Thursday, January 05, 2006

என்னைச் சுற்றி மனிதர்கள்

கால் வைத்த இடமெல்லாம் சளக்கென்று புதைகின்றது. உருகிப் போகும் பனியும் குழம்புமாகச் சேர்ந்து பாதையின் ஓரமெல்லாம் கரைசலாகத் தேங்கி நிற்கின்றது. கால்களை எடுத்து வைக்கும் போதெல்லாம் விலகிச்சென்று மீண்டும் வந்து கால்களை மூடிக் கொள்கின்றது பனி நீர். நல்லவேளை வாகனமொன்றும் இல்லாதது அவன் நல்லதிற்குத் தான். இல்லையெனில் தேங்கி நிற்கும் பனிநீரால் அவனை அபிஷேகம் செய்து விட்டிருக்கும். பன்னிரண்டு மணியையும் தாண்டிய அந்த அகாலத்தில் யார்தான் தெருவில் நிற்பார்கள். இன்று வழமையாகப் போகும் பஸ்ஸையும் விட்டாகிவிட்டது. எல்லாம் அந்த பீற்றர் கிழவனால் வந்தது. இன்று கிழவனை எழுப்பி அனுப்புவதற்குள் போதும் போதுமென்றாகி விட்டது. கூடுதலாகக் குடித்து விட்டு தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டிருந்தது. வெளிக்கிடுவோமா என்று கேட்டபோதெல்லாம் சம்மதமாகத் தலையைத் தலையை ஆட்டி விட்டு மீண்டும் தூங்கத் தொடங்கி விட்டது. சரியான வின்ரர் சப்பாத்தை போடாமல் வந்ததற்காக தன்னைத் தானே நொந்து கொள்வதைத் தவிர வேறு வழியிருக்கவில்லை. பாதத்தின் மேலால் உட்புகுந்த பனி நீர் சாக்ஸ்ஸை நனைத்து கால்களை விறைப்பூட்டத் தொடங்கியிருந்தது. அடுத்த இரவுச் சேவையின் விசேட பஸ் வருவதற்கு இன்னும் 45நிமிடங்கள் இருந்தது. அதுவரை விறைக்கத் தொடங்கியிருக்கும் பாதங்களைச் சமாளிக்க முடியுமா என்று தெரியவில்லை. ஊவ் என்று இரைந்து வீசிய காற்று வேறு மூக்கு நுனியைச் சிவக்க வைத்துக் கொண்டிருந்தது. சுத்திக் கட்டிய தொப்பைப்பிள்ளையார் போல இருந்த அவன் கோலம் அவனுக்கே சிரிப்பாக இருந்தது. ஆனாலும் இந்தக் குளிரில் இருந்து தப்ப வேண்டுமென்றால் இதை விட வேறு வழியில்லை. ஜக்கற்றின் பைகளுக்குள் விட்டிருந்த கைகளை இன்னும் இறுக்கிய படி உடம்பை குறுக்கிக்கொண்டான். இந்த குளிரிலிருந்து தப்புவதற்கான அத்தனை படிமுறையும் அவனுக்கு இந்தக் காலத்துள் அத்துப் படியாகி விட்டிருந்தது. எல்லாக் கஸ்ரங்களுக்கும் பீற்றர் கிழவனின் மேல் தான் கோபம் வந்தது. பீற்றர் கிழவனை நேரில் கண்டால் கோபமெல்லாம் பறந்து விடும். தலையை சரித்து சிரிக்கின்ற அழகே எல்லோரையும் கவர்ந்து விடும். அவனும் கவனித்துக் கொண்டிருக்கின்றான். வேலையில் சேர்ந்த காலம் தொட்டு, ஒரு நாளாவது பீற்றர் கிழவன் அந்த உணவு விடுதிக்கு வராமல் இருந்ததில்லை. அங்கிருந்தவர்களில் ஒருவனாகவே பீற்றர் கிழவனையும் நினைக்கும் அளவிற்கு அது பழகிப் போய் விட்டிருந்தது. அரைப் போத்தல் சிவத்த வைன் பீற்றர் கிழவனின் கோட்டா. அதை மெல்ல மெல்லச் சுவைத்தபடி அனைவரையும் பார்த்து தலையாட்டிய படி சிரித்துக் கொண்டிருக்கும். நீண்டு மெலிந்த கரங்களில் வைன் கிளாஸ் எப்போதும் இருந்து கொண்டிருக்கும். இராணுவத்தில் பெரிய பதவியில் இருந்து ஓய்வு பெற்றிருப்பதாக அவன் கேள்விப் பட்டிருந்தான். அழகிய நீலநிறக் கண்கள் பளிச்சிடச் சிரிப்பது எப்போதும் அழகாய் இருக்கும். மனைவியை இழந்து தனிமையில் இருக்கும் பீற்றர் கிழவனுக்கு இந்த உணவு விடுதியும் இங்கு இருப்பவர்களும் தான் சொந்தம் என்பது போலவே அவனின் மாலை வேளைகள் இங்கேயே கழியும். இத்தனை வயதிலும் தளர்ந்து போகாத உடம்பும் முகத்தின் கவர்ச்சியும் இளமையில் பெண்களுக்கெல்லாம் சுவாரஸ்யம் மிக்க ஒருவனாகத் தான் இவனைத் தோன்ற வைத்திருந்திருக்கும்.

இரவு பதினொரு மணியை நெருங்கும் போதே ஒவ்வொருவராக அனுப்பி வைப்பதில் உணவு பரிமாறும் பெண்கள் முனைப்பாகிவிட்டிருப்பார்கள். இந்த பீற்றர் கிழவனை மட்டும் இவன் தலையில் கட்டி விட்டுப் போவதே அவர்கள் வழமையாகி விட்டிருந்தது. பீற்றர் கிழவன் இருப்பது இவனுக்கும் உணவு விடுதியைப் பூட்டும் வரை துணையாய் இருக்கின்ற போதிலும் சமயத்தில் இப்படி இடைஞ்சலாயும் போய்விடுகின்றது. நத்தார் விடுமுறை காலத்தில் இவ்வாறு சனக் கூட்டம் அலை மோதுவது ஒன்றும் பெரிய விடயமில்லை. உடம்பெல்லாம் அலுத்துப் போய் ஓய்வுக்குக் கெஞ்சுகின்ற அளவில் வேலை இருக்கும். அன்று வெள்ளிக் கிழமை வேறு . வெள்ளிக்கிழமை முன்னிரவு எப்போதும் குடிப்பதற்கும் கும்மாளமடிப்பதற்குமே ஒதுக்கப் பட்டது போல இங்குள்ளவர்களுக்கெல்லாம் ஒரு நினைப்பு. எங்கிருந்து தான் வந்து குவிகின்றார்களோ ? அப்படி ஒரு திரளாக வந்து போவார்கள். ஜவ்வனம் நிறைந்தவர்களிலிருந்து முதிர்ந்து தளர்ந்தவர்கள் வரை பாகு பாடின்றி வந்து போவார்கள்.

அன்றைய நாட்களுக்கான தயாரிப்பும் பெரிய அளவிலேயே இருக்கும். புதிதாக வந்து சேர்ந்திருந்த சோமாலியனை என்னுடன் விட்டிருந்தார்கள். வைன் போத்தல்களை மேலே கொண்டுவந்து அடுக்கிவைப்பதில் உதவி செய்து கொண்டிருந்தான். சிவப்பு வெள்ளை ரோஸ் நிறங்களில் உருளை நீள வடிவங்களில் இருந்த வைன் போத்தல்களை அது அதுக்கான இடங்களில் அடுக்கி வைப்பது என்பதே முதுகு வலியை உருவாக்கும் வேலை.
சோமாலியனைப் பொறுத்தளவில் அந்தவேலை அவனை கொல்லக் கொண்டு போனது போல இருந்திருக்க வேண்டும். இல்லையெனில் அவனுக்குத் தெரிந்த அத்தனை பேரையும் இழுத்து அத்தனை தூஷணை வார்த்தைகளையும் கொட்டித் தீர்த்திருக்க மாட்டான். வெளிநாடு பற்றி அவனிடம் கனவுகளை விதைத்தவர் முதற்கொண்டு அவன் அனுப்பும் பணத்திற்காக காத்திருக்கும் அனைவரையும் அவன் எதிரிகளாகவே நினைத்திருக்க வேண்டும். வைன் போத்தல்களைக் காவிக்கொண்டு செல்லும் சிரமம் அவன் கோவத்தை இன்னும் அதிகரித்துக் கொண்டிருக்க வேண்டும். இல்லயெனில் அத்தனை தூஷணை வார்த்தைகளுடன் அவனது ஆக்ரோஷமான குத்துகளையும் வாங்குவதற்கு அந்த குகை அறை சுவர்கள் என்ன பாவம் செய்திருக்க வேண்டும். வாழ்க்கையின் கரடு முரடுகளை முதல் முதலாகச் சுவைக்கும் அனைவரும் அவனைப் போலவே செயற்பட்டிருக்கக் கூடும். வாழ்க்கை என்பதை அறியாத போது உண்டான கற்பனைகள் எப்போதும் சரியாக இருந்திருக்க முடியாது. அதன் அதன் போக்கில் வருவதை எதிர் கொள்வதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும். அவனைப் பார்க்க பாவமாக இருந்தது. வெளிநாட்டைப் பற்றி பெரியதொரு கனவு அவனுக்கு இருந்திருக்க வேண்டும். அடிமை ஊழியம் செய்யும் ஒரு இடத்திற்கு அவன் வந்திருப்பதை அறியாதது ஒன்றும் பெரிய விடயமில்லை. காலப் போக்கில் அதை அறிந்து கொள்ளும் போது தான் அவனால் என்ன செய்து விட முடியும். நிறைவேறாத கனவுகளுடன் அலைந்து கொண்டிருக்கும் எத்தனை மனிதர்களை அவன் அந்த நகரத்தில் பார்த்திருக்கின்றான். உணவு பரிமாறும் இத்தாலியப் பெண் வெரோனிக்கா. அவள் என்ன கற்பனையில் தனது நாட்டை விட்டு வந்திருக்க முடியும். உணவு விடுதியின் ராட்சச அடுப்புகளுடன் இருபது வருடமாகப் போராடிக் கொண்டிருக்கும் செfவ் பிலிப்.
என்ன நம்பிக்கையுடன் அங்கு வந்திருப்பானோ ? அவன் கனவுகளை நிறைவேற்றிக் கொள்ள இன்னும் தான் போராடிக் கொண்டிருக்கின்றான். பங்களாதேசத்திலிருந்து வந்திருக்கின்ற முகம்மது. அவனது கனவுகள் தான் என்னவோ ? ஏன் நான். என்ன என்ன கனவுகள் எல்லாம் எனக்கும் இருந்தது. எத்தனை கனவுகள் இன்னும் இருக்கின்றது. எப்போதாவது நிறைவேறுமா என்ற நம்பிக்கையை விட இதோ இப்போது என்னும் கனவுடன் தானே ஓடிக் கொண்டிருக்கின்றேன்.

தன்னைப் பற்றிய எண்ணம் வந்தவுடன் சிந்தனை அறுந்து போக தன்னைச் சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தான். வெளிச்சச் சிதறலை சிதைத்த வண்ணம் நீர்ச் சிதறல்கள் காற்றின் போக்கில் அலைந்து கொண்டிருந்தன. காற்றின் திசையைத் தவிர அவைக்குத் தான் போக்கிடமேது. இதுவரை மக்களால் நிறைந்து போயிருந்த அந்த வீதி அனைவரையும் வெளியேற்றி விட்டு ஹோவென்று தூங்கிக் கொண்டிருந்தது. அவனைப் போல் ஓரிருவரின் தொந்தரவும் இல்லை என்றால் தூக்கம் என்பது உண்மையாகவே இருந்திருக்கக் கூடும். நகரத்தின் சந்தடி மிக்க வீதி இவ்வாறும் வெறிச்சுப் போயிருக்கும் என்பது பலரது கற்பனைக்குள்ளும் சிக்காத ஒரு விடயம் தான். ஆரம்பத்தில் ஆச்சரியமாகத் தோன்றிய விடயம் இப்போது பரிச்சியமாகிப் போய்விட்டிருந்தது. அவனது அன்றாட வாழ்க்கையின் உண்மையைப் போலவே எதிரும் புதிருமான பல நிகழ்வுகள் மனக்கிளர்ச்சியை ஏற்படுத்தாது அமைதியாக நடந்து கொண்டிருந்தன. அவன் அம்மாவைப் போல. அவன் அம்மாவைப் பற்றிய எண்ணங்கள் ஏற்படும் போதெல்லாம் அவனுள் பல ஆச்சரியங்கள் சிறகு விரித்துப் போய்விடும். ஒவ்வொருவரும் தம் அம்மாக்களைப் பற்றி இவ்வாறே விழி விரித்துப் பேசுகிறார்கள். தமக்கென ஆசைகளில்லாது வாழ்வது எப்படிச்சாத்தியம். கடிதத்தின் முதல் பக்கம் அவ்வளவும் அவன் சுகத்தையும் நலத்தையும் பல்வேறு வார்த்தைகளில் கேட்டுக் கொண்டிருந்தது. அம்மாவைப் பொறுத்த அளவில் அவனின் சுகமும் முக்கியமும் பெரிதளவில் இருந்தது. அவளது மூத்த பிள்ளை என்பதுடன் அவனைத் தொடர்ந்து பிறந்த பிள்ளைகளின் எதிர்காலமும் அவன் கைகளில் இருப்பதாக அவள் நினைப்பதைப் போலவே அவனுக்கும் நினைவூட்டிக் கொண்டிருந்தாள். தனிமையில் அத்தனை துன்பங்களையும் தானே சுமப்பதாய் இருந்த எண்ணத்திற்காக வெட்கப்பட்டான். எல்லோரும் ம்ற்றவர்களின் சந்தோசத்திற்கும் உதவிக்கும் ஆக வாழ்வதாகவே ஒரு நினைவு அவனுள் ஓடியது. இந்த நகரம் ஏதோ ஒரு ஒழுங்கில் இயங்குவதாகவே அவனுக்குத் தோன்றியது. அந்த நகரம் எத்தனை பேரின் நம்பிக்கைகளைச் சுமந்து கொண்டிருப்பதான நினைப்பே பிரமிப்பதாயிருந்தது. தன்னை சுற்றி இருக்கும் மனிதர்களுக்காகவே தன் வாழ்க்கை இருப்பதான ஒரு உணர்வு அவனுக்கு உற்சாகத்தை ஊட்டியது. இதுவரை இருந்த மனக் கிளர்ச்சி தணிந்து ஒரு சமநிலையை அவனுள் ஏற்படுத்தியது. ஒன்பது மணிக்கு மீண்டும் வந்து உணவு விடுதியைத் திறக்க வேண்டிய தேவை அவனுக்கு இருந்தது. அந்த எண்ணத்துடனேயே பஸ்ஸில் ஏறி உட்கார்ந்து கொண்டான்.

No comments: