முதலில் காதல் தெய்வீகமானது என்று நம்பிக்கொண்டு காதலித்துக்கொண்டிருப்பவர்கள் இதைப்படிக்க வேண்டாம். உங்கள் நம்பிக்கையை அல்ல வாழ்க்கையின் ஒரு கட்டத்தில் வரக்கூடிய ஒரு அனுபவத்தை நீங்கள் இழந்து போவதை நான் விரும்பவில்லை. அதனால் இப்போதைக்கு இதை நீங்கள் படிக்கவேண்டாம்.
' காதல்' செய்து முடித்தவர்கள் இதைப் படிக்கலாம்.
காதலைப் பற்றி சொல்பவர்கள் முதலில் என்ன சொல்கின்றார்கள் என்று பார்ப்போம். 'காதல் தெய்வீகமானது' , 'மனதில் இருந்து வருவது காதல்' , 'இரு மனம் ஒன்று சேரும் பொழுது காதல் வருகின்றது', உடலைப் பார்த்து வருவதல்ல காதல் மனதைப் பார்த்து வருவது காதல்' , 'அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள் வந்தது காதல்' இப்படி எத்தனையோ சொல்கின்றார்கள்.
காதல் என்று தங்க முலாம் பூசப்படும் விடயம் முதலில் இரண்டு மனிதர்களுக்கிடையிலான இனக் கவர்ச்சிதான் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு ஆணினதோ பெண்ணினதோ அழகு/உடலமைப்பு தான் ஒருவரை ஒருவர் கவருகின்றது. அந்தக் கவர்ச்சியில் ஏற்பட்ட கிளர்ச்சியில் ஒருவருடன் ஒருவர் பழக முற்படுகின்றனர். தன் தன் மனதில் இருக்கக் கூடிய அழகுணர்ச்சியின் தன்மைக்கேற்பவும் தன் அழகு/ தகுதி நிலை பற்றிய கணிப்பிற்கேற்பவும் சம அழகு தோற்றம் உடையவர்களின் மேலேயே 'காதல்' ஏற்படுகின்றது. சில சந்தர்ப்பங்களில் கூடிய அழகு /தகுதி உடையவர்களின் மேலும் மனம் நாட்டம் கொண்டாலும் அவை ஒரு தலைக்காதலாகவோ இல்லை நிறைவேறாக் காதலாகவே போய் விடுகின்றது. 'காதல்' என்று சொல்லிக் கொள்ளும் போதெல்லாம் பெண்ணின்/ஆணின் அழகைத்தான் கண்கள் பருகுகின்றது. அந்த அழகைப் பற்றியே காதல் கவிதை எனச்சொல்லப் படும் கவிதைகளில் எழுதிக் குவிக்கின்றனர். அல்லது மற்றவரின் கவனத்தை ஈர்ப்பதற்கான முயற்சிகள் கவிதையாகின்றன. அல்லது அவனின்/அவளின் பிரிவு அல்லது அவன்/ அவள் கிடைக்க முடியா தடைகள் அதனால் ஏற்படும் பரிதாப உணர்வு கவிதையாக்கப் படுகின்றது. இவையில்லா கவிதைகள் காதல் கவிதையாகக் கொள்ளப் படுவதில்லை. கம்பன் முதல் கடையீற்று கவிஞன் வரை
பாடு பொருள் உடல் அங்கங்களாகவே இருக்கின்றது. மனதைப் பார்த்து யாரும் பாடுவதில்லை. நல்ல குணம் உள்ளவன்/உள்ளவள் என்பதற்காக அழகற்ற ஒருவன்/ஒருவளுக்கு அழகான துணை கிடைப்பதில்லை. ஜோடிப் பொருத்தம் என்பது புறத்தோற்றம் தானேயொழிய மனத்தோற்றம் அல்ல. காதல் என்பதும் தெய்வீகம் என்பதும் காமம் என்ற சொல்லை மூடிவைத்த ஒரு பகட்டு. பண்பட்ட மனித விழுமியங்கள் அடிப்படை மன வக்கிரங்களை மூடிவைத்திருக்கின்ற அழகு பாத்திரங்கள். அவ்வாறே நடந்து கொள்வது நாகரீக சமுகத்தில் இன்றியமையாதது. இனப்பெருக்கம் என்பது இயற்கையின் ஆதார சிருஷ்டி தத்துவம். சுருங்கச் சொன்னால் ஆண்/பெண் என்ற படைப்பின் தேவை ஆனது உலகின் இருப்பிற்குத் தேவையான இனப்பெருக்கமே.
உறவுகளின் பல படிநிலைகளில் மனதின் வெளிப்பாடுகள் பல சொல்லடுக்குகளாக வெளிக்காட்டப்படுகின்றது. அன்பு ,பாசம்,மரியாதை, பக்தி ,காதல் , ஈர்ப்பு.வாஞ்சை என்று சந்தர்ப்பத்திற்கேற்ப சொல்லடுக்குகள் மாறு படுகின்றன. அல்லது வித்தியாசப் படுத்துவதற்கு உதவுகின்றன.
இவை எல்லா உணர்வுகளும் குறைந்தபட்சம் இரண்டு மனிதர்களுக்கு இடையில் ஏற்படும் உணர்வுகள் தான் என்றாலும் காதல் என்பது மட்டும் தெவீகமானது என்று மேன்மைபடுத்தப் படுகின்றது.
ஆனால் காதலிக்கும் காலங்களில், மனதோடு மனதின் ஆசைகளுக்கும் இச்சைகளுக்கும் உட்பட்ட/உருவாக்கப் படும் உணர்வு தான் காதல் என்ற போதிலும் புத்தி என்ற அறிவு உலக நடைமுறைகளுடன் இந்த ஆசையின் போக்கையும் இரண்டு நபர்களாலும் ஒத்துப்போகக்கூடிய/ஒத்துப் போகமுடியாத கணங்களைக் கணித்துக் கொண்டே இருக்கின்றது. ஏனெனில் இங்கு இரண்டு விதமான விருப்பு வெறுப்புக்களை கொண்ட உயிர்கள் ஒரு கோட்டிற்குள் வர முடியாவிட்டாலும் அருகருகே வர எடுத்துக் கொள்ளும் பகீரதப் பிரயத்தனம் தான் காதல் என்ற பெயரில் நடந்து கொண்டிருக்கின்றது.
அறிவின் கணிப்பினால் அவநம்பிக்கை ஏற்படும் பொழுது தங்கள் 'காதல்' மேலேயே சந்தேகம் வருகின்றது. இந்த சந்தேகம் அவர்கள் தெரிவு பற்றிய அவநம்பிக்கையை ஏற்படுத்துகின்றது. அதனாலேயே இலகுவாகப் பிரிந்தும் போகின்றார்கள். இவ்வாறான விவேகம் அவர்கள் வாழ்க்கையிலும் மற்றவர் வாழ்க்கையிலும் ஏற்படக் கூடிய குழப்பத்தைப் போக்குகின்றது. காதல் தெவீகம் என்ற வரட்டுத்தனம் இங்கு இல்லை.
ஒவ்வொருவர் மனச்சாட்சியும் பேசிக்கொள்ளும் பொழுது இவ்வாறு அவர்கள் வாழ்க்கையில் சலனத்தை ஏற்படுத்தி குறிப்பிட்ட காலத்திலேயோ கணத்திலோயோ வாழ்ந்தவர்களின் பட்டியலைப் பார்க்கலாம். கவர்ந்தவர்களை பற்றியல்ல நான் சேர்ந்து வாழவேண்டும் என்று விரும்பியவர்கள் பட்டியலைத்தான் நான் இங்கு குறிப்பிடுகின்றேன்.
காதலின் உச்சம் திருமணம் என்று சொன்னால் இங்கு காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள் எல்லாம் பூரித்துப் போய் வாழ்ந்து கொண்டிருக்கவேண்டும். நடைமுறையில் அவ்வாறு எல்லாம் நடை பெறுவதில்லை. காதல் என்பது இனக் கவர்ச்சியான காமத்தின் வெளிப்பூச்சே. இதில் போய் தெய்வீகம் பூர்வீகம் என்று பாசாங்கு செய்து முதிர்ச்சி அடையா இளவயதுப் பிள்ளைகளின் மனதில் கற்பனாவாதத்தை வளர்த்து இள வயதுத் தற்கொலைகளுக்கும் மனச் சிதைவுகளுக்கும் அடிப்படை அமைத்துக் கொடுப்பது எவ்வகையில் சிறப்பானது. உள்ளது உள்ளவாறு எடுத்துச் சொல்வது ஆரோக்கியமான சமூக அமைப்பிற்கு ஏதேனும் ஒரு வகையில் உதவக் கூடும். செக்ஸ் கல்வி முறை கற்பனாவாத மனக்கிறக்கங்களைத் தாண்டி வாழ்க்கையின் யதார்த்தத்தைப் புரிந்து கொள்ள அடியமைக்கக்கூடும்.
Saturday, January 07, 2006
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
கேட்டாயே ஒரு கேள்வி
போட்டாயே ஒரு போடு!
கண்ணதாசனுடைய பழைய பாட்டுதாங்க.
முதலில எங்கட சினிமாவை மாற்றாத வரைக்கும் எல்லாம் இப்படித்தான். (இலக்கியம் கொஞ்சம் பரவாயில்லை) எதையெடுத்தாலும் காதல்தான். நூற்றில ஒருபடமாவது காதலை முதன்மைத்தளமாகக் கொள்ளாமல் வந்தால் ஆச்சரியம்தான். அதுக்குள்ள காதலுக்கு நடக்கிற பிரச்சாரம் கொதியைத்தான் கிளப்புது.
----------------------------------------
நீங்கள் வாசிக்கவோ, வாசிக்காமல் விடவோ சொன்ன வகைகளுக்குள் என்போன்றவர்கள் வரவில்லையே?
காதலித்துக்கொண்டிருக்காத, காதலித்து முடிக்காத வகை. அதாவது எதுவுமே தொடங்காத வகை.
நாங்கள் என்ன செய்ய?
;-((
காதல் என்பது அன்பு...அளவான மனதோடு நிம்மதியான வாழ்வைத் தரும் அன்பு.. பரஸ்பரம் புரிந்து கொள்ளக் கூடிய அன்பு. நட்புடன் கூடிய அன்பு. மதிக்கவும் மதிக்கப்படவும் தெரிந்த அன்பு... அவ்வளவு தான். தேடிப் பாருங்கள்...
உங்களுக்கேற்ற உங்களை ஏற்றவராகக் கொள்ளக் கூடிய மனதுள்ள பெண். பூக்களிலே எந்தப்பூ பிடிக்கும் என்று சொல்லமுடியுமா? பூக்கள் எல்லாம் ஒவ்வொரு விதமாக பல காரணங்களுக்காகப் பிடித்திருக்கும். அழகு மட்டுக்குமாக இல்லாமல் பல காரணங்களுக்காக.
உங்களுடன் வாழ்க்கை முழுவதும் வரக் கூடிய உறவு.உங்களைப் போன்ற உங்களுடன் அதிகம் ஒத்துப் போகக் கூடிய ரசனைகள். அப்போது தான் ஒருவருக்கொருவர் தட்டிக் கொடுத்து உற்சாகப் படுத்தி சிகரங்களைத் தொட இது உதவும்.
மனம் துன்பப்பட்டு காயப்பட ஏன் ஒரு மனைவி/கணவன். நட்பு /மேலான பரிவு அதற்கும் மேலால் ஒருவருக்கு ஒருவர் இவனால்/இவளால் பாதுகாப்பு என உணரும் நிம்மதி. இவன்/ இவள் எனக்கேயெனக்கு எனற உரிமை.
அவ்வளவு போதும் ஒருவரை காதலிக்க /காதலிக்கப் பட . தெய்வீகம் என்பதெல்லாம் இல்லை. மனிதம் இருந்தால் போதும். வாழ்க்கை நிறைவாக இருக்கும்.
Post a Comment