இன்று தைப்பொங்கல் . தமிழர் திருநாள் . உலகெல்லாம் இருந்து தமிழ் மக்கள் இத்திருநாளைக் கொண்டாடிக் கொண்டிருப்பார்கள் என்று எண்ணுவதே ஆனந்தமாக இருக்கின்றது. இதை சாவகாசமாக உட்கார்ந்து எண்ணிக் கொண்டிருக்க என் மனமும் இலேசாகி என் வாழ்க்கையில் கடந்து போன பொங்கல் அனுபவங்கள் என் மனதில் விதைத்து விட்டுப் போன ஞாபகக் கரைசல்களை கலக்கி விட்ட குளத்துத் திண்மங்கள் போல மெல்ல மெல்ல மேலெழுந்து கொண்டிருந்தது. வாழ்க்கையின் வழித்தடங்களாய் கடந்து போன காலத்தின் நினைவுத் திரட்டுக்கள். மகிழ்வும் நெகிழ்வும் சிரிப்பும் சிந்தலுமாய் அனுபவங்களை அறுவடை செய்த நாட்கள்.
போருக்கு முந்திய ஊரும் உலகும் அழகானது. அடைகாத்து வைக்கப் பட்ட எத்தனையோ ஆவணங்களைக் கொண்டது. அதுவும் தமிழர்கள் செறிந்து வாழும் யாழ்ப்பாணப் பிரதேசம். தமிழர் பெருநாட்கள் அதற்கேயான களையுடன் கொண்டாடப் படும். ஊரே களைகட்டிவிடும். வீட்டு வாசல்களும் முற்றமும் கூட்டி மெழுகி மாவிலையும் தோரணமுமாய் அழகு சேர்க்கத்தொடங்கி விடும். ஆலய மணியின் ஓசையும் பாடலும் பரவசமுமாய் ஒரு பவுத்திரம் மனதில் நிறைந்து விடும்.
வீதிகள் எல்லாம் வருவோரும் போவோருமாகக் களையுடன் காணப்படும். புதிய ஆடைகள் சரசரக்க உற்றார் உறவினர் வீடுகள் நோக்கியும் கோவில்கள் நோக்கியும் போவோரும் வருவோருமாக புது உற்சாகமே அங்கு ஊற்றெடுத்து நிற்கும். அன்று நாள் முழுவதும் கொண்டாட்டம் தான். அரச விடுமுறை வேறு. மாணவர் கூட்டமே சிறகடித்துப் பறக்கும். புது ஆடையும் சிரிப்பும் கும்மாளமுமாக சுத்திச் சுத்தி வரும். ஒரு இடத்தில் இருக்காது காலில் சக்கரம் சுத்திவிட்டது போல ஊரைச்சுத்திச்சுத்தி வரும் பையன்கள் கூட்டம்.
அக்கம் பக்கத்து ஊரிலெல்லாம் கொண்டாட்டம் அமர்க்களமாக இருக்கும். சில ஊர்களில் பொங்கல் திருவிழாவென்று விளையாட்டுப் போட்டிகளும் வண்டில் சவாரிப் போட்டிகளும் நடாத்துவார்கள். விருப்பப் பட்டவர்கள் அதற்கும் போய் வருவார்கள். இளைஞர்கள் தங்கள் வீரதீரப்பராக்கிரமங்களைக் காட்ட இவற்றிலெல்லாம் பங்கு பற்றுவவர்கள். அதுவும் திருமண வயது வந்தவர்கள் காட்டும் வேகம் ஆச்சரியமூட்டும். வெற்றி பெற்ற வீரர்களின் கதைகள் நான்கு நாட்களுக்கு ஊர் முழுக்க சுத்தி வரும் என்பது வேறுவிடயம். யார் யாருக்கு என்னென்ன தேவைகள் இருந்ததோ அவர்களுக்குத்தான் வெளிச்சம்.
தை மாதத்தில் வாடைக்காற்று என்னும் வடமேல் பருவப் பெயற்சிக்காற்று வீசும் காலமாகும். காற்றாடி எனப்படும் பட்டங்கள் விடுவதற்கு ஏற்ற காற்று வாடைக்காற்றாகும். தைப் பொங்கல் காலத்தில் தான் பட்டம் ஏற்றுவதும் சிறப்பாக நடைபெறும். தைப் பொங்கலுக்கு முற்பட்ட நாட்களிலேயே பட்டம் ஏற்றுவது தொடங்கி விட்டிருக்கும் என்றாலும் பொங்கல் தினத்தில் அதற்கொரு மவுசு வந்துவிடும். பச்சை சிகப்பு மஞ்சள் என்று பலப்பல வர்ணத்தாள்களில் அழகழகான காற்றாடிகளைக் கட்டி ஏற்றுவார்கள். இந்த காற்றாடிகளில் 'சீன்னட்டான்' , 'படலப்பட்டம்' , ' செம்பிராந்து' , 'மணிக்கூட்டுப் பட்டம்' , ' கொடிப்பட்டம்' என்று இன்னும் பெயர் மறந்து போன காற்றாடிகளும் உண்டு. இதில் சில 'வால்'களைக் கொண்டதாகவும் சில வால் இல்லாமலும் பறக்க விடப்படும்.
'வால்' கள் இல்லாமல் பறக்கும் பட்டத்திற்கு பல நுணுக்கங்களைப் பாவிப்பார்கள். காற்றைச் சமநிலைப்படுத்தவும் விழுந்து விடாமல் எதிர்க்காற்றில் ஏற்றுவதற்கும் அந்த நுணுக்கங்கள் கையாளப்படும். அதில் கை தேர்ந்த 'விண்ணர்களும்' இருந்தார்கள். விண்ணவர்கள் என்றால் மேலுலகத்தில் இருப்பவர்கள் மேலானவர்கள் என்பதைப் போல் இவர்களும் ஒரு வகையில் மேலானவர்கள் என்ற காரணத்தால் போலும் இவர்களும் 'விண்ணர்கள் ' என்று அழைக்கப்பட்டார்கள்.
இவ்வளவும் செய்து காற்றாடியை ஏற்றும் போது பார்க்க 'கலர்புல்'லாக இருக்கும். காற்றில் வர்ணத்தாள்கள் ஒரு சலசலப்பை ஏற்படுத்தி கவர்ச்சியைக் கூட்டும். காற்றாடி ஏற்றுவதில் பல போட்டிகளும் அக்கம்பக்கத்தில் உள்ளவர்களிடம் வந்து விடும். பெரிய காற்றாடி ,அதிக உயரம் ஏற்றுவது என்று பலபோட்டிகள் வந்து விடும். மேகத்தைத் தொடும் அளவிற்கு உ......ய........ர......மா......க ஏற்றும் விண்ணர்களும் இருக்கின்றார்கள். அவ்வளவு உயரம் போனதா இல்லையா என்று போய்ப்பார்க்க வசதி இல்லாதபடியால் அவர்கள் சொல்வதை நம்புவதை விட வேறு என்ன செய்ய முடியும். ஆனாலும் தரையில் இருக்கும் போது பெரீய்ய பட்டமாக இருந்தது சின்னத் துக்கடாப்பட்டமாக தெரியும் உயரம் வரை பார்த்திருக்கின்றேன். என்னால் எல்லாம் ஒரு பனையுயரம் மட்டுமே காற்றாடி ஏற்ற முடிந்தது.
எவ்வளவு அழகாய் இருந்தாலும் உயரப்போய் விட்டால் அழகும் தெரியாது அளவும் தெரியாது ஊமைப் படம் பார்ப்பது போல இருக்கும். இதற்காக இந்த விண்ணர்கள் 'விண்' என்று கூறப் படும் நாதமெழுப்பியை காற்றாடிகளில் கட்டி விடுவார்கள். பனை மட்டை நாரில் மிக வள்ளிசாகத் தயாரித்திருப்பார்கள். காற்று இந்த 'விண் ' இல் பட்டு தெறித்துப் போவது போல செய்திருப்பார்கள். காற்று பட்டு விலகிக் கொண்டிருக்கும் வரை தொடர்ந்து இசை வந்து கொண்டிருக்கும். இரவு வேளையில் உங்களைத் தூங்கவிடாமல் தொந்தரவு செய்வது வரை அதன் சத்தம் இருக்கும்.
காற்றாடியைப் பற்றி எழுதப் போக அது இவ்வளவு நீ....ட்டமாகப் போய் விட்டது. நானும் முதன்முதல் ஒரு வாலில்லாத பட்டமாக "செம்பிராந்து" இந்தப் பொங்கல் நாளில் ஏற்றியதும் அது பொங்கல் பானைக்கே விறகாகிப் போனதும் தனிக் கதை. சந்தர்ப்பம் இருந்தால் பிறகொரு முறை எழுதுகின்றேன்.
இப்படியாக ஒவ்வொரு வயதினருக்கும் ஒவ்வொரு வகை மகிழ்வைக் கொடுத்த படி பொங்கல் திருவிழா மெதுவாகக் கழியும். இரவில் கலை நிகழ்ச்சிகளும் சில ஊர்களில் நடை பெறும். அன்று இரவு வேளையில் அதிகமானவர்கள் சினிமா பார்க்கவும் போவார்கள். பொங்கல் "ரிலீஸ்"கள் பல தியேட்டர்களில் அமர்க்களப் படும்.
இதுவெல்லாம் ஒரு இருபது வருடத்திற்கு முந்திய பொங்கல் தினத்தின் களியாட்டங்கள். காலம் எப்படியெப்படியோ எல்லாவற்றையும் புரட்டிப் போட்டுவிட்டது.
எல்லோருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.
Saturday, January 14, 2006
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
அனுபவம் அருமை.
எங்கள் ஊரில் ஆனி, ஆடி மாசங்களில்தான் பட்டம் பறக்க விடுவோம். அந்நேரம் கச்சான் காத்து எண்டு நினைக்கிறேன். மின்விளக்கெல்லாம் பூட்டி பட்டமேற்றுவார்களே, பார்த்திருப்பீர்கள். எவ்வளவு அழகாக இருக்கும். 1990 இல்தான் நான் இறுதியாக மின்விளக்குப்பூட்டிப் பட்டமேற்றியதைப் பார்த்திருக்கிறேன்.
வல்வெட்டித்துறையார் பட்டத்திருவிழா எண்டு ஒண்டு செய்யிறதா அறிஞ்சன். அங்க தையிலதான் நடக்கும். ஒருமுறை போகேக்க வானமே தெரியாத மாதிரிப் பட்டமேத்திச்சினம். எவ்வளவு பட்டங்கள்! மின்விளக்குகள் பூட்டின பட்டங்கள் நிறைய.
ஆனாலும் பட்டம் விடுறது கரையோரப்பகுதிகளிலதான் அதிகமெண்டது எண்ட கருத்து. மானிப்பாய் ஆனைக்கோட்டை போன்ற பகுதிகளில பட்டம் விடுறதை நான் காணவேயில்லை. அதைவிட அதில யாருக்குமே சுவாரசியமில்லை. சாதாரண பெட்டிப்பட்டமோ, வெளவாற் பட்டமோ கட்டத்தெரியாத, முச்சை எண்டா என்னண்டே தெரியாத இளந்தலைமுறையைக் கண்டபோது ஆச்சரியமாத்தான் இருந்திச்சு.
நாங்கள் விண் கட்டுறதுக்கு உரப்பை நூல் தான் பாவிக்கிறனாங்கள். அதுவும் நல்லா சத்தம் தரும். பட்டம் பற்றி நிறைய எழுதலாம். நீங்களும் எழுதுங்கோ. இண்டைக்குத்தான் தெரியும் நீங்கள் யாழ்ப்பாணமெண்டு.
காக்காப் பட்டம் ஹோல்fபேசில் ஏற்றுவார்கள். கடல் காற்றின் குளிர்மையில் காற்றாடிகள் ஏறுவது அழகுதான்.
உங்கள் வருகைக்கு நன்றி வசந்தன்.
Post a Comment