். இந்தக் கறுத்தப் பூனையைப் போல உடலைச் சிலிர்க்கச் செய்யும். பல்லைக் கூர் தீட்டி கழுத்தைக் கெளவச் சொல்லும். கண்களில் அத்தனை கொடூரத்தையும் தேக்கிப் பார்க்கச் சொல்லும். பழி வாங்கச் சொல்லும். என் மனைவியையும் நண்பிகளையும் பயப்படுத்திய அந்தச் செய்தி எனக்குப் பிடித்திருந்தது. என்னை மதிக்காத அவர்களை என் சார்பாக யாரோ பழி வாங்கியதாகவே நான் உணர்ந்தேன். அறையினுள் வந்த என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை. கட கடவென்று சிரித்தேன். பயங்கரமாகச் சிரித்தேன். பேய்ச்சிரிப்பு சிரித்தேன். பயித்தியக் காரனைப் போல சிரித்துக் கொண்டிருந்தேன். என்னையே பார்த்துக் கொண்டிருந்த அந்த கறுத்தப் பூனையையே பார்த்துக் கொண்டு சிரித்துக்கொண்டிருந்தேன். என் பார்வையிலிருந்து எதனை உணர்ந்ததோ அந்தப் பூனை பயந்து எழுந்து ஓடியது. பயந்து ஓடியதாகத் தான் பிறிதொரு வேளை சிந்தித்துப் பார்த்தபோது தோன்றியது.

அந்தப் பூனையும் அதிக நாள் என்னுடன் இருந்திருக்க முடியாமல் போனது. உடலில் கொழுப்பேறி ஒரு நாள் இறந்தே போய் விட்டது. ஆனாலும் அந்தப் பூனை என்னையே பார்த்துக் கொண்டிருப்பது போலவே தோன்றிக் கொண்டிருந்தது. கண்களின் பளபளப்பும் அதன் கோடூரமும் அறை எங்கும் நிறைந்திருப்பது போல தோன்றிக் கொண்டிருந்தது. சில வேளைகளில் என் மனதிற்குள்ளும் அந்தக் கண்களின் பளபளப்பு தோன்றத் தொடங்கியது. இப்போதெல்லாம் அது அடிக்கடி நிகழத் தொடங்கி விட்டது.

முதல் முதல் எப்போது இப்படித் தோன்றியது. ஆம் நினைவின் சிடுக்குகளிலிருந்து அந்தச் சம்பவம் ஞாபகம் வந்தது. சின்ன வயதில் பள்ளிக் கூடத்தில் நடந்தது. வகுப்பிலேயே மிகவும் கெட்டிக் காரனான எனக்கு அன்று என்ன நடந்தது என்று தெரியவில்லை. தந்த அத்தனை கணக்குகளின் விடைகளும் பிழைத்துப் போக பெரிய முட்டை ஒன்று கிடைத்தது. அது பொறுக்காத கணக்கு ஆசிரியை ஒவ்வொரு வகுப்பு வகுப்பாக கூட்டிச் சென்று எனது முட்டையைக் காட்டிக் காட்டி என்னை துவைத்துப் போட்டது இன்னும் மாறாத வலியோடு நினைவில் நிற்கின்றது. அவருக்கு அன்று என்ன பிரச்சனையோ என்னவோ. அன்று தான் என் மனதில் இருக்கும் கறுத்தப் பூனை உடல் சிலிர்த்து விழித்துக் கொண்டது. கால் நகம் கூர் தீட்டி அவர் கழுத்து நோக்கிப் பாய்ந்தது. குதறிக் கிழித்தது. அடங்காமல் நாட்களை கடத்தியது.

பின்னர் ஒரு முறை நகரத்துக் கல்லூரியில் சிலிர்த்துக் கொண்டது. பிடித்த பழங்களைப் பற்றி எழுதும் படி சொல்லப் பட்டது. நான் எனக்குப் பிடித்த நாவல்ப் பழம் பற்றி எழுதினேன். அவ்வைப் பாட்டியும் முருகப் பெருமானும் விளையாடிய சுட்ட பழம் சுடாத பழம் விளையாட்டில் இருந்து நாவல்ப் பழத்தின் மேல் ஒரு தீராத காதல். நன்கு கனிந்த பழங்களைப் பறித்து மணலில் எறிந்து நானும் முருகனைப் போல் விளையாடியிருக்கின்றேன். செடியைப் போன்ற சிறு மரத்தின் பருவத்திலேயே பழுத்துக் குலுங்கத் தொடங்கும் நாவல் பெரு மரமாகிப் போய் பட்டுப் போகும் காலம் வரை பழுத்துப் பழம் தரும். தண்ணீர் கவனிப்பு என்று எந்தத் தேவையும் இல்லாத நாவல் மணல் பூமியிலும் செழித்துப் பழுக்கும். காயில் பச்சையாயிருந்து செஞ்சிவப்பு நாவல் என்று நிறம் மாறிக் கோலம் காட்டும் நாவல் ஏழைகளின் பழமாகவே எப்போதும் இருந்திருக்கின்றது. நாவல்ப்பழத்தைப் பற்றி அருமை பெருமையாக எழுதி கொடுத்த போது அந்த ஆசிரியருக்கு நாவல்ப் பழத்தைப் பற்றி எதுவும் தெரியாதிருந்தமை தான் என் துயரமாகப் போய் விட்டது. பணக்காரப் பழங்களான அப்பிள் மா பலா என்று எதை பற்றியும் எழுதாத என் பிறப்புப் பற்றியும் அவருக்கு சந்தேகம் வந்திருக்க வேண்டும். 'எங்கே கிடைக்கும் இது ' என்று கேள்விக்கு 'காட்டில்' என்று உற்சாகமாக பதிலளித்த என்னை நின்று நிதானித்துப் பார்த்து விட்டு 'காட்டான்' என்று கூறி விட்டு நகர்ந்த போது மீண்டும் உடல் சிலிர்த்து நகம் கூர் தீட்டி அவர் குரல் வளை கடித்துக் குதறியது.

மூன்றாவது முறையாக திருமணத்தின் பின். என் படிப்பின் பெருமையையும் திறமையையும் கூடவே வறுமையையும் அறிந்து தன் மகளுக்காக என்னை விலைக்கு வாங்கிய பின் அது நடந்தது. எவ்வளவு சம்பளம் என்று கேட்கப் பட்டபோது பத்து விரல்களுக்குள் உள்ள என் வருவாயைப்பற்றிச் சொல்ல அந்த வீட்டில் வேலை செய்பவர்களின் கூலிக்கே போதாமையாகச் சொல்லப்பட்ட போது எப்படிக் குடித்தனம் கொண்டு போவது என்று நான் சிந்தித்துக் கொண்டிருந்தபோது என் சம்பளமே தேவையில்லை என்று மறுக்கப் பட்டது. அதாவது என் கனவுகளுக்கு வடிகால் அமைத்துக் கொண்டிருந்த வேலையுடன் எதிர்காலம் பற்றிய ஆசைகளும் அடித்து நொருக்கப்பட்டது. அப்போது அது நிகழ்ந்தது.

அதன் பின் அது அடிக்கடி உடல் சிலிர்த்து நகம் கூர் தீட்டி குரல்வளை குதற தூண்டப் பட்டுக் கொண்டிருந்தது. ஆனாலும் மற்றவர்களின் பார்வையில் சாது என்ற என் வேடம் மட்டுமே தெரிய அதுவும் பிரியமுடன் ஏற்றுக் கொள்ளப் படுகின்றது. கண்கள் பளபளக்க நினைவுகளைக் கொன்று கொண்டிருந்தேன். மனதிற்குள் பூனையின் கண்களும் அதன் பின்னான கொடூரமும் தெரிய கீழிருந்து அழைப்பு கிடைத்தது. இன்னமும் சந்தர்ப்பம் கிட்டாத எல்லோரையும் போல மற்றவர்களுக்காக வேடம் போட கறுப்புப் பூனையை ஒதுக்கி விட்டு விரைகின்றேன்.

நோவாவின் உலகமும் செளமியின் பிறந்த நாளும்

செளமி என் குழந்தை. நான்கு வயதுக் குழந்தை. தத்துப் பித்தென்று மழலை பேசி எங்களைச் சந்தோஷக் கடலில் மூழ்கடிக்கவென்றே இறைவன் அனுப்பி வைத்த குழந்தை. நோவாதான் யாரென்று உங்களுக்குத் தெரியுமே. இன்றைய உலகத்திற்கு யார் யாரெல்லாம் தேவை என்று நினைத்தாரோ அவர்களையெல்லாம் பெரீய படகில் ஏத்தி காப்பாத்தினவர். எவ்வளவு பெரீய படகாயிருந்திருக்கும். உலகத்தில் இருக்கின்ற ஒவ்வொரு உயிரினத்திலும் ஒவ்வொரு ஜோடியாக ஏத்துவதென்று சொல்லப்பட்டாலும் அதற்கு எவ்வளவு பெரிய படகு வேண்டியிருந்திருக்கும். பிரளயத்தில் எவ்வளவு பெரிய அலை எழும்பக் கூடும். பத்து அடி பதினைந்து அடியென்று கணக்குப் பார்க்க முடியாது தான். இதைவிடப் பெரிய அலைகளையெல்லாம் தாக்குப் பிடித்திருக்க வேண்டும். என்னமோ தாக்குப் பிடித்ததும் அதனால் இன்றைக்கு உலகம் என்று ஒன்று இருப்பதும் தான் உண்மையாயிற்றே. அதனால் மிகப் பெரீய்ய படகாய் இருந்திருக்கக் கூடும். அதுவா இப்போ பிரச்சனை. மனிதரிலும் ஒரேயொரு ஜோடி. ஒரே நிறம் குணம் இருந்திருக்க வேண்டும். அப்படித்தான் இல்லையே. எத்தனை நிறம் குணங்களுடன் மனிதர்கள். மனிதர் மட்டுமா ? எல்லாம் தான் அப்படி இருக்கின்றது. நான் ஓடிக்கொண்டிருக்கும் இந்த ட்ரக் வண்டியைப் போல. பல வடிவங்களில் பல குணங்களில். ஒரு யானையைக் கட்டி இழுத்துப் போவதைப் போல. அறுபதடி நீளத்தில் இழுபட்டு வருகின்றது.

வீதியில் ஓடுவதில் இதுதான் பெரிய வாகனமாயிருக்க வேண்டும். சமயத்தில் வீதியைத் தாண்டியும் இடம் வேண்டியிருக்கின்றது. எல்லா வாகனமும் நின்று பார்க்க இந்தப் பெரிய ட்ரக் வண்டி சுழன்று திரும்பி வர அதற்குள் நானிருக்க , பெருமையாகத் தானிருக்கின்றது. ஆனால் வாழ்க்கை தான் பெருமையாக எப்பொழுதும் இருக்கின்றதில்லை. மடியில் பிடித்துக் கடனட்டை தந்த கடன் காரர்கள் கழுத்தைப் பிடித்து நெருக்க வாழ்க்கை மூச்சுத் திணறுகின்றது.
செளமிக் குட்டியின் பிறந்த நாள் நெருங்க நெருங்க மூச்சுத் திணறல் அதிகரித்துப் போகும். செளமிக் குட்டியின் உலகம் வேறு. அங்கு ஆடலும் பாடலும் தான் பிரதானம். விதம் விதமான தேவதைகள் இருக்கின்ற உலகம். சிண்ரரெல்லா, லிற்றில் மார்மெயிட், போன்ற தேவதைகளும் வின்னித பூ, மிக்கிமவுஸ் போன்ற குறும்புக்கார மிருகங்களும் இருக்கின்ற உலகம். எங்கள் உலகத்தைப் போல மனித உருவில் விலங்குகள் இருக்க முடியாத உலகம். மிருகங்களே தங்கள் கொடூரம் எல்லாம் மறந்து நட்பாக உலவக் கூடிய உலகம் அது. ஆந்தையும் முயலும் கரடியும் சிங்கமும் சேர்ந்து வாழக் கூடிய உலகம். அம்மாவின் மிரட்டலோ அப்பாவின் கர்ச்சிப்போ சாத்தியமாகாத உலகம். ஒரு பிறந்த நாள் முடிந்த ஒரு கிழமைக்குள் அடுத்த பிறந்த நாளுக்கான தேவைகளின் பட்டியல் கணக்கிடப்பட்டுக் கொண்டு போகும் உலகம். அவர்களுக்கு வசதியாகவே கிட்ஸ் சனல்களில் அப்பாக்களின் தலையை மொட்டையடிப்பதையே குறிக்கோளாகக் கொண்ட நிறுவனங்களின் விளம்பரங்கள் கண்ணைக் கவரும் விதத்தில் விற்பனையாகும். ஆடைகள் அணிகலன்கள் என்று உங்களைப் பொறுத்தவரை சதம் பெறாத பொருட்களெல்லாம் ஆனை விலை குதிரை விலைகளில் விற்பனையாகும். செளமியைப் பொறுத்தளவில் அவையெல்லாம் விலை மதிப்பில்லாத பொக்கிஷங்கள். உங்களுக்கு உங்கள் குழந்தையை போல விலை மதிப்பில்லாத பொக்கிஷமாய் இருக்கும் வரை நீங்களும் செலவு செய்ய தயாராயிருக்க வேண்டும்.

இப்படித் தான் எனக்கும் ஒரு பெரிய பட்டியல் தரப்பட்டிருக்கின்றது. எனது உலகப் பிரச்சனைகளையெல்லாம் புறந்தள்ளி விட்டு கவனிக்கப் பட வேண்டிய முன்னுரிமையை அவை எடுத்துக் கொண்டிருக்கின்றன. ஐம்பதினாயிரம் கடனைத் தந்து விட்டு அதில் வரும் வட்டியை வைத்து வேறு என்ன செய்வது என்று இரவு பகலாக தலையைப் பிய்த்துக் கொள்ளும் பொருளாதார விற்பன்னர்களுக்கு இந்த மாதம் வட்டி வரவே வராது என்று எப்படிப் போய்ச் சொல்ல முடியும். செளமியின் உலகத்தில் பிறந்த நாளில் இருக்கக் கூடிய பிறந்த நாள் பலூன்களும் அலங்கரிப்பும் சிண்ட்ரெல்லா அலங்கரிப்புக் கேக்கிற்கும் உள்ள முக்கியத்துவம் பொருளாதாரப் புள்ளிகளுக்கில்லை என்பதை எப்படிச் சொல்ல முடியும்.

அப்பா நெக்ஸ்ட் பேர்த் டே யாருக்கு? என்று ஒரு வருடமாகக் கேள்வி கேட்டு ஆசைகளை வளர்த்துக் கொண்டிருக்கின்ற குழந்தைக்கில்லாத முக்கியத்துவம் யாருக்கு இருக்கக் கூடும். எல்லோரது ஆசைகளையும் பூர்த்தி செய்ய வேண்டிய கட்டாயம் உள்ள மனிதனாகத் தானே நோவா தெரிவு செய்த எனது ஆதி மனித ஜோடி இருந்திருக்கின்றது. இல்லையென்றால் ஆளாளுக்கு ஒவ்வொன்றைச் சொல்லி இந்த உலகத்தை இத்தனை துண்டுகளாக உடைத்துப் போட்டிருக்க முடியுமா ? அந்த ஆதி மனிதனின் குணம் எனக்கும் இருந்த படியால் எட்டு மணித்தியாலமாக இருந்த வேலை நேரத்தைப் பத்து மணித்தியாலமாக உயர்த்தி இந்த உலகம் உய்வடைய கடுமையாக உழைக்கத் தொடங்கினேன்.

செளமியின் உலகம் மகிழ்ச்சியுடனேயே இருக்கவும் என் உலகில் என் மான அவமானங்களை சமாளிக்கவும் இது போதும் என்ற ஒரு கணிப்புடனும் எனது வேலை நேரம் நீண்டு கொண்டிருந்தது. ஆனாலும் எனது உலகின் பிரச்சினையை செளமி தனது உலகத்தைப் புரிந்த அளவிற்குக் கூட நான் புரிந்து கொள்ள வில்லை என்பது விரைவிலேயே தெரிய வந்தது. கம்பனியின் முதலாளி என்னைக் கூப்பிட்டு உலகப் பொருளாதாரத்தின் வளர்ச்சியையும் தேய்வையும் விளங்கப் படுத்தி நீண்ட பிரசங்கம் அடித்த பொழுது ஏன்? எதற்கு என்று எதுவும் புரியாது இதற்கும் எனக்கும் என்ன சம்பந்தம் என்று குழப்பம் ஏற்பட்டாலும் இறுதி வரிகள் மட்டும் குழப்பமின்றி நன்கு விளங்கியது. " ...அதனால் உனக்கு இனி இங்கு வேலையில்லை. "

நோவாவின் பிரளய காலத்தின் அலைகள் என் மனதில் எழ மூச்சிழந்து நின்றேன். இந்த பொருளாதார ஏற்றமும் தாழ்வும் எனக்குப் பின்னால் வேலையில் சேர்ந்திருக்கக் கூடிய அவர்களைத் தாக்காமல் பெரும் பாலும் என்னைப் போன்ற கறுப்பர்களையே தாக்குவதையும் என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. என்னுலகத்தில் எத்தனையோ புரியப் படாத விடயங்களைப் போல இதுவும் ஒன்றாயிருக்கக் கூடும். செளமியின் உலகத்தில் அழுகையுடனும் துக்கத்துடனம் கூடிய எவரையும் நான் இதுவரை காணவேயில்லை. அந்த உலகத்துள் நானும் வாழ முடிந்தால் எவ்வளவு நன்றாயிருக்கும். செளமியின் உலகத்தை உருவாக்குபவர்களும் என்னைப் போல நினைப்புள்ளவர்களாய் இருக்கக் கூடும். நோவாவின் உலகத்தில் இருக்கக் கூடிய எந்தவிதக் கரிப்பும் இல்லாத உலகை செளமிக்காக உருவாக்கி வைத்திருக்கின்றார்களே.

Saturday, January 28, 2006

பசி

மூணு நாளாப் பெய்த மழை விட்டு சற்று ஓய்ந்திருந்தது. மரங்களின் இலைகளிலிருந்து சொட்டுச் சொட்டாகச் சொட்டிக்கொண்டிருந்த நீர்த்துளிகள் இன்னும் கோடு கிழித்து சிறு ஓடையாக ஓடிக்கொண்டிருந்தது. ஈரத்தின் சில்லிப்பை சிறகுகளை விசுறி காயப் பண்ணும் முயற்சியில் பறவைகள் சடசடவென ஒலியெழுப்பிக் கொண்டிருந்தன. மழை அடங்கி விட்ட இடை வெளியில் இரை தேடும் முஸ்தீப்பில் அவை ஈடுபட்டுக் கொண்டிருந்தன. அப்படி ஒரு அடை மழை அடித்து ஓய்ந்து விட்டிருந்தது. ஓயாது பெய்த மழை இலைகளையும் பழுப்புகளையும் அள்ளிப் போட்டு குப்பைக் காடாக ஆக்கிவிட்டிருந்தது. மழையுடன் கூட்டுச் சேர்ந்து அடித்த காற்றில் முறிந்த கொப்புகளும் கிளைகளும் பாதையை அடைத்து போக்குவரத்தைத் தடை படுத்திக் கொண்டிருந்தன.

அங்கொன்றும் இங்கொன்றுமாக புறப்பட்ட மனிதர்கள் கொப்புகளையும் கிளைகளையும் அகற்றிய படியே தம் பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருந்தனர். ஈரமண்ணின் மணம் நாசியத் துளைத்துக் கொண்டிருந்தது. வானத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக சிதறிக் கிடந்த மேகங்கள் ஒன்று கூடும் முயற்சியில் ஓடிக் கொண்டிருந்தன. கிழக்கின் மூலையில் திரண்டு கொண்டிருந்த கரு மேகங்கள் இன்னுமொரு மழை வரக் கூடுமென அறிவுறுத்திக் கொண்டிருந்தன. கிடைத்த அவகாசத்தில் காரியமாற்றும் உந்துதலில் மக்கள் ஓடிக் கொண்டிருந்தார்கள்.

அந்த குடிசைப் பகுதி மழையில் நன்கு பாதிப்படைந்திருந்தது. நைந்து போன ஓலைக்கீற்றுகளின் தாங்கு சக்தியை மீறி நீர் உட்புகுந்து அனைத்தையும் நனைத்து விட்டிருந்தது. மழையைத் திட்டிய படியே வீரியமின்றி விசிறியடித்த சூரியக் கதிர்களில் அவற்றைக் காய வைக்கும் முயற்சியில் சிலர் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். நண்டும் சிண்டுமான சிறு குழந்தைகள் நீண்ட ஒதுங்கியிருப்பின் பின்னான சுதந்திரத்தில் ஹோவெனக் கத்தியபடி ஓடி விளையாடிக் கொண்டிருந்தனர்.

சின்னாத்தா மெள்ள வெளியில் வந்து எட்டிப் பார்த்தாள். ஈரலிப்பைக் கால்கள் உணர உடல் ஒரு முறை சில்லிட்டுத் தூக்கிப் போட்டது. சிலு சிலுத்து வீசிய காற்று ஈரலிப்பை அள்ளி வந்து முகத்தில் வீசியது. தொடர்ந்த மழைகாரணமாக வயல் வேலையும் இல்லாது பண வரவு தடைப் பட்டு விட்டிருந்தது. அன்னாடம் காச்சியான அவளிடம் இருந்த ஒரு சிறங்கை அரிசியும் நேற்று கஞ்சியாக மாறியதுடன் முடிந்து விட்டது. நேற்றைய பசியில் ஒரு நேரத்தைக் கஞ்சி தீர்த்து விட்டது. அதன் பின் பசிவந்தபோதெல்லாம் பச்சைத்தண்ணீரைக் குடித்தே சமாதானமாகிக் கொண்டிருந்தாள். மழை விட்டு விடும் விட்டு விடும் என்ற எதிர்பார்ப்பு இப்போது தான் நிறை வேறி யிருந்தது. இனி வயல் வேலை தொடங்கு மட்டும் யாரிடமும் கடன் வாங்கித் தான் பிழைக்க முடியும். பக்கத்து வீட்டுச் செல்லம் இவளை கண்டதும் முகத்தை தோள்பட்டையில் இடித்து திரும்பிக் கொண்டாள். நான்கு நாளைக்கு முதல் வயற்காட்டில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முத்தி குடுமி பிடிச் சண்டையில் முடிந்து விட்டிருந்தது. அந்தரம் அவசரத்திற்கு அரிசி சாமான் என்று கடன் வாங்கக் கூடிய உறவும் இன்று உதவாத நிலையில் இருந்தது. இன்னும் நாலு நாள் ஆகும் இந்தப் பகை நீங்கி சுமுகம் திரும்ப, அது வரை ஆளையாள் பார்க்கும் போதெல்லாம் இந்தச் சிலுப்பல் மட்டும் நிலைத்திருக்கும். அவர்களுக்கிடையிலுள்ள அரசியல் அது. அவர்களின் வாழ்க்கையையும் சுவைப் படுத்திப் போகும் விடயங்களிலொன்று இந்தச் சண்டையும் சச்சரவும். செல்லத்தின் புருஷன் வெளியில் வரவும் இவள் சர்க்கென்று உள்ளே பகுந்து கொண்டாள்.

வயிறு தீயாகக் கனிந்து கொண்டிருந்தது. ஒரு சுண்டு அரிசி கிடைத்தாலும் போதும் என்ற மன நிலையில் இருந்தாள். மழை இப்படியே விட்டு விட்டால் நாளைக்கு ஏதாவது வேலை கிடைத்து விடும் . இன்றைய பொழுதைப் போக்காட்டி விட்டால் எல்லாம் சரி வந்து விடும். அவள் மனம் கணக்குப் போட்டபடி யாரிடம் உதவி கிடைக்கும் என்று எண்ணிப் பார்த்தது. அக்கம் பக்கம் இருந்தவர்கள் எல்லாம் அன்னாடம் காச்சிகள். காசு பணமாக இல்லாவிட்டாலும் அரிசி பருப்பாக ஏதாவது கிடைக்கக் கூடும். தேவையில்லாமல் அவள் புருஷன் நினைவில் வந்தான். இரண்டு வருடங்களின் முன் அவளை விட்டு விட்டு எவளோடோ ஓடிப் போன அவன் நினைவு வந்து தொலைத்தது. பிள்ளை இல்லை பிள்ளை இல்லையென்றே அவளைத் துவைத்தெடுத்த அவன் ஒரு நாள் சொல்லாமல் கொள்ளாமல் ஓடி விட்டிருந்தான். இருக்கிற நிலமைக்கு பிள்ளையிருந்திருந்தாலும் பிறகென்ன ... முகத்தை கோணலாக்கி அழகு காட்டிக் கொண்டாள். ஓடுறதுக்கு ஒரு சாட்டு வேணும். அவனுக்கு பிள்ளை யில்லாதது ஒரு சாட்டு, பாவி மனுஷன் ... மனதுக்குள் திட்டிக் கொண்டிருந்தாள். அவன் இருக்கும் வரை இவ்வளவு கஷ்டம் இருந்ததில்லை. நாலு நாள் வேலை வெட்டியில்லை என்றாலும் சமாளித்துக் கொண்டிருந்தார்கள்.

வயிற்றுப் பசியில் முகத்தைச் சுருக்கியவள் தலையை சிலுப்பி பழைய எண்ணங்களைத் துரத்தி விட்டாள். நாலு வீடு தள்ளியிருந்த பொன்னம்மாக்காவின் நினைவு வந்தது. யாராவது போய் கிடைக்கக் கூடிய உதவியையும் பெற்றுக் கொள்வதற்கு முன்னர் முந்திக் கொள்ள வேண்டுமென நினைவு தட்டியது. எத்தனை வயிறு பசியில் எரிந்து கொண்டிருக்கின்றதோ ? அன்னாடம் காச்சிகள் ..ஒருவருகொருவர் உதவி செய்வதும் உதவி பெறுவதும் வழமையாகி விட்டிருந்தது. வெளியில் வந்தவள் முத்தத்தில் கால் வைக்கும் பொழுதே மீண்டும் மழை பிலுபிலுவெனப் பிடித்துக் கொண்டது. அடச்சீ ..என அலுத்துக் கொண்டவள் குடிசையின் தாழ் வாரத்திலேயே குந்திக் கொண்டாள்.

அடை மழை பிடித்துக் கொள்ள தெருவில் சென்றவர்கள் கிடைத்த தாழ்வாரங்களில் ஒதுங்கிக் கொண்டார்கள். இவள் குடிசையிலும் ஒருவன் ஒதுங்கிக் கொண்டான். குடித்திருந்தான். தனக்குள் ஏதோ புலம்பிய படி மெலிதாகத் தள்ளாடிக் கொண்டிருந்தான். நாலு வீடு தள்ளியிருக்கும் சின்னான். குடும்பமோ குட்டியோ இல்லாத தனிக் கட்டை. வேலை கிடைத்தால் செய்து கள்ளுக் கடையிலேயே அனைத்தையும் விட்டுக் கொண்டிருந்தான். அந்த மாலை மங்கிய வெளிச்சத்திலும் அவன் முகத்தையும் அதன் உணர்ச்சிகளையும் பார்க்கக் கூடியதாயிருந்தது. யாரையோ அவன் திட்டிக் கொண்டிருந்தான். கள்ளுக் கடையில் யாருடனும் பிரச்சனைப் பட்டிருப்பானோ ? அவன் உளறல்களில் இருந்து அவளால் எதையும் புரிந்து கொள்ள முடியவில்லை. இப்பிடி குடித்து செலவழிக்கவும் சிலருக்கும் பசியில் துடித்து மடியவும் சிலருக்கும் விதியிருப்பது அவளை வேதனைப் படுத்தியது. அவன் கையில் இருந்த பையில் இருந்து வந்த வாசனை மூக்கைத் துளைத்தது. சாப்பாடு வாங்கி போறான் போல எண்ணியவள் , அந்த வாசனையை நன்றாக இழுத்து விட்டுக்கொண்டாள். அந்த வாசனை இன்னும் அவள் பசியைத் தூண்டி விட்டது. ஒரு ஆவேசம் வந்தது போலவே அந்தப் பையை அவள் பார்த்துக் கொண்டிருப்பதை அவனும் கவனித்து விட்டிருந்தான். அவனை போலவே அன்னாடம் காச்சிகளின் பசியை அவனும் உணர்ந்திருந்தான். 'என்னா.. வாணுமா ? ' அவன் வார்த்தைகளை முழுமையாகப் புரிந்து கொண்டவள் திடுக்கிட்டு நிமிர்ந்தாள். அவன் தன்னைத் தான் கேட்கின்றான் என்பதைப் புரிந்து கொண்டவள் பசியின் ஆசையையும் தனது வெட்கம் கெட்ட நிலையையும் வெளிப்படுத்த முடியாது தலையைக் குனிந்து கொண்டிருந்தாள். 'இந்தா துண்ணு ' பையை அவளிடம் நீட்டியவனையும் பையையும் மாறி மாறிப் பார்த்தாள். ஆசை வெட்கம் அறியாது பையை வாங்கியவள் குடிசையின் கதவைத் திறந்து உள்ளே போனாள். கதவை மூடாமலே விட்டு சிமினி விளக்கை கொளுத்தி வைத்தாள். பையைத் திறக்கப் போனவள் வாசலில் நிழலாடுவதைப் பார்த்து 'மழை கொட்டுது உள்ளே வா' என்றாள். அவன் உள்ளே வந்ததையும் பொருட்படுத்தாது அள்ளி அள்ளி தின்னத் தொடங்கினாள்.
இரண்டு நாள் பசி அவளை இயந்திரமாய் இயக்கியது. அவளையே பார்த்துக் கொண்டிருந்தவன் கண்களில் சரிந்து கிடந்த முந்தானையின் இடையில் துள்ளித் திமிறிய சதைகளின் திரட்சி தட்டுப் பட்டது. போதையில் துடித்த நரம்புகளில் புது அலை துடித்துப் பரவியது. தற்செயலாக அவன் கண்களைப் பார்த்தவள் அவன் கண்கள் போகும் இடத்தை கவனித்தாலும் அதைப் பொருட்படுத்தாது சாப்பிடுவதிலேயே குறியாயிருந்தாள். சாப்பிட்டவள் பாதியை அவனுக்காக சுத்தி வைத்தாள். அவன் தலையிலிருந்து மழை நீர் சொட்டிக் கொண்டிருந்தது. கொடியிலிருந்த துவாலையை எடுத்து அவனிடம் கொடுத்தாள். கொடுத்த கையை இழுத்து அவளை மல்லாக்காக சரித்தவன் அவள் மீது படர்ந்தான். அவன் பசி அடங்குவதற்காக அவள் காத்துக் கொண்டிருந்தாள். மழை மண்ணை நனைத்து ஈரப்படுத்திக் கொண்டிருந்தது.

Saturday, January 21, 2006

வா பெண்ணே

பெண்ணே !
ஒளிரும்
நிலவைப் பார்

வண்டுகளின்
இசையைக் கேள்

தோட்டத்தின்
மலர்களைப் பார்

கடலின்
தாலாட்டைக் கேள்

இவையெல்லாம்
யாருக்காக

பயன் கருதா
கருமம் போல

முடிவறியா
இயற்கை நிரப்ப

பிரபஞ்சத்தின்
பசியைப் போக்க

மண்ணில்
விதையைத் தூவ

வா
என்னுடன்
கலந்து விடு

காற்றின்
திசையை அறிவோம்

திக்கின்
எல்லை உணர்வோம்

மனதின்
தொடர்பு அறிவோம்

இதுவே,
வாழ்வின்
முழுமை என்போம்.

வீழ்ச்சியல்ல

விழுவது
வீழ்ச்சியல்ல
விழுவது
எழுவதற்காக

எழுவது
எழுச்சியல்ல
எழுவது
வாழ்வதற்காக

வாழ்வது
வாழ்வல்ல
வாழ்வது
சுதந்திரமாக

சுதந்திரம்
வாழ்க்கை

சுதந்திரம்
ஆனந்தம்

சுதந்திரம்
உயிர்ப்பு

அதனால்,

வானம் வசப்படும்
காற்று இசைபடும்

இதயம் ஒருப்படும்
உண்மை மெய்ப்படும்

விழுவது
வீழ்ச்சியல்ல

விதையும் விழுகிறது
மரமாக
எழுவதற்காக

அலையும் விழுகிறது
பேரலையாக
எழுவதற்காக

கதிரும் விழுகிறது
காலையாக
எழுவதற்காக

நானும் விழுகின்றேன்
சுதந்திரமாக
எழுவதற்காக

சுதந்திரம்
வாழ்க்கை

சுதந்திரம்
ஆனந்தம்

சுதந்திரம்
உயிர்ப்பு

ஒரு சொல்

உனக்காக
ஒன்று சொல்வேன்

நதியில்
நீர் இருப்பதும்

கடலில்
அலை இருப்பதும்

வானில்
நிலவு இருப்பதுவும்

மலரில்
நிறம் இருப்பதுவும்

உடலில்
உயிர் இருப்பதுவும்

அழகு தான்
அது போல்

மண்ணில்
நீயிருப்பதும்

உனக்காக
ஒன்று சொல்வேன்

உயர்வும் இல்லை
தாழ்வும் இல்லை

நிறமும் இல்லை
நிந்தனை இல்லை

மதமும் இல்லை
குணமும் இல்லை

இருப்பது,

ஒரு வாழ்க்கை
ஒரு உயிர்

புரிந்தால்
துக்கமில்லை

அறிந்தால்
துயரமில்லை

நினைந்தால்
போருமில்லை

உணர்ந்தால்
சிறுமை இல்லை

உனக்காக
ஒன்று சொல்வேன்

இருப்பது,

ஒரு வாழ்க்கை
ஒரு உயிர்.

வாழ்ந்து விடு

மேகத்தின் மேல்
பறக்கிறது பறவை

மலையின் மேல்
பிறக்கிறது நதி

வானின் மேல்
துளிர்க்கிறது மழை

மனதின் மேல்
எழுகிறது எண்ணம்

இவையனைத்தும்
தரையின் மேல்
வருவது நியதி

மண்ணின் கீழ்
மறைகிறது வேர்

இதயத்தின் கீழ்
இருக்கிறது காதல்

துன்பத்தின்கீழ்
துளிர்க்கிறது இன்பம்

இவையனைத்தும்
வாழ்வின் கீழ்
வருவதும் நியதி

மேலும் கீழும்
இருக்கிறது வாழ்க்கை

அதனால்
வாழ்ந்து விடு.

ஆண்பெண்

காற்றுக்கு
வடிவம் கோர்த்தால்
இசை

பூமிக்கு
வர்ணம் சேர்த்தால்
மலர்

மனதுக்கு
துணை சேர்த்தால்
காதல்

உன்னுடன்
எனைச் சேர்த்தால்
வாழ்க்கை

நீயில்லாமல்
நானிருப்பது
வாழ்க்கையல்ல

நானில்லாமல்
நீயிருப்பதும்
வாழ்க்கையல்ல

இணை சேர்ந்ததே
வாழ்க்கை

இன்பம் துன்பம்
இரவு பகல்

அது போல்
ஆண்பெண்

இதில்
உயர்வென்ன
தாழ்வென்ன ?

அதனால் உன்னோடு

அதனால் எதிரியே
உன்னோடு பேசுகின்றேன்

காற்றுக் கொரு
வேலி போட்டது யார் ?

காட்டுக் கொரு
எல்லை வகுத்தது யார் ?

புயலுக் கொரு
புதுவழி காட்டுவது யார் ?

சுதந்திரத்தின்
சிறகுகளை மறுப்பது கூடுமோ ?

அதனால் எதிரியே
உன்னோடு பேசுகின்றேன்

மரங்கள் பழுப்பது
எனக்காக

மலர்கள் மலர்வது
எனக்காக

கடல்கள் விரிவது
எனக்காக

காலங்கள் பிறப்பது
எனக்காக

அதனால் எதிரியே
உன்னோடு பேசுகின்றேன்

உன் வீட்டு
முற்றத்தை கேட்கவில்லை

உன் முற்றத்து
மரத்தை வெட்டவில்லை

உன் மரத்து
பழத்தை உண்ணவில்லை

உன் பழத்து
விதையை கவரவில்லை

உன் விதையின்
சுதந்திரத்தை பறிக்கவில்லை

என் சுதந்திரத்தின்
மதிப்பை உணர்கின்றேன்

அதனால் எதிரியே
உன்னோடு பேசுகின்றேன்

என் சுதந்திரம்
என்னோடு

உன் சுதந்திரம்
உன்னோடு

இந்த மண்
எம்மோடு

இதை புரிந்துகொள்
பண்போடு

அதனால் எதிரியே
உன்னோடு பேசுகின்றேன்.

Wednesday, January 18, 2006

மீண்டும் ......

வெளிறிப் பரவிய
வெளிச்சப்பொட்டு
களைத்து நிமிர்ந்த
கறுத்தப் பனை
ஓரத்தில்
சரிந்த தென்னை
வேலி இழந்த
வரிசைப் பூவரசு
மடக்கிப் போட்ட
கதவு
மக்கிப்போன
காவோலை
குமிந்துபோன
குப்பை வீடு

தலை
துவட்டிப்போகும்
புழுதிக்காத்து
கண்
கெளவிக்கொள்ளும்
ஒற்றையடிப்பாதை
கையசைக்கும்
மரங்கள்
காலிடைக்
குறுகுறுக்கும்
மண்துகள்கள்

பார்த்துக்
கொள்கின்றேன்
மீண்டும்
வந்ததற்காக அல்ல
மீளமுடியாக்
கணங்களை
நினைத்துக்கொள்ள.

Sunday, January 15, 2006

கோ.போ.து.கு

எழுத்தாளர் ஏகாம்பரத்துக்கு ஏக டென்ஷனாய் இருந்தது. அவனவன் எல்லாம் எழுதிக் கிழித்து ஏராளம் ஏராளமாய்ச் சம்பாதித்ததும் புத்தக வெளியீடு போக்கிலிப் போராட்டம் என்று பாவ்லா காட்டுவதும் கார் மோர் என்று பந்தா காட்டுவதும் டென்ஷனை ஏத்திக்கொண்டே இருந்தது.

போதாக்குறைக்கு மனைவி வேறு கீறிக் கிழித்து உப்புப் போட்டுக்கொண்டிருந்தாள். அருமை பெருமையாக வாசகக் கண்மணிகள் என்று யாராவது தேடிவந்து விட்டால் போயே போச்சுது. வார்த்தையாலேயே வகிர்ந்தெடுத்து விடுவாள்.

மனைவியின் வாயை அடைக்கவும் தன்னாலும் ஏதாவது எழுதிக்கிழிக்க முடியுமா என்ற சுய பச்சாதாபத்துடனும் இன்று ஏதாவது எழுதி தன் பெருமையை நிலை நாட்டிவிட வேண்டுமென்ற திண்ணத்துடன் உட்காந்தவர் தான். ஆச்சு ... ஐந்து மணி நேரம் ஓடிப் போனதுதான் மிச்சம். மனைவியும் ஒரு ந...... பார்வையுடன் தூங்கப் போய் ஒரு ரவுண்ட கனவும் கண்டு முடித்திருக்கலாம்.

எதை எழுதுவது என்பதையே இன்னும் தீர்மானிக்க முடியாதிருந்தது. எதை எழுத எடுத்தாலும் ய்ராவது உரிமைப் பிரச்சனை கிளப்பிக் கொண்டு வர சந்தர்ப்பம் இருந்தது. இருக்கின்ற பெயரையும் குழப்பிக் கொள்வதில் உள்ள சங்கடத்தையும் சரிவரப் புரிந்து கொண்டிருக்கின்றார்.

மனைவி வேறு எழுதிக்கிழிச்சாலும் என்று பயங்காட்டிக் கொண்டிருக்கின்றாள். எழுதிக் கிழிப்பதைப் பற்றி எழுதினால், அட நன்றாகத்தான் இருக்கின்றது. எழுதுக் கிழிப்பது என்றவுடன் எப்படி எழுத்தாளர் ஆவது என்பது பற்றியெல்லாம் எழுதப்போகின்றேன் என்று நினைத்துவிட்டீர்களாக்கும். அது தெரியாமல் தானே நநனே திண்டாடிக்கொண்டிருக்கின்றேன். நீங்க வேறு... எழுதியதைக் கிழித்து விட்டு என்ன செய்வோம். அது தாங்க அந்தக் குப்பைகளைப் பற்றித் தான் எழுதப் போகின்றேன். குப்பைகளைப் பர்றி எழுதுவதில் பல நன்மைகள் இருக்கின்றது. குப்பை எழுதியிருப்பதாக யாரும் வித்தியாசமாகக் குற்றம் சாட்ட முடியாது. பிடிக்கவில்லையென்றாலும் யாரும் கிழித்து குப்பையில் போட்டாலும் கவலை பெரிதாக இருக்கமுடியாது. இப்ப மட்டும் என்ன வாழுதாம் என்று நீங்கள் முணுமுணுப்பதும் எனக்குக் கேட்கின்றது.

சரி குப்பையைப் பற்றி எழுதுவது என்று தீர்மானித்தாகிவிட்டது. என்ன தலைப்பு வைப்பது. எழுதுவது குப்பையாக இருந்தாலும் பார்க்க - படிக்க வேண்டுமென்று நான் சொல்லவில்லை- வேண்டுமென்று தூண்டுவது தலைப்புத் தானே. குப்பையாய் இருப்பதில் என்ன பெருமை இருக்கின்றது. குப்பையாக இருந்தாலும் மேலே போனால் தானே மதிப்பிருக்கின்றது. கோபுரத்தில் இருக்கும் போது கிடைக்கின்ற மதிப்பு குப்பையில் இருந்தால் கிடைக்குமா ? கோபுரத்திற்கு போகத் துடிக்கும் குப்பைகள். கோ. போ. து .கு இப்போது மேலே பாருங்கள்.

சரி தலைப்பும் வைத்தாகிவிட்டது. என்ன எழுதவேண்டுமென்றும் தீர்மானித்தாகி விட்டது. இனி குப்பைகளை மேலே அனுப்ப என்ன வேண்டும். காற்று ... அதுவும் சூறாவளியாகச் சுத்தியடிக்கும் காற்று.

சரி இப்படி ஆரம்பிப்போம். 'சூ ' வென்று சுழன்றடிக்கும் காற்று . அப்போ எங்கு பார்த்தாலும் குப்பைகள் .... குப்பைகள்.... பல வர்ண நிறங்களில் ...... பச்சை மஞ்சள் சிகப்பு..... காகிதக் குப்பைகள் ..... பிளாஸ்ரிக் குப்பைகள் ....மனிதக் குப்பைகள் ....... சீ இப்படிச் சொல்வது ஜனரஞ்சகமாய் இல்லை. நாளைக்கு ஜனரஞ்சக எழுத்தாளன் என்று பெயர் வரக் கூடிய சந்தர்ப்பத்தையும் எதற்காக கெடுத்துக் கொள்ள வேண்டும். அதற்காக ஜனரஞ்சக எழுத்தாளன் அப்படியென்றால் என்ன என்று ஏடா கூடமாகக் கேள்விகள் எல்லாம் கேட்கக் கூடாது.

எங்கு பார்த்தாலும் குப்பைகள். குப்பைகள் தங்களுக்குள் பேசிக் கொள்கின்றன. நீங்கள் ஏதோ கேட்கவருவது விளங்குகின்றது. தயவு செய்து என்னைக் குழப்ப வேண்டாம். என்னவென்றாலும் எழுதி முடித்த பின் கேளுங்கள். குறுக்குக் கேள்வி கேட்டால் என் கற்பனை குலைந்து விடக் கூடிய அபாயமும் இருக்கின்றது. அதனால் என்ன வந்து விட்டது என்று இடக்கு முடக்காகக் கேள்விகள் கேட்காது நான் சொல்ல வருவதை மட்டும் கேளுங்கள். அப்போது தான் நல்ல வாசகப் பரம்பரை உருவாகும். அப்படி சொல்வது என்னவென்று கேட்கத் தோன்றினால் மீண்டும் இரண்டு வரிகளின் முன்னால் இருந்து வாசிக்கத் தொடங்குங்கள்.

குப்பைகள் தங்களுக்குள் பேசிக்கொண்டிருந்தன. நாங்களும் காது கொடுத்துக் கேட்போம். காது கொடுத்துக் கேட்பது தான் நல்லது. யாருக்கென்று கேட்கக் கூடாது. யாருக்கு நல்லதோ அவர்களுக்கு. ஆகவே காது கொடுத்துக் கேட்போம். குப்பைகள் அந்தக் கோபுரத்தைச் சுத்திச் சுத்தி வருகின்றன. கோபுரத்தில் ஒட்டிக் கொள்ள பகீரதப் பிரயத்தனம் செய்கின்றன. எவரின் முதுகில் என்றாலும் ஏறிக் கொள்ளப் பார்க்கின்றன. கால்களுக்குக் கீழே இருப்பவர்களைப் பற்றிக் கவலையில்லை. அவர்களை ஏணியாக வைத்து ஏறிக்கொள்வதே முக்கியம். இப்போது ஏறிக் கொள்வது தான் முக்கியம். யாருடைய கையை என்றாலும் பற்றிக் கொள்ளலாம். கால் என்றாலும் காரியமில்லை. இழுத்து விழுத்தி விடலாம். கோபுரத்தின் உச்சியில் ஏற்படக்கூடிய இட நெருக்கடியைக் குறைக்கக் கூடும்.

குப்பைகளில் ஆண் பெண் குப்பைகள் எல்லாம் இருந்தன. இது வரை கேட்காத வார்த்தைகளில் எல்லாம் ஒன்றுக் கொன்று அர்ச்சித்துக் கொண்டன. சில சிரித்தன. சில அழுதன.. .... கூக்குரலிலும் ஒப்பாரியிலும் அழுதன. சில கெக்கட்டமிட்டுச் சிரித்தன.

குப்பைகளில் ஒன்று கீழேயிருந்த மக்களைப் பார்த்து 'உங்களை அந்த ஆண்டவனால் தான் காக்க முடியும் என்றது. ஒன்று " லஞ்சம் லஞ்சம் " என்று கூக்குரல் இட்டுக்கொண்டு சென்றது. குப்பைகள் விதவிதமாக உடுத்திக் கொண்டிருந்தன. மாறுகரை மாறு வேட்டி உடுத்துக் கொண்டிருந்தன. சில விதம் விதமான வர்ணங்களில் துண்டுகள் போட்டிருந்தன. அதிசயமாக சில கறுப்புக் கண்ணாடி போட்டுக் கண்ணை மறைத்துக் கொண்டிருந்தன.

பெண் குப்பைகளும் மிதந்து மிதந்து மேலே வந்தது. திடீரென்று 'அம்மா' என்று பரவசக் குரலும் எழுந்தது. குப்பைகள் திடீரென்று தெய்வங்களின் வடிவம் எடுத்தன. முகங்கள் மாறி கோர உருவம் எடுத்தன. இரண்டு பல்லும் கழுத்து மண்டையோடும் சூலாயுதமும் கொண்டு வலம் வந்தன. அகோரமாய்ச் சிரித்தன.

கோபுரத்தின் உச்சியில் ஆங்காங்கே சில குப்பைகள் ஒட்டியிருந்தன. காற்றில் மாறி மாறி குப்பைகள் இடம் பிடித்துக் கொண்டன. திடீரென்று காற்று பலமாக வீசியது. குப்பைகள் எல்லாம் வெறிபிடித்தது போல் பறந்து கொண்டிருந்தன.

திடீரென்று எல்லாம் அடங்கிப் போய் விட்டது. குப்பைகள் எல்லாம் குப்பை லாரியில் ஏற்றப்பட்டுக் கிடந்தது. திடீர் அமைதியில் திடுக்கிட்டு எழுந்தது சுற்றுமுற்றும் பார்த்தேன். தூங்கிப் போயிருந்தது தெரிந்தது. கண்ட கனவையே கதையாக எழுதி விடலாம். ஆனால் இப்போது தலைப்பில் திருப்தி இல்லாதது போல் தோன்றியது. தி.மு.க , ப. ம. க போல மூன்றெழுத்தில் இருந்தால் நன்றாக இருக்கும் போல் தோன்றியது. மூன்றெழுத்துல் மூச்சிருப்பதுபோல மூன்றெழுத்தே நன்றாக இருக்கும்.

த. தே. மு என்று வைக்கலாம் என்று முடிவுக்கு வந்திருக்கின்றேன். நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள். த.தே.மு என்னவென்று என்னைக் கேட்க வேண்டாம். தமிழக தேர்தல் முடிவுகள் என்று நீங்கள் சொன்னால் நான் என்ன செய்ய முடியும்.

வாழ்க்கை

பொருத்தம்
பார்க்கின்றேன்
உனக்கும்
எனக்கும்

உணர்வு
சிந்தனை
ஆசை
எங்களைப்போல்
பலவாய்
இருப்பதைப்
புரியும் வரை

கணத்தினில்
வெடிக்கும்
நீர்க்குமிழிபோல்
இரவல்
சந்தோஷங்களும்
மனதின்
நெகிழ்வுகளூம்

பார்வை

வெளிச்சத்தை
வெட்டிப் போட்டது
போல
என்னையும்
சிதைத்துப்போனது
வாழ்க்கை

வாழ்க்கையின்
ஞானம்
உனக்கூடாகவே
நிகழ்ந்தது
உலகத்தின்
ஈரம்
தடுக்கப்பட்டதுபோல்

அதுவும்
இருண்டே
கிடக்கின்றது
என் மன
அழுக்குகளைப்போல்

சொல்லித்
தந்ததுபோல்
புரிந்துகொள்ளல்
இல்லை
விசாலமாய்
மனதைப்போல்

என்னைச்
சுற்றி
எதிரிகள்

Saturday, January 14, 2006

காத்தாடி ..... காத்தாட ... காத்தாட.....

இன்று தைப்பொங்கல் . தமிழர் திருநாள் . உலகெல்லாம் இருந்து தமிழ் மக்கள் இத்திருநாளைக் கொண்டாடிக் கொண்டிருப்பார்கள் என்று எண்ணுவதே ஆனந்தமாக இருக்கின்றது. இதை சாவகாசமாக உட்கார்ந்து எண்ணிக் கொண்டிருக்க என் மனமும் இலேசாகி என் வாழ்க்கையில் கடந்து போன பொங்கல் அனுபவங்கள் என் மனதில் விதைத்து விட்டுப் போன ஞாபகக் கரைசல்களை கலக்கி விட்ட குளத்துத் திண்மங்கள் போல மெல்ல மெல்ல மேலெழுந்து கொண்டிருந்தது. வாழ்க்கையின் வழித்தடங்களாய் கடந்து போன காலத்தின் நினைவுத் திரட்டுக்கள். மகிழ்வும் நெகிழ்வும் சிரிப்பும் சிந்தலுமாய் அனுபவங்களை அறுவடை செய்த நாட்கள்.

போருக்கு முந்திய ஊரும் உலகும் அழகானது. அடைகாத்து வைக்கப் பட்ட எத்தனையோ ஆவணங்களைக் கொண்டது. அதுவும் தமிழர்கள் செறிந்து வாழும் யாழ்ப்பாணப் பிரதேசம். தமிழர் பெருநாட்கள் அதற்கேயான களையுடன் கொண்டாடப் படும். ஊரே களைகட்டிவிடும். வீட்டு வாசல்களும் முற்றமும் கூட்டி மெழுகி மாவிலையும் தோரணமுமாய் அழகு சேர்க்கத்தொடங்கி விடும். ஆலய மணியின் ஓசையும் பாடலும் பரவசமுமாய் ஒரு பவுத்திரம் மனதில் நிறைந்து விடும்.

வீதிகள் எல்லாம் வருவோரும் போவோருமாகக் களையுடன் காணப்படும். புதிய ஆடைகள் சரசரக்க உற்றார் உறவினர் வீடுகள் நோக்கியும் கோவில்கள் நோக்கியும் போவோரும் வருவோருமாக புது உற்சாகமே அங்கு ஊற்றெடுத்து நிற்கும். அன்று நாள் முழுவதும் கொண்டாட்டம் தான். அரச விடுமுறை வேறு. மாணவர் கூட்டமே சிறகடித்துப் பறக்கும். புது ஆடையும் சிரிப்பும் கும்மாளமுமாக சுத்திச் சுத்தி வரும். ஒரு இடத்தில் இருக்காது காலில் சக்கரம் சுத்திவிட்டது போல ஊரைச்சுத்திச்சுத்தி வரும் பையன்கள் கூட்டம்.

அக்கம் பக்கத்து ஊரிலெல்லாம் கொண்டாட்டம் அமர்க்களமாக இருக்கும். சில ஊர்களில் பொங்கல் திருவிழாவென்று விளையாட்டுப் போட்டிகளும் வண்டில் சவாரிப் போட்டிகளும் நடாத்துவார்கள். விருப்பப் பட்டவர்கள் அதற்கும் போய் வருவார்கள். இளைஞர்கள் தங்கள் வீரதீரப்பராக்கிரமங்களைக் காட்ட இவற்றிலெல்லாம் பங்கு பற்றுவவர்கள். அதுவும் திருமண வயது வந்தவர்கள் காட்டும் வேகம் ஆச்சரியமூட்டும். வெற்றி பெற்ற வீரர்களின் கதைகள் நான்கு நாட்களுக்கு ஊர் முழுக்க சுத்தி வரும் என்பது வேறுவிடயம். யார் யாருக்கு என்னென்ன தேவைகள் இருந்ததோ அவர்களுக்குத்தான் வெளிச்சம்.

தை மாதத்தில் வாடைக்காற்று என்னும் வடமேல் பருவப் பெயற்சிக்காற்று வீசும் காலமாகும். காற்றாடி எனப்படும் பட்டங்கள் விடுவதற்கு ஏற்ற காற்று வாடைக்காற்றாகும். தைப் பொங்கல் காலத்தில் தான் பட்டம் ஏற்றுவதும் சிறப்பாக நடைபெறும். தைப் பொங்கலுக்கு முற்பட்ட நாட்களிலேயே பட்டம் ஏற்றுவது தொடங்கி விட்டிருக்கும் என்றாலும் பொங்கல் தினத்தில் அதற்கொரு மவுசு வந்துவிடும். பச்சை சிகப்பு மஞ்சள் என்று பலப்பல வர்ணத்தாள்களில் அழகழகான காற்றாடிகளைக் கட்டி ஏற்றுவார்கள். இந்த காற்றாடிகளில் 'சீன்னட்டான்' , 'படலப்பட்டம்' , ' செம்பிராந்து' , 'மணிக்கூட்டுப் பட்டம்' , ' கொடிப்பட்டம்' என்று இன்னும் பெயர் மறந்து போன காற்றாடிகளும் உண்டு. இதில் சில 'வால்'களைக் கொண்டதாகவும் சில வால் இல்லாமலும் பறக்க விடப்படும்.

'வால்' கள் இல்லாமல் பறக்கும் பட்டத்திற்கு பல நுணுக்கங்களைப் பாவிப்பார்கள். காற்றைச் சமநிலைப்படுத்தவும் விழுந்து விடாமல் எதிர்க்காற்றில் ஏற்றுவதற்கும் அந்த நுணுக்கங்கள் கையாளப்படும். அதில் கை தேர்ந்த 'விண்ணர்களும்' இருந்தார்கள். விண்ணவர்கள் என்றால் மேலுலகத்தில் இருப்பவர்கள் மேலானவர்கள் என்பதைப் போல் இவர்களும் ஒரு வகையில் மேலானவர்கள் என்ற காரணத்தால் போலும் இவர்களும் 'விண்ணர்கள் ' என்று அழைக்கப்பட்டார்கள்.

இவ்வளவும் செய்து காற்றாடியை ஏற்றும் போது பார்க்க 'கலர்புல்'லாக இருக்கும். காற்றில் வர்ணத்தாள்கள் ஒரு சலசலப்பை ஏற்படுத்தி கவர்ச்சியைக் கூட்டும். காற்றாடி ஏற்றுவதில் பல போட்டிகளும் அக்கம்பக்கத்தில் உள்ளவர்களிடம் வந்து விடும். பெரிய காற்றாடி ,அதிக உயரம் ஏற்றுவது என்று பலபோட்டிகள் வந்து விடும். மேகத்தைத் தொடும் அளவிற்கு உ......ய........ர......மா......க ஏற்றும் விண்ணர்களும் இருக்கின்றார்கள். அவ்வளவு உயரம் போனதா இல்லையா என்று போய்ப்பார்க்க வசதி இல்லாதபடியால் அவர்கள் சொல்வதை நம்புவதை விட வேறு என்ன செய்ய முடியும். ஆனாலும் தரையில் இருக்கும் போது பெரீய்ய பட்டமாக இருந்தது சின்னத் துக்கடாப்பட்டமாக தெரியும் உயரம் வரை பார்த்திருக்கின்றேன். என்னால் எல்லாம் ஒரு பனையுயரம் மட்டுமே காற்றாடி ஏற்ற முடிந்தது.

எவ்வளவு அழகாய் இருந்தாலும் உயரப்போய் விட்டால் அழகும் தெரியாது அளவும் தெரியாது ஊமைப் படம் பார்ப்பது போல இருக்கும். இதற்காக இந்த விண்ணர்கள் 'விண்' என்று கூறப் படும் நாதமெழுப்பியை காற்றாடிகளில் கட்டி விடுவார்கள். பனை மட்டை நாரில் மிக வள்ளிசாகத் தயாரித்திருப்பார்கள். காற்று இந்த 'விண் ' இல் பட்டு தெறித்துப் போவது போல செய்திருப்பார்கள். காற்று பட்டு விலகிக் கொண்டிருக்கும் வரை தொடர்ந்து இசை வந்து கொண்டிருக்கும். இரவு வேளையில் உங்களைத் தூங்கவிடாமல் தொந்தரவு செய்வது வரை அதன் சத்தம் இருக்கும்.

காற்றாடியைப் பற்றி எழுதப் போக அது இவ்வளவு நீ....ட்டமாகப் போய் விட்டது. நானும் முதன்முதல் ஒரு வாலில்லாத பட்டமாக "செம்பிராந்து" இந்தப் பொங்கல் நாளில் ஏற்றியதும் அது பொங்கல் பானைக்கே விறகாகிப் போனதும் தனிக் கதை. சந்தர்ப்பம் இருந்தால் பிறகொரு முறை எழுதுகின்றேன்.

இப்படியாக ஒவ்வொரு வயதினருக்கும் ஒவ்வொரு வகை மகிழ்வைக் கொடுத்த படி பொங்கல் திருவிழா மெதுவாகக் கழியும். இரவில் கலை நிகழ்ச்சிகளும் சில ஊர்களில் நடை பெறும். அன்று இரவு வேளையில் அதிகமானவர்கள் சினிமா பார்க்கவும் போவார்கள். பொங்கல் "ரிலீஸ்"கள் பல தியேட்டர்களில் அமர்க்களப் படும்.

இதுவெல்லாம் ஒரு இருபது வருடத்திற்கு முந்திய பொங்கல் தினத்தின் களியாட்டங்கள். காலம் எப்படியெப்படியோ எல்லாவற்றையும் புரட்டிப் போட்டுவிட்டது.

எல்லோருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.

இத்தால் சகலமானவருக்கும்.....

இத்தால் சகலமானவருக்கும் அறிவிப்பது என்னவென்றால் பெயர் குழப்பம் காரணமாக " என் மனவானில் " என் ஆரம்பிக்கப்பட்ட எனது வலைத்தளம் பின்னர் "என் மனவெளியில் " என் மாற்றப் பட்டிருந்தது. அதிலும் கரிகாலன் என்னும் நண்பர் 1 1/2 வருடமாக அப்பெயரில் வலைப் பதிவொன்றை வைத்திருப்பதாக அறிவித்த படியால் எனது வலைத்தளம் "என் வான்வெளியில்" என்ற பெயருடன் பொங்கல் முதல் வெளிவருகின்றது என்பதை சகலமானவருக்கும் அறியத்தருகின்றேன்.

டுண்ட் .... டுண்ட் .... டுண்ட் .....டுண்ட் .......

எனது மற்றொரு வலத்தளமான " சிந்து " தொடர்ந்தும் அதே பெயரிலேயே
வெளிவரும் என்பதையும் அறியத்தருகின்றேன்.

இது சம்பந்தமாக " தமிழ்மணம் " நிர்வாகிகள் ஆவன செய்யுமாறு அன்புடன் வேண்டுகின்றேன். "சிந்து " வில் " டெம்லேட்" இல் எதை மாற்றினேனோ யானறியேன். பதிவின் பின்னால் பின்னூட்டம் செய்யும் வசதி இல்லாதிருக்கின்றது.

தெரிந்தவர்கள் அறிந்தவர்கள் உதவினால் பின்னூட்டம் 'கிளிக்'க வசதியாக இருக்கும்.
உங்கள் ஆதரவுக்கு நன்றி....


--- அனைவருக்கும் பொங்கல் நல் வாழ்த்துக்கள் -----

Sunday, January 08, 2006

அம்மாவைப் போல

காலையிலேயே சண்டை தொடங்கியாகிவிட்டது. பத்து வயதுக் குழந்தை கண்ணைக் கசக்கிக்கொண்டு அழுவது மனதைப் பிசைந்து கொண்டிருந்தது. விம்மிக்கொண்டு ' பாட் ... மம்மி ' என்று அடிக்கடி சொல்லிக் கொண்டே அழுது கொண்டிருந்தது. நித்தியா எப்படி எப்படியோ சமாதானம் சொல்லியும் கேட்க மாட்டேன் என்று அடம் பிடித்து அழுது கொண்டிருந்தது.

அங்கு வந்த அருண் நிலமையைப் புரிந்து கொண்டான். சுமியின் சின்ன மனதின் ஆசைகளையும் அவன் அறிவான். தன் பிரெண்ஸ்ஸுக்கெல்லாம் தன் மம்மியை அறிமுகப் படுத்த வேண்டுமென்ற சுமியின் நீண்ட நாள் ஆசையை அவன் நன்கு அறிவான். சுமியின் பள்ளியில் நடைபெறும் பிரைஸ் கிவிங் டேக்கு மம்மியை அழைத்துச் செல்லவேண்டும் என்றே அடம் பிடித்து அது அழுது கொண்டிருந்தது.

அந்த நாளில் அவள் ஸ்பேசில் இருந்தாக வேண்டிய கட்டாயத்தை அந்தக் குழந்தைக்கு எப்படி விளங்கப்படுத்துவது. பிரபல விஞ்ஞானியான தன் மனைவியின் சங்கடத்தை அவன் புரிந்து கொண்டான். ஒரு தாயாக தன் பாசத்தை பகிர்ந்து கொள்ள அவளுக்கிருக்கும் தடைகளையும் அவன் அறிந்திருந்தான். கண்கள் கலங்கி அழ ஆயத்தமாகி நின்ற மனைவியின் முகத்தைப் பார்த்தவன் ஒரு தீர்மானத்துடன் சுமியிடம் வந்தான்.

'சுமிக்கண்ணு ... அப்பா ஏஞ்ஜல் கதை சொல்லுவேனாம் நீங்கள் அழாமல் கதை கேக்கணும் என்ன ? ' என்றவாறே அந்தக் குழந்தையை அள்ளி அணைத்துக் கொண்டு சுமியின் அறைக்குக் கொண்டு சென்றான். ஏஞ்ஜல் கதை கேட்பதென்றால் சுமிக்குக் கொள்ளை ஆசை. அதுவும் அப்பா சொல்லும் கதையில் வரும் ஏஞ்ஜல்கள் எல்லாம் ரொம்ப நல்ல ஏஞ்ஜல்கள். குழந்தைகள் என்றால் அவைக்குக் கொள்ளைப் பிரியம். அழுகின்ற குழந்தைகளுக்கெல்லாம் சாக்லேட் ரொய்ஸ் எல்லாம் கொண்டுவந்து கொடுக்கும். எல்லாரும் சந்தோஷமாய் இருக்கிறதைப் பார்த்துத் தான் அவையும் சந்தோஷப் படும். இந்த ஏஞ்ஜல் எல்லாம் முந்தி மனிதராய் இருந்து எல்லாருக்கும் நல்லது செய்து ஏஞ்ஜலாய் ஆனதா அப்பா சொல்லியிருக்கார். இந்த அம்மாவுக்கு என்னை அழவைக்கிறதே வேலையாப் போய்ட்டு. பாட் அம்மா ... இவ எல்லாம் ஏஞ்ஜலா வரமாட்டா... . சுமியின் எண்ணத்தை அப்பாவின் ஏஞ்ஜல் கதை மறக்கடித்தது. அந்த ஏஞ்ஜல் செய்த சாகசத்தைக் கேட்டு குழந்தை கலகலவெனச் சிரித்தது.


நித்யா ஸ்பேசிற்குப் போகின்ற நாள். குழந்தை முகத்தை திருப்பி வைத்துக் கொண்டேயிருந்தது. நித்தியாவிற்கு மனதை சங்கடப் படுத்தியது. இந்த தடவையுடன் ஸ்பேசிற்குப் போவதற்கு சமதிக்கக் கூடாது. இதுவே கடைசி தடவையாய் இருக்கட்டும். குழந்தையின் ஏக்கம் அவளிற்குப் புரிந்தது. பத்து வயதாகி விட்ட பெண்குழந்தை. அம்மாவின் அருகாமைக்காக ஏங்கத் தொடங்கிவிட்டது புரிந்தது. குழந்தையின் பாராமுகத்துடன் விட்டுப் பிரிவது கஸ்டமாக இருந்தது. ஏக்கத்துடன் அருணைப் பார்த்தாள். குழந்தையைச் சமாதானப் படுத்தி அம்மாவிற்கு ஒரு முத்தம் மட்டும் கொடுக்கச் சம்மதிக்க வைத்தான். அவன் கரங்களைப் பிடித்திருந்த நித்தியாவைப் பார்த்தான். அவள் கண்கள் கலங்கியிருந்தது. முதுகை ஆறுதலாகத் தடவி விட்டான். இருவரையும் சேர்த்து அணைத்தவள் விடுவிடுவென்று சென்று தனக்காக காத்திருந்த காரில் ஏறியமர்ந்தாள். கார் நாசாவை நோக்கிச் சென்றது.

நாட்கள் வேகவேகமாகச் சென்றது. பரிசோதனைகள் எல்லாம் வெற்றிகரமாக முடிந்ததில் அந்தக் குழு மட்டில்லாத மகிழ்ச்சியுடன் இருந்தது.
இன்று பூமிக்குத் திரும்பும் நாள். நித்தியா அருணையும் குழந்தை சுமியையும் நினைத்துக் கொண்டாள். சுமியின் ஏக்கம் விரியும் கண்கள் அவளைப் பாடாய்ப் படுத்தியது. இனிமேல் சுமியை விட்டு எங்கும் போகக் கூடாது என்று மனதை திடப்படுத்திக் கொண்டாள். அவர்களை சுமந்து கொண்டு வந்த கொலம்பியா வளி மண்டலத்துள் நுழைந்தது. நுழைந்த சில கணங்களுக்குள் துண்டு துண்டாக வெடித்து காணாமல்ப் போனது.

அங்கு நீண்டிருந்த வரிசையில் மக்கள் துயரத்துடன் காத்திருந்தார்கள். கைகளில் மலர் வளையங்களுடனும் மலர்ச் செண்டுகளுடனும் நின்ற அவர்களில் சிலர் துக்கம் தாளாது கதறி அழுதனர். அங்கு வைக்கப்பட்டிருந்த ஏழு போட்டோக்களில் அம்மாவின் போட்டோவும் இருந்தது. விண்வெளி உடையுடன் கைகளை வீசிச் சிரித்த படி அம்மா நின்றிருந்தாள். வரிசையில் வந்த மக்கள் அங்கு நின்ற அவர்களின் உறவினர்களை ஆறுதல் படுத்தியும் அரவணைத்தும் சென்றனர். அருண் கண்ணீர் கன்னங்கலில் வடிய தன் மனைவியின் படத்தைப் பார்த்தவாறே நின்றிருந்தான். அவன் கரங்களைப் பிடித்தவாறு நின்ற குழந்தை சுமியின் கன்னத்தைத் தடவிய சிலர் " யுவர் மம்மி இஸ் எ ஏஞ்ஜல் " என்று கூறிச் சென்றனர். தன் மம்மியும் அவர்களுக்கெல்லாம் நன்மை செய்தபடியால் தான் அவர்கள் மம்மியை ஏஞ்ஜல் என்று சொல்கிறார்கள் என்பது மட்டும் அந்தக் குழந்தைக்கு விளங்கியது. ஏதோ தீர்மானத்துக்கு வந்தது போல் மம்மியின் படத்தை நோக்கிச் சென்றது. " மம்மியைப் போலவே நானும் எல்லாருக்கும் உதவி செய்யறவளா வரணும் " என்று வேண்டிக்கொண்டே ஒரு ரோஜாப்பூவை எடுத்து மம்மியின் போட்டோ முன்னால் வைத்தது. அதன் கண்களிலும் கண்ணீர். தன் மனைவியின் போட்டோவையும் குழந்தையையும் மாறி மாறிப் பார்த்த அருண் குழந்தையைத் தன்னுடன் இறுக்கிக் கொண்டான்.

Saturday, January 07, 2006

மனம் ஒரு குரங்கு.... மனிதமனமொரு....

மனித மனமொரு குரங்கு என்று சொல்லி வைத்தவனை ஞானி என்றெல்லாம் சொல்லமாட்டேன். ஆனால் வாழ்கையில் அடிபட்டு ஆடிப் போனவன் என்று வேண்டுமென்றால் சொல்லிக்கொள்வேன். ஆனால் அது ஒன்றும் அதீத கற்பனையல்ல.

இந்த வாழ்க்கையிலேயே சுவாரஸ்யமான ஒரு பொருள் இருக்கின்றது என்று சொன்னால் அது மனித மனம் தான் என்று சொல்வேன். அத்தனை சுவாரஸ்யம் உள்ளது மனம் என்ற குரங்கு. அது ஆடுகின்ற ஆட்டம் தான் இந்த வாழ்க்கைக்கே எத்தனை சுவை சேர்க்கின்றது.

இந்த மனம் என்ற குரங்கு மட்டும் இல்லை என்றால் நமது வாழ்க்கை என்பதே ஒன்றும் இல்லாத சப்பாணி வாழ்க்கையாகத்தான் இருந்திருக்கும். பிறந்ததிலிருந்தே இந்த வாழ்க்கையில் சுவை சேர்க்க ஆடாத ஆட்டமெல்லம் போடும் இந்த குரங்கு மனம் இருக்கின்றதே அது பின்னாலேயே ஓடியோடி வாழ்க்கை என்னவென்று தெரிவதற்கு முன்னரே வாழ்க்கை முடிந்தே போய்விடுகின்றது.

வாழ்க்கை தொடங்கியதிலிருந்தே மனம் என்ற குரங்கும் ஆட்டம் போடத்தொடங்கி விடுகின்றது. காலகாலத்திற்கும் ஒவ்வொரு இலட்சியங்களை வரித்துக் கொண்டு அதுவே வாழ்க்கை என்று காட்டிக் கொள்கின்றது. ஆமாம் இலட்சியங்களாக வரித்துக் கொள்வதை மட்டுமே எடுத்துக் கொண்டு பார்ப்போம். ஆசைகள் என்று எடுத்துக் கொண்டு பார்க்கப் போனால் என் ஆயுசும் உங்கள் ஆயுசும் கூடப் போதாது. இலட்சியங்களை மட்டுமே இலட்சியங்கள் என்று வரித்துக் கொண்டு விட்ட விடயங்களை மட்டுமே பார்ப்போம். இவை தானா இலட்சியங்கள் என்று யாரும் கேட்கமாட்டீர்கள் தானே. இல்லையென்றால் எது இலட்சியம் என்று கேள்வி வரும். வாழ்க்கை முழுவதற்கும் ஒரேயொரு இலட்சியம் இருப்பதற்கான சாத்தியமும் கிடையாது.

படிக்கத்தொடங்கிய காலத்திலேயே ஒவ்வொருவருக்கும் ஒரு இலட்சியம் வந்து விடும். உலகப் பிரசித்தி பெற்ற தலைவர்களைப் போல தாங்களும் வரவேண்டுமென்ற இலட்சியம். காந்தி நேரு போன்றவர்களின் பெருமை புகழ் இலகுவாக சிறுவர்களின் மனதில் இடம் பிடித்து விடும். அப்போதைக்கு இலட்சிய ம் அதுவாகத் தான் இருக்கும். கொஞ்சம் வளர்ந்து வரும் போது சினிமா நடிகர்களின் பெயரும் புகழும் இலகுவாக மனதில் பிடித்துக் கொள்ளும். முதல் இலட்சியத்திற்கு ஒரு தெய்வீகத் தன்மையை கொடுத்து ஒரு சல்யூட் அடித்து விட்டு சினிமாக் கனவை பிடித்துக் கொள்ளும். சினிமாக் கனவுடன் சுத்தித் திரிந்து சட்டை கசங்கியவுடன் மனம் இலட்சியத்தை மாற்றிக் கொள்ளும். அதெல்லாம் கவைக்குதவாது என்று தெரிந்தவுடன் சந்து முனையிலிருக்கின்ற பணக்காரனையோ அமெரிக்காவிலிருக்கின்ற பில்கேட்ஸ்ஸையோ பிடித்துக் கொண்டு இலட்சியத்தை வரித்துக் கொள்ளும்.

இதுவும் கொஞ்சக் காலத்திற்குத் தான். கூடித் திரிந்த நண்பனோ அறிந்தவனோ தெரிந்தவனோ அழகான பெண் ஒருத்தியைத் திருமணம் செய்து கொண்டு வந்துவிட்டால் குரங்கு மனமும் இலட்சியத்தை மாற்றிக் கொண்டு விடும். கடை, தெருவெல்லாம் அலைந்து திரிந்து நீதானா அந்தக் குயில் என்று பாடிக் கொண்டு போகிற வருகின்ற பெண்களையெல்லாம் துரத்தித் துரத்திப் பார்க்க அந்தப் பெண் செருப்பைப் பார்க்க வீட்டில் பார்த்து முடித்து வைக்கும் பெண்ணுடன் அந்த இலட்சியமும் அம்ப்பேல்.

இதற்கிடையில் நிறையவே இலட்சியங்கள் மாறி மாறி வரும் போகும். கவிதை எழுதிப் புகழ் பெற்றவனைப் பார்த்து நாலு வரி கிறுக்கிக் கொண்டு பேர் வாங்கத் திரிவதே இலட்சியமாக வரித்துக் கொள்ளும். இல்லையென்றால் அகடவிகடமாகப் பேசி பாராட்டுப் பெற்ற ஒருவனை மனதிலிருத்தி வீட்டுக் கோடியில் நின்று கத்திக்கத்தி பேசிக்கொண்டிருப்பதே இலட்சியம் என்று கொள்ளும். அதுவும் இல்லை என்றால் வலையில் ஒரு புளக்கை திறந்து வைத்து எதையோ எழுதி விட்டு யாராவது பின்னூட்டம் இட்டிருக்கிறார்களாவென்று அடிக்கடி திறந்து திறந்து பார்த்து அவஸ்தைப் பட்டுக் கொண்டிருக்கும்.

இலட்சியங்களை மாற்றி மாற்றி வாழ்க்கையிலேயே சலிப்பு தோன்றாது பார்த்துக் கொள்ளும் மனம் என்ற குரங்கு இல்லையென்றால் வாழ்க்கையில் தான் சுவையேது.

திருமணம் ஆகி பிள்ளை குட்டிகள் என்று பல்கிப் பெருகிய காலத்திலும் பலப் பல இலட்சியங்கள் வந்து போகும். அடக்கி வைத்திருக்கும் மனைவியை ஒரு முறை என்றாலும் அதட்டிப் பேச வேண்டுமென்ற அடங்காத இலட்சியத்துடன் அல்லாடும் ஆண்கள் எத்தனை பேர் இருக்கின்றார்கள்.

இந்த குரங்கு மனமும் அது வரித்துக் கொள்ளும் இலட்சியங்களும் இல்லையென்றால் இந்தப் பிரபஞ்சத்தின் இயக்கத்துடன் ஒப்பிடும்போது மனித வாழ்க்கை மிகச் சாதாரணமானதே. ஆபீஸிற்கும் வீட்டுக்குமாக அலையும் மனித வாழ்க்கை பிரபஞ்ச அசைவுடன் ஒப்பிடும் போது வெறும் பூஜ்ஜியம் தான். அடுத்தவேளை சாப்பாட்டிற்கு வழியிருக்கின்றதோ இல்லையோ ஒரு மனிதனைச் சீண்டிப் பாருங்கள் ஆகாயத்திற்கும் பூமிக்குமாக குதிப்பார்கள். என்னைவிட்டால் ஆள் இருக்கின்றதா என்று கச்சை கட்டிக் கொண்டு கோதாவில் குதித்து சண்டைக்கு ஆயத்தமாயிருப்பார்கள். ஆத்தூரில் இருக்கும் ஒருவன் அமெரிக்காவில் இருக்கும் புஸ்ஸிற்கு கண்டனங்களைச் சொல்லிக் கொண்டிருப்பான். சீனாவை சீண்டி விட்டு சிலுப்பிக் கொண்டிருப்பான்.

இந்த மனதின் சில்மிஸம் தான் மனிதனை வாழ் வைத்துக் கொண்டிருக்கின்து. மனித மனத்தின் பாச்சல் அதிகமான போது தான் மனதை அடக்கி வைக்கக் கற்றுக் கொள் என்று போதிக்கத் தொடங்கினார்கள். மனிதன் குரங்கிலிருந்து வந்தவன் என்றாலும் இன்னும் குரங்குப் புத்தியுடன் இருக்கின்றான் என்பதாலோ என்னவோ மனதை அடக்கத் தெரிந்தவன் தான் மனிதன் என்று சொல்லிப்போனார்கள். இல்லையென்றால் ....எ ன்னவோ போங்கள்.

அதற்கும் மேலாகப் போய் ஆத்மா பரமாத்மா என்றெல்லாம் கதை சொல்லிப் போயிருக்கின்றார்கள். சமயத்தில் தூக்கத்தில் இருட்டு வெளி என்று கனவு வந்து படுக்கையைப் பிராண்டும் போது அது உண்மையாக இருக்குமோ என்று தோன்றுகின்றது. தும்மும் போது இதயம் நின்று விடுகின்றது. பின்னர் துடிக்கத் தொடங்கினால் நீங்கள் அதிர்ஸ்ட சாலி. இல்லையென்றால் ... என்னத்திற்கு அது. இந்தப் புரளியை நம்புவதா வேண்டாமா என்பதற்கு முன்னால் அப்படியெல்லாம் இருக்காது. சும்மா கதை அது இதுவென்று ஆயிரம் சமாததனம் சொல்லிக் கொண்டாலும் ... பாருங்கள் இந்த மனம் ... மீண்டும் மீண்டும் தும்மல் வந்து இதயம் நின்று போனால் ... என்று தானே நினைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த மனதைக் குரங்கு மனம் என்று சொல்லாமல் எப்படிச் சொல்வது. வேண்டுமென்றால் மனமொரு குரங்கு என்று சொல்லிக் கொள்ளலாமோ..... உங்களுக்குத் தும்மல் வருகின்றதா? எனக்கு இதயம் ரொம்ப்ப வீக ..வரட்டுமா......

காதல் தெய்வீகமானது - சும்மா பேத்தல்

முதலில் காதல் தெய்வீகமானது என்று நம்பிக்கொண்டு காதலித்துக்கொண்டிருப்பவர்கள் இதைப்படிக்க வேண்டாம். உங்கள் நம்பிக்கையை அல்ல வாழ்க்கையின் ஒரு கட்டத்தில் வரக்கூடிய ஒரு அனுபவத்தை நீங்கள் இழந்து போவதை நான் விரும்பவில்லை. அதனால் இப்போதைக்கு இதை நீங்கள் படிக்கவேண்டாம்.

' காதல்' செய்து முடித்தவர்கள் இதைப் படிக்கலாம்.

காதலைப் பற்றி சொல்பவர்கள் முதலில் என்ன சொல்கின்றார்கள் என்று பார்ப்போம். 'காதல் தெய்வீகமானது' , 'மனதில் இருந்து வருவது காதல்' , 'இரு மனம் ஒன்று சேரும் பொழுது காதல் வருகின்றது', உடலைப் பார்த்து வருவதல்ல காதல் மனதைப் பார்த்து வருவது காதல்' , 'அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள் வந்தது காதல்' இப்படி எத்தனையோ சொல்கின்றார்கள்.

காதல் என்று தங்க முலாம் பூசப்படும் விடயம் முதலில் இரண்டு மனிதர்களுக்கிடையிலான இனக் கவர்ச்சிதான் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு ஆணினதோ பெண்ணினதோ அழகு/உடலமைப்பு தான் ஒருவரை ஒருவர் கவருகின்றது. அந்தக் கவர்ச்சியில் ஏற்பட்ட கிளர்ச்சியில் ஒருவருடன் ஒருவர் பழக முற்படுகின்றனர். தன் தன் மனதில் இருக்கக் கூடிய அழகுணர்ச்சியின் தன்மைக்கேற்பவும் தன் அழகு/ தகுதி நிலை பற்றிய கணிப்பிற்கேற்பவும் சம அழகு தோற்றம் உடையவர்களின் மேலேயே 'காதல்' ஏற்படுகின்றது. சில சந்தர்ப்பங்களில் கூடிய அழகு /தகுதி உடையவர்களின் மேலும் மனம் நாட்டம் கொண்டாலும் அவை ஒரு தலைக்காதலாகவோ இல்லை நிறைவேறாக் காதலாகவே போய் விடுகின்றது. 'காதல்' என்று சொல்லிக் கொள்ளும் போதெல்லாம் பெண்ணின்/ஆணின் அழகைத்தான் கண்கள் பருகுகின்றது. அந்த அழகைப் பற்றியே காதல் கவிதை எனச்சொல்லப் படும் கவிதைகளில் எழுதிக் குவிக்கின்றனர். அல்லது மற்றவரின் கவனத்தை ஈர்ப்பதற்கான முயற்சிகள் கவிதையாகின்றன. அல்லது அவனின்/அவளின் பிரிவு அல்லது அவன்/ அவள் கிடைக்க முடியா தடைகள் அதனால் ஏற்படும் பரிதாப உணர்வு கவிதையாக்கப் படுகின்றது. இவையில்லா கவிதைகள் காதல் கவிதையாகக் கொள்ளப் படுவதில்லை. கம்பன் முதல் கடையீற்று கவிஞன் வரை
பாடு பொருள் உடல் அங்கங்களாகவே இருக்கின்றது. மனதைப் பார்த்து யாரும் பாடுவதில்லை. நல்ல குணம் உள்ளவன்/உள்ளவள் என்பதற்காக அழகற்ற ஒருவன்/ஒருவளுக்கு அழகான துணை கிடைப்பதில்லை. ஜோடிப் பொருத்தம் என்பது புறத்தோற்றம் தானேயொழிய மனத்தோற்றம் அல்ல. காதல் என்பதும் தெய்வீகம் என்பதும் காமம் என்ற சொல்லை மூடிவைத்த ஒரு பகட்டு. பண்பட்ட மனித விழுமியங்கள் அடிப்படை மன வக்கிரங்களை மூடிவைத்திருக்கின்ற அழகு பாத்திரங்கள். அவ்வாறே நடந்து கொள்வது நாகரீக சமுகத்தில் இன்றியமையாதது. இனப்பெருக்கம் என்பது இயற்கையின் ஆதார சிருஷ்டி தத்துவம். சுருங்கச் சொன்னால் ஆண்/பெண் என்ற படைப்பின் தேவை ஆனது உலகின் இருப்பிற்குத் தேவையான இனப்பெருக்கமே.

உறவுகளின் பல படிநிலைகளில் மனதின் வெளிப்பாடுகள் பல சொல்லடுக்குகளாக வெளிக்காட்டப்படுகின்றது. அன்பு ,பாசம்,மரியாதை, பக்தி ,காதல் , ஈர்ப்பு.வாஞ்சை என்று சந்தர்ப்பத்திற்கேற்ப சொல்லடுக்குகள் மாறு படுகின்றன. அல்லது வித்தியாசப் படுத்துவதற்கு உதவுகின்றன.

இவை எல்லா உணர்வுகளும் குறைந்தபட்சம் இரண்டு மனிதர்களுக்கு இடையில் ஏற்படும் உணர்வுகள் தான் என்றாலும் காதல் என்பது மட்டும் தெவீகமானது என்று மேன்மைபடுத்தப் படுகின்றது.

ஆனால் காதலிக்கும் காலங்களில், மனதோடு மனதின் ஆசைகளுக்கும் இச்சைகளுக்கும் உட்பட்ட/உருவாக்கப் படும் உணர்வு தான் காதல் என்ற போதிலும் புத்தி என்ற அறிவு உலக நடைமுறைகளுடன் இந்த ஆசையின் போக்கையும் இரண்டு நபர்களாலும் ஒத்துப்போகக்கூடிய/ஒத்துப் போகமுடியாத கணங்களைக் கணித்துக் கொண்டே இருக்கின்றது. ஏனெனில் இங்கு இரண்டு விதமான விருப்பு வெறுப்புக்களை கொண்ட உயிர்கள் ஒரு கோட்டிற்குள் வர முடியாவிட்டாலும் அருகருகே வர எடுத்துக் கொள்ளும் பகீரதப் பிரயத்தனம் தான் காதல் என்ற பெயரில் நடந்து கொண்டிருக்கின்றது.

அறிவின் கணிப்பினால் அவநம்பிக்கை ஏற்படும் பொழுது தங்கள் 'காதல்' மேலேயே சந்தேகம் வருகின்றது. இந்த சந்தேகம் அவர்கள் தெரிவு பற்றிய அவநம்பிக்கையை ஏற்படுத்துகின்றது. அதனாலேயே இலகுவாகப் பிரிந்தும் போகின்றார்கள். இவ்வாறான விவேகம் அவர்கள் வாழ்க்கையிலும் மற்றவர் வாழ்க்கையிலும் ஏற்படக் கூடிய குழப்பத்தைப் போக்குகின்றது. காதல் தெவீகம் என்ற வரட்டுத்தனம் இங்கு இல்லை.

ஒவ்வொருவர் மனச்சாட்சியும் பேசிக்கொள்ளும் பொழுது இவ்வாறு அவர்கள் வாழ்க்கையில் சலனத்தை ஏற்படுத்தி குறிப்பிட்ட காலத்திலேயோ கணத்திலோயோ வாழ்ந்தவர்களின் பட்டியலைப் பார்க்கலாம். கவர்ந்தவர்களை பற்றியல்ல நான் சேர்ந்து வாழவேண்டும் என்று விரும்பியவர்கள் பட்டியலைத்தான் நான் இங்கு குறிப்பிடுகின்றேன்.

காதலின் உச்சம் திருமணம் என்று சொன்னால் இங்கு காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள் எல்லாம் பூரித்துப் போய் வாழ்ந்து கொண்டிருக்கவேண்டும். நடைமுறையில் அவ்வாறு எல்லாம் நடை பெறுவதில்லை. காதல் என்பது இனக் கவர்ச்சியான காமத்தின் வெளிப்பூச்சே. இதில் போய் தெய்வீகம் பூர்வீகம் என்று பாசாங்கு செய்து முதிர்ச்சி அடையா இளவயதுப் பிள்ளைகளின் மனதில் கற்பனாவாதத்தை வளர்த்து இள வயதுத் தற்கொலைகளுக்கும் மனச் சிதைவுகளுக்கும் அடிப்படை அமைத்துக் கொடுப்பது எவ்வகையில் சிறப்பானது. உள்ளது உள்ளவாறு எடுத்துச் சொல்வது ஆரோக்கியமான சமூக அமைப்பிற்கு ஏதேனும் ஒரு வகையில் உதவக் கூடும். செக்ஸ் கல்வி முறை கற்பனாவாத மனக்கிறக்கங்களைத் தாண்டி வாழ்க்கையின் யதார்த்தத்தைப் புரிந்து கொள்ள அடியமைக்கக்கூடும்.

Thursday, January 05, 2006

என்னைச் சுற்றி மனிதர்கள்

கால் வைத்த இடமெல்லாம் சளக்கென்று புதைகின்றது. உருகிப் போகும் பனியும் குழம்புமாகச் சேர்ந்து பாதையின் ஓரமெல்லாம் கரைசலாகத் தேங்கி நிற்கின்றது. கால்களை எடுத்து வைக்கும் போதெல்லாம் விலகிச்சென்று மீண்டும் வந்து கால்களை மூடிக் கொள்கின்றது பனி நீர். நல்லவேளை வாகனமொன்றும் இல்லாதது அவன் நல்லதிற்குத் தான். இல்லையெனில் தேங்கி நிற்கும் பனிநீரால் அவனை அபிஷேகம் செய்து விட்டிருக்கும். பன்னிரண்டு மணியையும் தாண்டிய அந்த அகாலத்தில் யார்தான் தெருவில் நிற்பார்கள். இன்று வழமையாகப் போகும் பஸ்ஸையும் விட்டாகிவிட்டது. எல்லாம் அந்த பீற்றர் கிழவனால் வந்தது. இன்று கிழவனை எழுப்பி அனுப்புவதற்குள் போதும் போதுமென்றாகி விட்டது. கூடுதலாகக் குடித்து விட்டு தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டிருந்தது. வெளிக்கிடுவோமா என்று கேட்டபோதெல்லாம் சம்மதமாகத் தலையைத் தலையை ஆட்டி விட்டு மீண்டும் தூங்கத் தொடங்கி விட்டது. சரியான வின்ரர் சப்பாத்தை போடாமல் வந்ததற்காக தன்னைத் தானே நொந்து கொள்வதைத் தவிர வேறு வழியிருக்கவில்லை. பாதத்தின் மேலால் உட்புகுந்த பனி நீர் சாக்ஸ்ஸை நனைத்து கால்களை விறைப்பூட்டத் தொடங்கியிருந்தது. அடுத்த இரவுச் சேவையின் விசேட பஸ் வருவதற்கு இன்னும் 45நிமிடங்கள் இருந்தது. அதுவரை விறைக்கத் தொடங்கியிருக்கும் பாதங்களைச் சமாளிக்க முடியுமா என்று தெரியவில்லை. ஊவ் என்று இரைந்து வீசிய காற்று வேறு மூக்கு நுனியைச் சிவக்க வைத்துக் கொண்டிருந்தது. சுத்திக் கட்டிய தொப்பைப்பிள்ளையார் போல இருந்த அவன் கோலம் அவனுக்கே சிரிப்பாக இருந்தது. ஆனாலும் இந்தக் குளிரில் இருந்து தப்ப வேண்டுமென்றால் இதை விட வேறு வழியில்லை. ஜக்கற்றின் பைகளுக்குள் விட்டிருந்த கைகளை இன்னும் இறுக்கிய படி உடம்பை குறுக்கிக்கொண்டான். இந்த குளிரிலிருந்து தப்புவதற்கான அத்தனை படிமுறையும் அவனுக்கு இந்தக் காலத்துள் அத்துப் படியாகி விட்டிருந்தது. எல்லாக் கஸ்ரங்களுக்கும் பீற்றர் கிழவனின் மேல் தான் கோபம் வந்தது. பீற்றர் கிழவனை நேரில் கண்டால் கோபமெல்லாம் பறந்து விடும். தலையை சரித்து சிரிக்கின்ற அழகே எல்லோரையும் கவர்ந்து விடும். அவனும் கவனித்துக் கொண்டிருக்கின்றான். வேலையில் சேர்ந்த காலம் தொட்டு, ஒரு நாளாவது பீற்றர் கிழவன் அந்த உணவு விடுதிக்கு வராமல் இருந்ததில்லை. அங்கிருந்தவர்களில் ஒருவனாகவே பீற்றர் கிழவனையும் நினைக்கும் அளவிற்கு அது பழகிப் போய் விட்டிருந்தது. அரைப் போத்தல் சிவத்த வைன் பீற்றர் கிழவனின் கோட்டா. அதை மெல்ல மெல்லச் சுவைத்தபடி அனைவரையும் பார்த்து தலையாட்டிய படி சிரித்துக் கொண்டிருக்கும். நீண்டு மெலிந்த கரங்களில் வைன் கிளாஸ் எப்போதும் இருந்து கொண்டிருக்கும். இராணுவத்தில் பெரிய பதவியில் இருந்து ஓய்வு பெற்றிருப்பதாக அவன் கேள்விப் பட்டிருந்தான். அழகிய நீலநிறக் கண்கள் பளிச்சிடச் சிரிப்பது எப்போதும் அழகாய் இருக்கும். மனைவியை இழந்து தனிமையில் இருக்கும் பீற்றர் கிழவனுக்கு இந்த உணவு விடுதியும் இங்கு இருப்பவர்களும் தான் சொந்தம் என்பது போலவே அவனின் மாலை வேளைகள் இங்கேயே கழியும். இத்தனை வயதிலும் தளர்ந்து போகாத உடம்பும் முகத்தின் கவர்ச்சியும் இளமையில் பெண்களுக்கெல்லாம் சுவாரஸ்யம் மிக்க ஒருவனாகத் தான் இவனைத் தோன்ற வைத்திருந்திருக்கும்.

இரவு பதினொரு மணியை நெருங்கும் போதே ஒவ்வொருவராக அனுப்பி வைப்பதில் உணவு பரிமாறும் பெண்கள் முனைப்பாகிவிட்டிருப்பார்கள். இந்த பீற்றர் கிழவனை மட்டும் இவன் தலையில் கட்டி விட்டுப் போவதே அவர்கள் வழமையாகி விட்டிருந்தது. பீற்றர் கிழவன் இருப்பது இவனுக்கும் உணவு விடுதியைப் பூட்டும் வரை துணையாய் இருக்கின்ற போதிலும் சமயத்தில் இப்படி இடைஞ்சலாயும் போய்விடுகின்றது. நத்தார் விடுமுறை காலத்தில் இவ்வாறு சனக் கூட்டம் அலை மோதுவது ஒன்றும் பெரிய விடயமில்லை. உடம்பெல்லாம் அலுத்துப் போய் ஓய்வுக்குக் கெஞ்சுகின்ற அளவில் வேலை இருக்கும். அன்று வெள்ளிக் கிழமை வேறு . வெள்ளிக்கிழமை முன்னிரவு எப்போதும் குடிப்பதற்கும் கும்மாளமடிப்பதற்குமே ஒதுக்கப் பட்டது போல இங்குள்ளவர்களுக்கெல்லாம் ஒரு நினைப்பு. எங்கிருந்து தான் வந்து குவிகின்றார்களோ ? அப்படி ஒரு திரளாக வந்து போவார்கள். ஜவ்வனம் நிறைந்தவர்களிலிருந்து முதிர்ந்து தளர்ந்தவர்கள் வரை பாகு பாடின்றி வந்து போவார்கள்.

அன்றைய நாட்களுக்கான தயாரிப்பும் பெரிய அளவிலேயே இருக்கும். புதிதாக வந்து சேர்ந்திருந்த சோமாலியனை என்னுடன் விட்டிருந்தார்கள். வைன் போத்தல்களை மேலே கொண்டுவந்து அடுக்கிவைப்பதில் உதவி செய்து கொண்டிருந்தான். சிவப்பு வெள்ளை ரோஸ் நிறங்களில் உருளை நீள வடிவங்களில் இருந்த வைன் போத்தல்களை அது அதுக்கான இடங்களில் அடுக்கி வைப்பது என்பதே முதுகு வலியை உருவாக்கும் வேலை.
சோமாலியனைப் பொறுத்தளவில் அந்தவேலை அவனை கொல்லக் கொண்டு போனது போல இருந்திருக்க வேண்டும். இல்லையெனில் அவனுக்குத் தெரிந்த அத்தனை பேரையும் இழுத்து அத்தனை தூஷணை வார்த்தைகளையும் கொட்டித் தீர்த்திருக்க மாட்டான். வெளிநாடு பற்றி அவனிடம் கனவுகளை விதைத்தவர் முதற்கொண்டு அவன் அனுப்பும் பணத்திற்காக காத்திருக்கும் அனைவரையும் அவன் எதிரிகளாகவே நினைத்திருக்க வேண்டும். வைன் போத்தல்களைக் காவிக்கொண்டு செல்லும் சிரமம் அவன் கோவத்தை இன்னும் அதிகரித்துக் கொண்டிருக்க வேண்டும். இல்லயெனில் அத்தனை தூஷணை வார்த்தைகளுடன் அவனது ஆக்ரோஷமான குத்துகளையும் வாங்குவதற்கு அந்த குகை அறை சுவர்கள் என்ன பாவம் செய்திருக்க வேண்டும். வாழ்க்கையின் கரடு முரடுகளை முதல் முதலாகச் சுவைக்கும் அனைவரும் அவனைப் போலவே செயற்பட்டிருக்கக் கூடும். வாழ்க்கை என்பதை அறியாத போது உண்டான கற்பனைகள் எப்போதும் சரியாக இருந்திருக்க முடியாது. அதன் அதன் போக்கில் வருவதை எதிர் கொள்வதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும். அவனைப் பார்க்க பாவமாக இருந்தது. வெளிநாட்டைப் பற்றி பெரியதொரு கனவு அவனுக்கு இருந்திருக்க வேண்டும். அடிமை ஊழியம் செய்யும் ஒரு இடத்திற்கு அவன் வந்திருப்பதை அறியாதது ஒன்றும் பெரிய விடயமில்லை. காலப் போக்கில் அதை அறிந்து கொள்ளும் போது தான் அவனால் என்ன செய்து விட முடியும். நிறைவேறாத கனவுகளுடன் அலைந்து கொண்டிருக்கும் எத்தனை மனிதர்களை அவன் அந்த நகரத்தில் பார்த்திருக்கின்றான். உணவு பரிமாறும் இத்தாலியப் பெண் வெரோனிக்கா. அவள் என்ன கற்பனையில் தனது நாட்டை விட்டு வந்திருக்க முடியும். உணவு விடுதியின் ராட்சச அடுப்புகளுடன் இருபது வருடமாகப் போராடிக் கொண்டிருக்கும் செfவ் பிலிப்.
என்ன நம்பிக்கையுடன் அங்கு வந்திருப்பானோ ? அவன் கனவுகளை நிறைவேற்றிக் கொள்ள இன்னும் தான் போராடிக் கொண்டிருக்கின்றான். பங்களாதேசத்திலிருந்து வந்திருக்கின்ற முகம்மது. அவனது கனவுகள் தான் என்னவோ ? ஏன் நான். என்ன என்ன கனவுகள் எல்லாம் எனக்கும் இருந்தது. எத்தனை கனவுகள் இன்னும் இருக்கின்றது. எப்போதாவது நிறைவேறுமா என்ற நம்பிக்கையை விட இதோ இப்போது என்னும் கனவுடன் தானே ஓடிக் கொண்டிருக்கின்றேன்.

தன்னைப் பற்றிய எண்ணம் வந்தவுடன் சிந்தனை அறுந்து போக தன்னைச் சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தான். வெளிச்சச் சிதறலை சிதைத்த வண்ணம் நீர்ச் சிதறல்கள் காற்றின் போக்கில் அலைந்து கொண்டிருந்தன. காற்றின் திசையைத் தவிர அவைக்குத் தான் போக்கிடமேது. இதுவரை மக்களால் நிறைந்து போயிருந்த அந்த வீதி அனைவரையும் வெளியேற்றி விட்டு ஹோவென்று தூங்கிக் கொண்டிருந்தது. அவனைப் போல் ஓரிருவரின் தொந்தரவும் இல்லை என்றால் தூக்கம் என்பது உண்மையாகவே இருந்திருக்கக் கூடும். நகரத்தின் சந்தடி மிக்க வீதி இவ்வாறும் வெறிச்சுப் போயிருக்கும் என்பது பலரது கற்பனைக்குள்ளும் சிக்காத ஒரு விடயம் தான். ஆரம்பத்தில் ஆச்சரியமாகத் தோன்றிய விடயம் இப்போது பரிச்சியமாகிப் போய்விட்டிருந்தது. அவனது அன்றாட வாழ்க்கையின் உண்மையைப் போலவே எதிரும் புதிருமான பல நிகழ்வுகள் மனக்கிளர்ச்சியை ஏற்படுத்தாது அமைதியாக நடந்து கொண்டிருந்தன. அவன் அம்மாவைப் போல. அவன் அம்மாவைப் பற்றிய எண்ணங்கள் ஏற்படும் போதெல்லாம் அவனுள் பல ஆச்சரியங்கள் சிறகு விரித்துப் போய்விடும். ஒவ்வொருவரும் தம் அம்மாக்களைப் பற்றி இவ்வாறே விழி விரித்துப் பேசுகிறார்கள். தமக்கென ஆசைகளில்லாது வாழ்வது எப்படிச்சாத்தியம். கடிதத்தின் முதல் பக்கம் அவ்வளவும் அவன் சுகத்தையும் நலத்தையும் பல்வேறு வார்த்தைகளில் கேட்டுக் கொண்டிருந்தது. அம்மாவைப் பொறுத்த அளவில் அவனின் சுகமும் முக்கியமும் பெரிதளவில் இருந்தது. அவளது மூத்த பிள்ளை என்பதுடன் அவனைத் தொடர்ந்து பிறந்த பிள்ளைகளின் எதிர்காலமும் அவன் கைகளில் இருப்பதாக அவள் நினைப்பதைப் போலவே அவனுக்கும் நினைவூட்டிக் கொண்டிருந்தாள். தனிமையில் அத்தனை துன்பங்களையும் தானே சுமப்பதாய் இருந்த எண்ணத்திற்காக வெட்கப்பட்டான். எல்லோரும் ம்ற்றவர்களின் சந்தோசத்திற்கும் உதவிக்கும் ஆக வாழ்வதாகவே ஒரு நினைவு அவனுள் ஓடியது. இந்த நகரம் ஏதோ ஒரு ஒழுங்கில் இயங்குவதாகவே அவனுக்குத் தோன்றியது. அந்த நகரம் எத்தனை பேரின் நம்பிக்கைகளைச் சுமந்து கொண்டிருப்பதான நினைப்பே பிரமிப்பதாயிருந்தது. தன்னை சுற்றி இருக்கும் மனிதர்களுக்காகவே தன் வாழ்க்கை இருப்பதான ஒரு உணர்வு அவனுக்கு உற்சாகத்தை ஊட்டியது. இதுவரை இருந்த மனக் கிளர்ச்சி தணிந்து ஒரு சமநிலையை அவனுள் ஏற்படுத்தியது. ஒன்பது மணிக்கு மீண்டும் வந்து உணவு விடுதியைத் திறக்க வேண்டிய தேவை அவனுக்கு இருந்தது. அந்த எண்ணத்துடனேயே பஸ்ஸில் ஏறி உட்கார்ந்து கொண்டான்.

நம்பிக்கை

இன்றக்கும்
அப்படித்தான்
கழிந்தது
யாரும் என்னை
வரவேற்கவில்லை

சுமைகளை
சுமந்து கொள்ளவோ
வியர்வையை
துடைத்து விடவோ
ஒரு கரமும்
நீளவில்லை

மன அளவில்
ஒவ்வொருவரும்
ஒவ்வொரு
திக்கில்
இருந்தாலும்

எனக்கு இன்னும்
நம்பிக்கையுண்டு
வீட்டிலிருக்கும்
உனது
புன்னகையோ
தலையசைப்போ
போதாதா

என்க்கு
உலகத்தை
வளைத்துப்
போட ....

புது வீட்டிற்கு வாருங்கள்

புது வருடத்துடன் நானும் புது வீடு போகின்றேன் புதிய எண்ணங்களுடன். என் மன வானில் சிறகடிக்கும் எண்ணங்களுடன் உங்களைச் சந்திக்கின்றேன்.
பழைய எண்ணங்களை இணைப்பில் இருக்கும் 'சிந்து' இல் சென்று பாருங்கள்.
அன்புடன் இளந்திரையன்