Wednesday, February 22, 2006

வன் செய் மனது

கார் கால மழை மேகத்தின் இறுக்கத்துடன் மனது எண்ணங்களால் கூடு கட்டி கனத்துப் போய் இருக்கின்றது. பின் பனிக்காலத்தின் இளகிய குளிர் ஜன்னலால் ஊடுருவும் முயற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தது. ஹீற்றரை சரிப்படுத்திக் கொண்டான். மனதின் தகிப்பையும் இவ்வாறு சரிப்பண்ணிக் கொள்ள முடிந்தால் இன்னும் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. அதற்கான மார்க்கங்கள் கண்டு கொள்ளப்படும் வரை இவ்வாறு மன உளைச்சலில் மறுகிக் கொண்டிருப்பது தவிர்க்க முடியாதது தான். இல்லை என்றால் வாழ்க்கை இவ்வாறு கனம் கூட்டிப் பயங்காட்டிக் கொண்டிருக்குமா ?

முப்பத்து மூன்று வயதிற்கு இன்னும் ஒரு தெளிவும் இல்லாக் குழப்பத்தில் வாழ்க்கை கண்ணாமூச்சி ஆட்டம் காட்டிக் கொண்டிருந்தது. வீட்டிலிருந்து கடிதம் வந்திருந்தது. எத்தனை தீர்மானித்துத் திட்டம் போட்டு காய் நகர்த்தினாலும் யாரோ பின்னிருந்து கால் இழுத்து விளையாடுவதாகவே பட்டது. இல்லையெனில் இவ்வாறெல்லாம் நடக்குமா என்ன? எவ்வளவு சிரமத்துடன் கடன் பட்டு வாழ்க்கையின் ஒன்றிரண்டு வருடத்தை இதற்காக ஒதுக்கி அந்தப் பணத்தை அனுப்பியிருந்தான். தம்பியும் வந்து விட்டால் உனக்கும் உதவியாய் இருக்கும் என்ற அம்மாவின் வார்த்தகளிலும் இருந்த
நியாயம் கடன் படும் எண்ணத்தை உருவாக்கி விட்டிருந்தது. தம்பிக்கு முன்னால் வளர்ந்து ஆளாகிவிட்ட இரண்டு தங்கைகள் வேறு பயமுறுத்திக் கொண்டிருந்தார்கள்.

யுத்தமும் யுத்தத்தினால் விளைந்த இடப்பெயர்வுகளும் அதுகாட்டிய கோரமும் எத்தனை பேரைத் துவைத்துப் போட்டிருந்தது. வாழ்க்கை என்பது என்னவென்றே அறியாப் பருவத்தில் எங்கெங்கோ தூக்கியெறிந்து என்னவென்றே அறியா சுமைகளையெல்லாம் தோள்களில் சுமத்திவிட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது. எல்லோருக்கும் வாய்த்த துயரம் என்பதற்கப்பால் மனங்களை வளரவிடாது துன்பத்திலும் துயரத்திலும் தனிமையிலும் வாடவிட்டு வாழ்க்கையையே காயப் போட்டுக் கொண்டிருந்தது. அரச பயங்கரவாதமும் ஒரு இனத்தின் துயரமும் மனிதர்களைத் தனிமையில் கூறிட்டு வாழ்க்கை பற்றிய பயத்தை ஊட்டிக்கொண்டிருந்தது. அங்கு வாழ நேர்ந்து விட்ட கொடுமையினால் இதை விட வேறுவழியில்லாத தன்மையினால் இவ்வாறே பற்றிக் கொள்வதும் பற்றிக் கொள்வதை விடாது பிடித்துக் கொள்வதும் இயல்பாய் போய்விட்டிருந்தது.

இவ்வாறான நெருக்கடிகள் ஏற்படுத்தும் தனி மனித நெருக்குவாரங்கள் பற்றியும் வாழ்க்கைக் கட்டுமானத்தில் ஏற்படுத்தக் கூடிய சிதைவுகள் பற்றியும் யாரும் கருத்தில் கொள்ளவில்லை என்பது தான் சோகம்.
தம்பியும் எங்கெங்கோ சுத்தி விட்டு வீட்டிற்கே திரும்பி விட்டிருந்தான். அம்மாவும் சாதாரணமாகவே அதை எழுதியிருந்தாள். 'என்ன செய்வது எங்களின்ர கஷ்ட காலம்' என்பதுடன் அதற்கொரு முற்றுப் புள்ளி வைத்திருந்தாள். தன் வாழ்க்கையின் ஒரிரு வருடத்தை அள்ளிக் கொண்ட அந்தக் கஷ்ட காலம் இத்துடன் முடிந்து விடப்போவதில்லை என்பது மட்டும் அவனுக்குத் தெளிவாக விளங்கியது. ஒரு இனத்துக்கான போராட்டத்தின் விலை ஒவ்வொரு தனிமனிதர்களிடமும் கொள்வனவு செய்யும் விலை அதிகமென்றே அவனுக்குத் தோன்றியது. இல்லையென்றால் இப்படி. பலரின் வாழ்க்கையை அல்லவா விலை கொள்கின்றது.

பல நாட்களின் முன்னர் நடந்த தர்க்கமும் அவன் ஞாபத்தில் வந்தது. அவனைப் போலவே பெயர்ந்து வந்து அவனுடன் தங்கியிருக்கும் வசந்தனின் கதைகளை அவனால் ஜீரணிக்கவே முடியவில்லை. வாழ்க்கை பற்றிய எண்ணங்கள் எவ்விதமெல்லாம் மாறு பாடடையக் கூடியது என்பதை அவன் அன்று கண்டான். தன்னால் நினைத்தும் பார்க்க முடியாத கோணங்களில் எல்லாம் வசந்தன் சிந்தித்துப் பார்ப்பதை அவன் உணர்ந்தான். வாழ்க்கை என்பது அவர் அவர் கொண்டிருக்கும் எண்ணங்களால் மட்டுமே தீர்மானிக்கப் படுவது என்பதில் சிறு விட்டுக் கொடுப்பும் இல்லாது அவன் விவாதித்தான். சமூகப் பரிமாணம் மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்பது பற்றிய எண்ணங்களையெல்லாம் மறுதலித்து விட்டிருந்தான். சமூக எண்ணமென்பது தனி மனிதர்களின் எண்னம் என்பதை நிறுவுவதிலேயே அவன் குறியாக இருந்தான். அவனுக்கும் தன்னைப் போலவே குடும்பம் இருப்பதையும் அவனைச் சார்ந்திருப்பதையும் இவன் அறிவான். அதற்காக தன் தனிப்பட்ட வாழ்க்கையைத் தியாகம் செய்துவிட வேண்டுமென்பது போலித் தனமானது என்றே வாதிட்டான். அப்படி ஒரு சந்தர்ப்பம் கிடைத்தால் தான் அதை நடைமுறைப் படுத்துவதிலும் தயங்கங் காட்டப் போவதில்லை என்று உறுதி படவே கூறியிருந்தான். ஆனாலும் வசந்தன் அப்படிச் செய்வான் என்று இவன் முழுமையாக நம்பவில்லை. ஒரு விவாதத்திற்காக பேசுவதாகவே இவனுக்குப் பட்டது.

வசந்தனின் சில கதைகளையும் அரசல் புரசலாக அறிந்தே வைத்திருந்தான். ஒரு மொரோக்கோப் பிள்ளையுடன் பழகுவதாகவும் அவன் அறிந்து வைத்திருந்தான். தனிமையில் இருக்கும் இளவயதுப் பிள்ளைகளின் சாதாரண நடை முறை என்றே அதனை அலட்சியம் செய்து விட்டிருந்தான். புலம் பெயர்ந்த தேசங்களில் இவ்வாறு சில சமூகக் கட்டுகள் கட்டுடைத்துப் போய்விட்டிருப்பதையும் பல சந்தர்ப்பங்களில் அவதானித்திருந்தான். சில துணிச்சல் காரர்கள் சேர்ந்து வாழ்வது வரை முன்னேறிவிட்டிருப்பார்கள். தூரமும் தனிமையும் அவர்களைத் தூண்டி விடுவதாகவே இவன் முடிவு கண்டிருந்தான். தூக்கமுடியாச் சுமைகளின் அழுத்துதலில் தமக்கென ஒரு வாழ்வு பற்றிய சிந்தனைகள் இன்றி இருப்பவர்கள் இவ்வாறான தற்காலிக வடிகால்களைத் தேடுவதை எவ்வகையில் நியாயப் படுத்துவது என்பதை அறியாதிருந்தான்.ஒரு கட்டுப் பெட்டிச் சமூகத்தின் நாற்றங்கால்களில் இருந்து இவ்வாறான புரட்சிகரச்சிந்தனைகள் வெளிவருவதே பாபமாக நோக்கப் படுவதையும் அவன் அறிவான். மேற்கில் புடுங்கி நடப்பட்டாலும் கிழக்கின் கூட்டுப் புழு மனப் பான்மையிலிருந்து விடுபடுவது சாத்தியமே அற்றது என்பதை இவன் முழுவதுமாக நம்பினான். அவ்வாறு இருப்பது மேலான தியாகம் என்பதாகக் கிலாகிக்கப் படுவதயும் அந்தச்சூட்டில் குளிர் காய்வதை விட்டு விடாத ஒரு போலித் தனத்தைப் போர்த்துக் கொள்வதையும் இவன் விரும்பினான். அதுவே இவனிடம் இருந்து எதிர்பார்க்கப் படுவதையும் இவன் புரிந்து கொண்டான்.

'இன்னாரின் பிள்ளை வெளிநாடு போயும் ஒரு கெட்ட பழக்கமில்லை. சொக்கத்தங்கம் . எவ்வளவு பொறுப்பு ' என்று கிலாகிக்கப்படுவதையும் அதனாலேயே கொண்டு
சேர்க்கப்படக் கூடிய கொழுத்த சீதனத்தையும் கனவு காண்கிறீர்கள்' என்றும் வசந்தனால் நேரடியாகவே தயவு தாட்சண்யமற்று குற்றம் சாட்டப்பட்ட போது உண்மையிலேயே இவன் மனம் புண்பட்டுத்தான் போனது.

குடும்பம் பற்றிய அக்கறை உண்மையான பாசம் எப்படி இவர்களால் கொச்சைப்படுத்தப் படுகின்றது என்பதை இவனால் ஜீரணிக்க முடியாமலேயே இருந்தது. உங்கள் உணர்ச்சிகளைக் காயப் போடுவது தான் தியாகமா? என்ற அவன் கேள்விக்கு மட்டும் இவனால் பதில் காணவே முடியவில்லை.

வசந்தன் இன்றில்லா விட்டாலும் என்றோ ஒரு நாள் அந்த மொரக்கோப் பெண்ணுடன் வாழப் போயே போய் விடுவான் என்று இப்போது தோன்றியது. அவ்வாறு நடப்பதும் நல்லது தான் என்றவாறே நினைக்க விரும்பாக் கணத்திலும் ஏன் தோன்றிக் கொண்டிருக்கின்றது. விடை காண முடியாத கேள்விகள் தான் வாழ்க்கையில் எத்தனையெத்தனை. அவற்றில் இதுவும் ஒன்றுபோலும்.

No comments: