Sunday, January 08, 2006

அம்மாவைப் போல

காலையிலேயே சண்டை தொடங்கியாகிவிட்டது. பத்து வயதுக் குழந்தை கண்ணைக் கசக்கிக்கொண்டு அழுவது மனதைப் பிசைந்து கொண்டிருந்தது. விம்மிக்கொண்டு ' பாட் ... மம்மி ' என்று அடிக்கடி சொல்லிக் கொண்டே அழுது கொண்டிருந்தது. நித்தியா எப்படி எப்படியோ சமாதானம் சொல்லியும் கேட்க மாட்டேன் என்று அடம் பிடித்து அழுது கொண்டிருந்தது.

அங்கு வந்த அருண் நிலமையைப் புரிந்து கொண்டான். சுமியின் சின்ன மனதின் ஆசைகளையும் அவன் அறிவான். தன் பிரெண்ஸ்ஸுக்கெல்லாம் தன் மம்மியை அறிமுகப் படுத்த வேண்டுமென்ற சுமியின் நீண்ட நாள் ஆசையை அவன் நன்கு அறிவான். சுமியின் பள்ளியில் நடைபெறும் பிரைஸ் கிவிங் டேக்கு மம்மியை அழைத்துச் செல்லவேண்டும் என்றே அடம் பிடித்து அது அழுது கொண்டிருந்தது.

அந்த நாளில் அவள் ஸ்பேசில் இருந்தாக வேண்டிய கட்டாயத்தை அந்தக் குழந்தைக்கு எப்படி விளங்கப்படுத்துவது. பிரபல விஞ்ஞானியான தன் மனைவியின் சங்கடத்தை அவன் புரிந்து கொண்டான். ஒரு தாயாக தன் பாசத்தை பகிர்ந்து கொள்ள அவளுக்கிருக்கும் தடைகளையும் அவன் அறிந்திருந்தான். கண்கள் கலங்கி அழ ஆயத்தமாகி நின்ற மனைவியின் முகத்தைப் பார்த்தவன் ஒரு தீர்மானத்துடன் சுமியிடம் வந்தான்.

'சுமிக்கண்ணு ... அப்பா ஏஞ்ஜல் கதை சொல்லுவேனாம் நீங்கள் அழாமல் கதை கேக்கணும் என்ன ? ' என்றவாறே அந்தக் குழந்தையை அள்ளி அணைத்துக் கொண்டு சுமியின் அறைக்குக் கொண்டு சென்றான். ஏஞ்ஜல் கதை கேட்பதென்றால் சுமிக்குக் கொள்ளை ஆசை. அதுவும் அப்பா சொல்லும் கதையில் வரும் ஏஞ்ஜல்கள் எல்லாம் ரொம்ப நல்ல ஏஞ்ஜல்கள். குழந்தைகள் என்றால் அவைக்குக் கொள்ளைப் பிரியம். அழுகின்ற குழந்தைகளுக்கெல்லாம் சாக்லேட் ரொய்ஸ் எல்லாம் கொண்டுவந்து கொடுக்கும். எல்லாரும் சந்தோஷமாய் இருக்கிறதைப் பார்த்துத் தான் அவையும் சந்தோஷப் படும். இந்த ஏஞ்ஜல் எல்லாம் முந்தி மனிதராய் இருந்து எல்லாருக்கும் நல்லது செய்து ஏஞ்ஜலாய் ஆனதா அப்பா சொல்லியிருக்கார். இந்த அம்மாவுக்கு என்னை அழவைக்கிறதே வேலையாப் போய்ட்டு. பாட் அம்மா ... இவ எல்லாம் ஏஞ்ஜலா வரமாட்டா... . சுமியின் எண்ணத்தை அப்பாவின் ஏஞ்ஜல் கதை மறக்கடித்தது. அந்த ஏஞ்ஜல் செய்த சாகசத்தைக் கேட்டு குழந்தை கலகலவெனச் சிரித்தது.


நித்யா ஸ்பேசிற்குப் போகின்ற நாள். குழந்தை முகத்தை திருப்பி வைத்துக் கொண்டேயிருந்தது. நித்தியாவிற்கு மனதை சங்கடப் படுத்தியது. இந்த தடவையுடன் ஸ்பேசிற்குப் போவதற்கு சமதிக்கக் கூடாது. இதுவே கடைசி தடவையாய் இருக்கட்டும். குழந்தையின் ஏக்கம் அவளிற்குப் புரிந்தது. பத்து வயதாகி விட்ட பெண்குழந்தை. அம்மாவின் அருகாமைக்காக ஏங்கத் தொடங்கிவிட்டது புரிந்தது. குழந்தையின் பாராமுகத்துடன் விட்டுப் பிரிவது கஸ்டமாக இருந்தது. ஏக்கத்துடன் அருணைப் பார்த்தாள். குழந்தையைச் சமாதானப் படுத்தி அம்மாவிற்கு ஒரு முத்தம் மட்டும் கொடுக்கச் சம்மதிக்க வைத்தான். அவன் கரங்களைப் பிடித்திருந்த நித்தியாவைப் பார்த்தான். அவள் கண்கள் கலங்கியிருந்தது. முதுகை ஆறுதலாகத் தடவி விட்டான். இருவரையும் சேர்த்து அணைத்தவள் விடுவிடுவென்று சென்று தனக்காக காத்திருந்த காரில் ஏறியமர்ந்தாள். கார் நாசாவை நோக்கிச் சென்றது.

நாட்கள் வேகவேகமாகச் சென்றது. பரிசோதனைகள் எல்லாம் வெற்றிகரமாக முடிந்ததில் அந்தக் குழு மட்டில்லாத மகிழ்ச்சியுடன் இருந்தது.
இன்று பூமிக்குத் திரும்பும் நாள். நித்தியா அருணையும் குழந்தை சுமியையும் நினைத்துக் கொண்டாள். சுமியின் ஏக்கம் விரியும் கண்கள் அவளைப் பாடாய்ப் படுத்தியது. இனிமேல் சுமியை விட்டு எங்கும் போகக் கூடாது என்று மனதை திடப்படுத்திக் கொண்டாள். அவர்களை சுமந்து கொண்டு வந்த கொலம்பியா வளி மண்டலத்துள் நுழைந்தது. நுழைந்த சில கணங்களுக்குள் துண்டு துண்டாக வெடித்து காணாமல்ப் போனது.

அங்கு நீண்டிருந்த வரிசையில் மக்கள் துயரத்துடன் காத்திருந்தார்கள். கைகளில் மலர் வளையங்களுடனும் மலர்ச் செண்டுகளுடனும் நின்ற அவர்களில் சிலர் துக்கம் தாளாது கதறி அழுதனர். அங்கு வைக்கப்பட்டிருந்த ஏழு போட்டோக்களில் அம்மாவின் போட்டோவும் இருந்தது. விண்வெளி உடையுடன் கைகளை வீசிச் சிரித்த படி அம்மா நின்றிருந்தாள். வரிசையில் வந்த மக்கள் அங்கு நின்ற அவர்களின் உறவினர்களை ஆறுதல் படுத்தியும் அரவணைத்தும் சென்றனர். அருண் கண்ணீர் கன்னங்கலில் வடிய தன் மனைவியின் படத்தைப் பார்த்தவாறே நின்றிருந்தான். அவன் கரங்களைப் பிடித்தவாறு நின்ற குழந்தை சுமியின் கன்னத்தைத் தடவிய சிலர் " யுவர் மம்மி இஸ் எ ஏஞ்ஜல் " என்று கூறிச் சென்றனர். தன் மம்மியும் அவர்களுக்கெல்லாம் நன்மை செய்தபடியால் தான் அவர்கள் மம்மியை ஏஞ்ஜல் என்று சொல்கிறார்கள் என்பது மட்டும் அந்தக் குழந்தைக்கு விளங்கியது. ஏதோ தீர்மானத்துக்கு வந்தது போல் மம்மியின் படத்தை நோக்கிச் சென்றது. " மம்மியைப் போலவே நானும் எல்லாருக்கும் உதவி செய்யறவளா வரணும் " என்று வேண்டிக்கொண்டே ஒரு ரோஜாப்பூவை எடுத்து மம்மியின் போட்டோ முன்னால் வைத்தது. அதன் கண்களிலும் கண்ணீர். தன் மனைவியின் போட்டோவையும் குழந்தையையும் மாறி மாறிப் பார்த்த அருண் குழந்தையைத் தன்னுடன் இறுக்கிக் கொண்டான்.

5 comments:

Anonymous said...

கல்பனாவை மீண்டும் நெஞ்சத்தில் கொண்டு வந்து தியாகத்தில் தாய்மையை விளக்கிய உங்களூக்கு நன்றிகள்....... இதே போல படைப்புகளை எதிர் பார்க்கிறோம்............

Balloon MaMa said...

இந்தப் பதிவுக்குச் சம்பந்தமில்லாதது....

பொங்கல் வாழ்த்துகள்.
நண்பர்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் மகிழ்ச்சியும் அன்பும் பொங்கல் போல் பொங்கட்டும்.

அன்புடன்,
கல்வெட்டு (எ) பலூன் மாமா

இளந்திரையன் said...

உங்களுக்கும் அன்பு கனிந்த பொங்கல் வாழ்த்துக்கள் கல்வெட்டு (எ) பலூன் மாமா

Anonymous said...

இதே பெயரில் நான் ஒரு வலைப்பதிவை 1.1/2 வருடமாக வைத்திருக்கிறேன்.இதே பெயரில் வைத்திருந்தால் பெயர் குழப்பம்
வரும் என்றே நினைக்கிறேன்.கவனிக்கவும்.

இளந்திரையன் said...

கவனித்தேன்.... "என் வான்வெளி " ஆக்கியிருக்கின்றேன்....இப்போது சரிதானே....

இத்தால் சகலமானவருக்கும் அறிவிப்பது என்னவெண்றால் என் " மனவெளி " பொங்கல் முதற்கொண்டு "என் வான்வெளி " ஆகின்றது.