Saturday, February 04, 2006

நஞ்சுண்ட கண்டம்

பால் போல் நிலவு பொழிந்து கொண்டிருந்தது. சலசலத்தோடும் பாலாறு வெள்ளித் தகடுகளாக மினுங்கிக் கொண்டிருந்தது. தலை தடவும் இளந்தென்றலின் கரம் பற்றி அலை எறிந்து துள்ளிக் குதித்து உற்சாகமாக ஓடிக்கொண்டிருந்தது ஆறு. ஆற்றோரத்தில் வளர்ந்திருந்த நாணலும் அதனைச்சுற்றிலும் அடர்ந்திருந்த காடும் அற்புத அழகுடன் நிலவொளியில் குளித்துக் கொண்டிருந்தது. மரங்களின் செல்லச் சிலிர்ப்பில் அங்கு கூடு கட்டியிருந்த பறவைகள் எல்லாம் கால்மாற்றிக் கால் வைத்து சிறுநடனம் ஆடிய படியே சந்தோஷத்தில் கிர்க் கிர்கென்று சிறு இசை பாடவும் செய்தன. சிள்வண்டுகளின் ரீங்காரமும் சுதி சேர்க்க ஒரு மோக லயம் காற்றில் பரவிக் கொண்டிருந்தது.

அந்த ஆற்றங்கரையில் உயர்ந்து வளர்ந்திருந்த பாலை மரத்தின் கீழ் அவர்கள் நின்றிருந்தனர். பூவும் பழமுமாய் நிறைந்திருந்த அந்தப் பாலை மரத்திலிருந்து ரம்மியமான வாசனை ஒன்று நாசியை நிறைத்துக் கொண்டிருந்தது. அதன் சிறிய மலர்களை உதிர்த்து அக்காதலர்களை அது ஆசீர்வதித்துக் கொண்டிருந்தது. தலையில் உதிர்ந்த மலர்களை விடுவித்துக் கொண்டே மாறன் கேட்டான். ''என்ன யோசனை குழலி, பெளர்ணமி நிலவில் ஆற்றில் குளிப்பது தான் எத்தனை சுகம் " என்றவாறு அவள் முகத்தைப் பார்த்தான். கூந்தல் எல்லாம் பாலை மரத்தின் பூ அபிஷேகத்துடன் ஒரு தேவதையைப் போல ஜொலித்துக் கொண்டிருந்தாள் பூங்குழலி. தரையில் பரந்திருந்த மலர்ப் படுக்கையில் தன் பாதங்களை வைத்த படியே அவனைப் பார்த்தவள் பதிலும் கூறினாள். " எத்தனை முறை இந்த ஆற்றங்கரை வழியே சென்றிருக்கின்றோம். இன்று தான் உங்களுடன் சேர்ந்து குளிக்கும் சந்தர்ப்பம் வந்திருக்கின்றது" சொன்னவள் மெல்ல நகைத்துக் கொண்டாள். மனதுக்குப் பிடித்த காதலனுடன் சேர்ந்து குளிப்பதென்றால் அது தரும் சுகமே அலாதி தான் என்பதை எண்ணும் போதே அவள் முகம் குங்குமமாகச் சிவந்து விட்டது.

நிலவு உச்சியை நெருங்கிக் கொண்டிருந்தது. பெளர்ணமி நிலவு பொழிந்து கொண்டிருந்தது. கண்ணகி அம்மன் ஆலயத்திலிருந்து குரவைப் பாடல் இடையிடையே காற்றில் மிதந்து வந்து கேட்டுக் கொண்டிருந்தது. மனதிற்கு மிகவும் இதமாக இருந்தது. பெளர்ணமிப் பொங்கலிட்டு மக்கள் விடிய விடியக் கொண்டாடுவார்கள். " மக்கள் எவ்வளவு மகிழ்ச்சியுடன் இருக்கின்றார்கள்" என்ற படியே நீரலையை எற்றி அவன் மார்பை நனைத்து விளையாடினாள் பூங்குழலி. " தமிழ் இராட்சியத்தில் மக்களுக்கு ஏது குறை ? " என்றவன் நீரலையை அவளை நோக்கி எற்றினான். அவள் முகத்தில் சிதறிப் பரவிய நீர் முத்துக்களாக அவள் கன்னக் கதப்பில் பரவி மின்னிக் கொண்டிருந்தன. பிறை நுதலும் கரிய நீண்ட இமைகள் வரம்பிட்ட படபடக்கும் கண்களும் கூர் நாசியும் சிவந்த அழகிய இதழ்களும் அவளுக்கு அழகுக்கு அழகு சேர்த்தன. இவள் தான் எத்தனை அழகு.
அவன் அவள் அழகையே பருகிக் கொண்டிருந்தான். அவன் பார்வையில் நாணம் மீதூரப் பெற்றவள் நீரினுள் ஒரு முறை அமிழ்ந்து வெளிக் கிளம்பினாள். நீர்ப் போர்வையை விலத்தி மேலெழும் போது மதர்த்துத் திரண்ட கொங்கைகள் அதன் செழுமையை வெளிக்காட்டி மீண்டும் நீரில் அமிழ்ந்து போயின. அவன் ஆண்மைக்குச் சேதி சொல்லிப் போன அந்தக் கணங்களில் அவன் விக்கித்துப் போய் நின்றிருந்தான். கல கலத்துச் சிரிக்கும் அவள் சிரிப்பொலி அவன் நினைவுகளை மீண்டும் நனவுலகிற்கு மீட்டு வந்தது. போதும் போதும் என்ற அளவில் நீராடிய பின்னர் கரையேறினர். கரையினில் கிடந்த வஸ்திரங்களை எடுத்து உடுத்திக் கொண்டனர். நாணச் சிவப்பேறிய அவள் முகம் செங்கமலமாக மலர்ந்து சிரித்தது. புஷ்டியான உடல் பூரித்துக் குலுங்கியது.

ஓடிக் களைத்த மழை மேகம் ஓய்ந்து இறங்கி அவள் கூந்தலாகிக் குவிந்தது போல் பரவித் தரை தொட்ட து அவள் கூந்தல். காற்றினில் அழகுக் கூந்தலைப் பிரித்து உலர்த்திக் கொண்டிருந்தாள். மயிர்க்கீற்றுகளின் இடையிறங்கிய நிலவொளி அவள் முகத்தில் திருஷ்டிப் பொட்டு வைத்தது. அவள் கூந்தல் அழகைப் பார்த்துக் கொண்டிருந்தவன் எங்கோ சென்று கணத்தினில் திரும்பி வந்தான். அவன் கரங்களில் அல்லிப் பூக்களும் பட்டிப் பூக்களும் சிவப்பும் வெள்ளையுமாக நிறைந்து காணப் பட்டன. அப்பூக்களை அவள் கூந்தலில் சூட்டியவன் அவளைப் பார்த்து நிறைவுடன் சொன்னான் "இப்பொழுது தான் பூங்குழலி என்பது பொருத்தமாய் இருக்கின்றது''

கும்மென்று நிமிர்ந்த மார்புக் கச்சையின் ஒடுக்கத்தில் நழுவி இடுப்பினைச் சுற்றி இறங்கிய வஸ்திரம் நழுவிக் கொள்ள அவள் ஆலிலை வயிறு அவனுக்கு ஒரு சேதி சொல்ல மீண்டும் எங்கோ சென்றவன் கணத்தினில் மீண்டான். கோலிய இலை நிறைந்த பாலைப் பழங்களை அவளிடம் நீட்டினான். குண்டு குண்டான பொன் மஞ்சளில் தக தகத்த பாலைப் பழங்கள் அமிர்தம் போல சுவையாயிருந்தன.
அவள் பாலைப் பழங்களை விரும்பி உண்பதை இரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தவன் "உன்னிடம் ஒன்று கேட்க வேண்டுமே " என்றான். அவனை நிமிர்ந்து பார்த்தாள். "என்னவாயிருக்கும்" குழப்பம் கண்களில் வலை போட்டு உட்கார்ந்திருந்தது. ''கேளுங்கள்" என்றவள் காதல் மீதூர அவனைப் பார்த்தாள். "பரவாயில்லை பிறகு கேட்கின்றேன் " என்றவன் அவளை அணைத்து தன்னுடன் சாய்த்துக் கொண்டான். அவன் பரந்த மார்புகளுக்குள் தன்னை புதைத்துக் கொண்டவள் நீண்ட தளிர் விரல்களால் அவன் மார்புக் கேசத்தை அளைந்து விளையாடினாள். புலால் தீயுண்ட நாற்றத்தை அவள் நாசி நுகர்ந்தது. அவன் மார்பில் தாங்கி நின்ற பெரும் விழுப்புண்ணைத் தன் காந்தள் விரல்களால் தடவி விட்டுக் கொண்டாள். "எத்துணை மாபெரும் வீரன் இவன் " எண்ணும் போதே அவன் மீது தான் கொண்ட காதலும் பொங்கி நுரைத்துப் புதுப் புனலாய் வெளி வருவதை உணர்ந்த அக்கணத்திலேயே அவனுடன் தன்னை இன்னும் நெருக்கிக் கொண்டாள். அவள் கூந்தலின் வாசனை நாசியில் ஏற ஏகக்கிறக்கத்துடன் அவள் காதின் ஓரங்களில் மூக்கினால் உரசினான். அவர்களின் மோகத்தின் மோனத்தைக் காடும் ஒரு முறை நின்று பார்த்து கலகலத்துச் சிரித்தது.

தன் காதலியின் பிரிவை எண்ணி எங்கோ ஒருவன் பாடும் ஏக்கக் குரல் காற்றினிலே மிதந்து வந்து கொண்டிருந்தது. அந்தக் குரலில் இருந்த ஏக்கம் அவர்களின் இதயத்தில் இறங்கிச் சென்று சிம்மாசனம் இட்டு உட்கார்ந்து கொண்டிருந்தது. எத்தனை காலத்து ஏக்கம் இந்தக் காதல் ஏக்கம். அவனிடம் இருந்து ஒரு பெருமூச்சு வெளிக் கிளம்பியது. அதன் வலியை உணர்ந்தவள் போல அவனிடம் இன்னும் நெருங்கிக் கொண்டாள்.

நிலவு உச்சியை கடந்து மேற்கில் இறங்கிக் கொண்டிருந்தது. சிள்வண்டுககளின் ரீங்கரிப்பைத் தவிர அனைத்துப் பறவைகளின் ஆர்ப்பரிப்பும் அடங்கிப் போயிருந்தன. இன்பக் கலவியின் பின்னால் அவை உறங்கிப் போயிருக்க வேண்டும். ஆறு மட்டும் உற்சாகத்துடன் அலை எறிந்து நுரை பரத்தி ஓடிக்கொண்டிருந்தது. நிலவின் பாலொளியை பறித்து பட்டுச் சருகாக்கி அலை ஆடையுடுத்தி உற்சாகத்தில் சிலு சிலுத்துக் கொண்டிருந்தது. மோன மயக்கம் நீங்கப் பெற்றவன் அவள் முகம் நிமிர்த்தி அவளைப் பார்த்தான். ஒரு விபரிக்க முடியா பூரண நிறைவில் அவள் முகம் ஜ்வலித்துக் கொண்டிருந்தது. அவன் பார்வையின் வீர்யத்தத் தாங்க மாட்டாது அவள் முகம் மீண்டுமொரு முறை குங்குமத்தில் குளித்து நின்றது. அவள் கண்களை ஊடுருவியவன் " உன்னிடம் ஒன்று கேட்க வேண்டுமே பூங்குழலி" என்றான். "கேளுங்கள்" என்றவள் தன் கரிய பெரிய விழிகளை விரித்து அவனைப் பார்த்தாள். இவன் என்ன கேட்கப் போகின்றான் என்ற ஆச்சரியமும் ஏன் தயங்குகின்றான் என்ற குழப்பமும் அவள் பார்வையில் விரவி நின்றது.

கேட்டு விடுவது என்ற முடிவிற்கு வந்தவனாய் அவன் கேட்டான். " செங்கமலம் போன்ற உன் சிவந்த மேனியில் நீலாம்பல் போல உன் கண்டம் மட்டும் நீலம் பாரித்திருப்பது ஏன்? " அவனை மீண்டும் பார்த்தவள் தொண்டையைக் கனைத்துக் கொண்டாள். " மார்பில் குண்டடி பட்டு நீங்கள் இறந்தது போல் நச்சுக் குப்பியை(சயனைட்)க் கடித்து நான் மரணித்ததை மறந்து விட்டீர்களா ?" என்றவள் அந்தக் கணத்தின் வலியின் வேதனையைத் தாங்க முடியாதவள் போல் துயரம் உடலெங்கும் உலுக்கிப் போட தலையைக் குனிந்து கொண்டாள். அவன் இதயம் ஒரு முறை குலுங்கி நடுங்கியது. எத்துணை மாபெரும் தியாகம், எப்படி மறந்து போனேன். நினைத்துக் கொண்டவன் அவளை ஆதுரத்துடன் அணைத்துக் கொண்டான். இருவரும் ஒன்றும் பேசா மெளனத்துடன் வானில் ஏறிப் பறந்து சென்றனர்.

No comments: