ஊரைச் சுற்றி தென்னஞ்சோலை செழித்திருந்தது. தென்னஞ் சோலைக்குள் ஊரைப் பொதிந்து வைத்தது போல குளுகுளுவென்று காற்று வீசிக்கொண்டிருந்தது. மேற்கு மலையின் தொடர்ச்சியாக வயல் வெளி நீண்டு பரந்திருந்தது. நெக்கு விடத் தொடங்கியிருந்த கதிர்கள் இளந்தென்றலில் அலையெறிந்து சலசலத்துக் கொண்டிருந்தது. சலசலத்து அலையெறியும் அழகைப் பர்த்துக் கொண்டேயிருக்கலாம். சாய்ந்தும் நிமிர்ந்தும் நடனம் ஆடும் நெற்கதிர்கள் தேர்ந்த நாட்டியக்காரியின் நளினமும் லாவகமுங் காட்டும். வளைவது போல வளைந்து எழுவது போல எழுந்து கோலங் காட்டும் அழகு தனியழகு. தூக்கணாங் குருவியும் தேனிலையானும் தரிக்கவொண்ணாது இங்கும் அங்கும் பறந்து கொண்டிருக்கும். உயர்ந்து எழுந்த தென்னையுச்சியில் ஓலை குருத்து கிசுகிசுத்து இசை கூட்டும். கூடு கட்டிக் குஞ்சு பொரிக்கக் காத்திருக்கும் பச்சைக்கிளிகள் மூக்குரசி கதை பேசும். வீசும் காற்றின் வீச்சிற்கேற்ப தென்னம் ஓலைகள் வளைந்தும் தாழ்ந்தும் எழுந்தும் கோலம் காட்டி நிற்கும்.
மேற்கு மலையுரசி வரும் காற்று குளிர்மையையும் அள்ளி வந்து முகத்தில் அறைந்து சிலிர்ப்பூட்டிச் சென்றது. ஆறுமுகன் முகத்தில் வியர்வை வழிந்தோட மண்வெட்டியை ஓங்கி இறக்கி மண்ணை வெட்டிப் போட்டுக் கொண்டிருந்தான். தென்னைகளின் அடியில் குழி வெட்டி பாத்தி கட்டும் பணி மூன்று நாட்களாக நடந்து கொண்டிருந்தது. இன்னும் ஒரிரு நாட்களில் முடிந்து விடும். அது முடிந்தால் வயல் வேலை. வருஷம் முச்சூடும் உழைப்புக்குப் பஞ்சமில்லாத ஊர். ஓங்கி இறக்கிய ஒவ்வொரு வெட்டிலும் மண் கட்டிகள் பாளம் பாளமாகப் பெயர்ந்து கொண்டிருந்தது. புடைத்துத் திரண்ட மார்பும் கரணை கட்டிய கரங்களும் வலிமையெல்லாம் ஒன்று திரட்டி மண் வெட்டியை இறக்கிக் கொண்டிருந்தது. உடல் உழைப்பும் வஞ்சகமில்லாத உணவும் அவனை திடகாத்திரமாக வளர்த்து விட்டிருந்தது. இத்தனைக்கும் இருபது வயதே ஆகிவிட்டிருந்த அவனுக்கு இப்போதுதான் அரும்பு மீசை கோடு கட்டி முளைத்திருந்தது. தந்தையில்லாத அவனுக்கு படிப்பு ஒன்றும் சரியாக வரவில்லை. எட்டாவதுடன் படிப்பை முடித்துக் கொண்டவனுக்கு உழைப்பும் தொழிலுமே உலகத்தின் சூக்குமங்களை எல்லாம் சொல்லிக் கொடுத்துக்கொண்டிருந்தன.
படிப்பில் தான் சோடையே தவிர உழைப்பில் அவனுடன் யாரும் போட்டி போட முடியாது. உழைப்பின் சூக்குமங்கள் எல்லாம் அவனுக்கு அத்துப் படியாகியிருந்தது. தந்தையில்லாத அவனும் அவன் தாயும் தாய் மாமன் தயவிலேயே வாழ்ந்து கொண்டிருந்தார்கள். அந்தத் தயவிற்கு வஞ்சமில்லாமல் தன் உழைப்பைக் கொடுத்து நன்றி காட்டிக் கொண்டிருந்தான் அவன். '' எலே என்னலே" என்றோ "ஆறுமுகா'' என்றோ நல்ல குஷியாக இருக்கும் வேளைகளில் "மாப்பிள்ளே" என்றோ அவர் கூப்பிடும் குரலுக்கு ஆடும் பாம்பு போல அவர் முகம் சுழிக்கா வண்ணம் கருமம் ஆற்றிக் கொண்டிருந்தான். தவிர அவர் மகள் செண்பகத்தின் விருப்பங்களையும் முகம் கோணாமல் நிறைவேற்றி வைத்துக் கொண்டிருந்தான். அதில் ஒரு சுகமும் அவனுக்கு இருந்தது. அவனை விட சில வயது இளையவளான செண்பகம் அவனுக்கு மட்டும் டீச்சரம்மா. இரட்டைப் பின்னல் ஜடை காற்றில் பறக்க புள்ளி மான் போல ஓடித் திரியும் செண்பகம் அவனைப் பொறுத்தளவில் பெரிய படிப்புப் படிக்கும் படிப்பாளி. பத்தாவது படிக்கும் அவள் ஊரிலேயே அதிகம் படித்தவர்களில் ஒருத்தி. அதையே சாட்டாக வைத்து அவனைக் கேள்வி கேட்டே அவன் திணறுவதைப் பார்த்து சந்தோஷப் படுவாள். அவள் சந்தோஷப் பட வேண்டுமென்பதற்காகவே பதில் தெரிந்தாலும் தெரியாதது போல காட்டிக் கொள்வதில் அவனுக்கும் சந்தோஷமே. அவளைக் காணும் போதெல்லாம் என்னவென்றே தெரியாத மகிழ்ச்சி. அவளுடன் விளையாடுவதும் அவளைச் ச்ந்தோஷப் படுத்துவதும் அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது. ஆனால் அவள் மட்டும் அவனை ஒன்றும் தெரியாத முட்டாளாகவே நினைத்திருந்தாள். நினைத்தால் குட்டிக் கரணம் போடும் குட்டிக் குரங்காக அவனை ஆட்டம் போட வைத்திருந்தாள். அவன் சேட்டைகளைப் பார்த்துப் பார்த்து வயிறு வலிக்கச் சிரிப்பதே அவள் பொழுது போக்கு. அவர்கள் விளையாட்டையும் சிரிப்பையும் யாரும் பெரிது படுத்தவில்லை. வயதுக்கு வராத குழந்தைகளின் சிறு பிள்ளை விளையாட்டாகவே அவர்கள் எடுத்துக் கொண்டார்கள்.
அன்றும் அப்படித் தான் வேலை முடிந்து மாமன் வீட்டிற்கு வந்திருந்தான். மாமாவையும் அத்தையையும் காணவில்லை. டீச்சரம்மா மட்டும் வீட்டிலிருந்தாள். தனியாக அகப்பட்ட அவனை லோட்டி கட்டிக் கொண்டிருந்தாள். பொய்யாக அவளைத் துரத்த சிரித்த படி ஓடி தடுமாறி விழ இருந்த கணத்தில் அவளைப் பாய்ந்து பிடித்துக் கொண்டான். வலிமையான அவன் பிடியில் சிக்கியிருந்தவள் சிரிப்பு மறைய முகம் கோணிக் கொண்டு போனது. வயிற்றின் உட்தசைகள் சுருங்க ஏதோ ஒன்று உடைந்து போக அவள் அப்படியே குந்திக் கொண்டாள். தாங்க முடியாத வேதனையில் அவள் கண்களிலிருந்து கண்ணீர் கொட்டிக் கொண்டிருந்தது. அவ்வேளை அங்கே வந்த அத்தை நிலமையைப் புரிந்து கொண்டு "எலே மாப்பிள்ளை அம்மாவை வரச் சொல்லு" என்று அவனை அனுப்பி வைத்தாள்.
அப்புறம் அம்மா வந்து சொன்னாள். செண்பகம் பெரிய மனுஷி ஆகிவிட்டாளாம் என்று. பெரிய மனுஷியாவது என்னவென்றே அவனுக்குப் புரியவில்லை. சரி நாளைக்கு டீச்சரம்மாவையே கேட்டுத் தெரிஞ்சு கொண்டால் போச்சு என்று எண்ணிக் கொண்டான்.
அதிகாலையிலேயே மாமா வீட்டிற்குப் போனவன் " மாமா மாமா " என்று குரல் கொடுத்தான். ஆறு முகனின் குரல் கேட்டதும் வாசலுக்கு ஓடுவதற்கு எத்தனித்தவள் ஏதோ தயங்கினாள். ஒரு நாளும் இல்லாமல் இதுவென்ன ஒரு வெட்கம். இரவு முழுவதும் அவன் தகட்டு மார்பும் கரணைக் கைகளும் அவன் கரத்தின் வலிமையும் வந்து வந்து அவள் தூக்கத்தை கெடுத்துக் கொண்டிருந்தது. இப்போதென்னடாவென்றால் வெட்கம் வேறு வந்து கால்களைக் கட்டிப் போட்டுக் கொண்டிருந்தது. ஆறு முகனின் குரல் கேட்டுக் கொண்டிருந்தது. வானொலியில் "அறிமுகம் செய்தவன் ஆறுமுகன் " என்ற பாடல் பக்தியுடன் ஒலித்துக் கொண்டிருந்தது. "இது வேற..." அவள் முகம் சிவந்து கொண்டிருந்தது.
Saturday, February 04, 2006
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
நல்ல கதை இளந்திரையன். நன்றாக வந்திருக்கிறது.
உங்கள் வருகைக்கு நன்றி ராகவன்.
-அன்புடன் இளந்திரையன்
Post a Comment