தூக்கம் வராது திரும்பித் திரும்பி படுத்துக்கொண்டான். எங்கே தான் போய்த் தொலைந்தது இந்தத் தூக்கம். இரவின் நிசப்தத்தில் வீதியில் செல்லும் இரண்டொரு வாகனங்களின் இரைச்சல் இடையிடையே விட்டு விட்டுக் கேட்டுக் கொண்டிருந்தது. அதை விட பால்கனியில் கூடு கட்டி முட்டை இட்டிருந்த புறாவின் குறு குறுப்பும் சிலவேளகளில் எழுந்து அடங்கிக் கொண்டிருந்தது. மற்றும் படி இரவின் நிசப்தம் அடர்த்தியாக இறங்கியிருந்தது.
கண்களைத் திறந்து நேரத்தைப் பார்த்தான். 2.37 சிவப்பு நிற டிஜிட்டரில் பளீரிட்டுத் தெரிந்தது. இன்னும் ஒரு மூன்று மணி நேரம் தூங்கலாம். தூக்கம் வர வேண்டும் வந்தால் அதிர்ஸ்டம். இல்லையென்றால் என்ன ? நாளாந்தக் கடமையைத் தள்ளிப் போடவா முடியும்? மீண்டும் நேரத்தைப் பார்த்தான். இப்போது 2.39 இற்கு மாறியிருந்தது. மறு பக்கம் திரும்பி மீண்டும் தூங்குவதற்கு முயற்சி செய்து பார்த்தான். அந்தப் பக்கம் சற்று விலகியிருந்த ஜன்னல் சீலையின் நீக்கலினூடாக தெரு விளக்கின் மஞ்சள் ஒளிக் கசிவு துகளாக கீழ் நோக்கிப் பரவி இறங்கிக் கொண்டிருந்தது. மூடிய கண்களினூடாக மெலிதாக பழுப்பு நிறத்தில் ஒளி ஊடுருவ இம்சையாக இருந்தது. எழுந்து சென்று திரச்சீலையை நன்கு இழுத்துவிட ஆசை எழுந்தது. சோம்பலால் அதைத் தவிர்த்து மறு படியும் மறுபக்கம் திரும்பிப் படுத்துக் கொண்டான்.
சர்ரென்று சீறிப் பாய்ந்த வாகனம் சற்றுப் பேரிரைச்சலை எழுப்பித் தேய்ந்து போனது. ஒரு ட்ரக் வண்டியாய் இருக்கலாம். அல்லது வொஜாயர் ரக ஜீப் வண்டியாக இருக்கலாம். இதுவா இப்போ முக்கியம். தூங்க வேண்டும். மெத்தென்றிருந்த தலையணையால் தலையை மூடிய படி தூங்க முயற்சித்தான். வெளியோசைகள் கட்டுப்பட்ட போதும் மனது தூங்க மறுத்து அடம்பிடித்துக் கொண்டிருந்தது.
சந்தோஷமாய் தொடங்கிய திருமண வாழ்க்கை. இன்று சத்தமும் குழப்பமும் நிறைந்து போய் விட்டது. முதல் குழந்தையும் பிறந்து விட்ட நிலையில் அது இன்னும் அதிகரித்துக் கொண்டு தான் செல்கின்றது. முதல் முதல் சந்தோஷம் போல முதல் முதல் சண்டையும் வெகு சீக்கிரமே வந்து சேர்ந்தது. தனது வார்த்தையை முதல் முதல் எதிர்த்துப் பேசிய மனைவியையும் பார்த்தான். இரு மனம் சேர்ந்ததே திரு மணம் என்ற பொய்மையையும் முதல்முதலில் உணர்ந்து கொண்டான். இரண்டு உயிர்களின் விருப்பு வெறுப்புகள் ஒரே கோட்டில் வர முடியாது அடம்பிடித்துக் கொண்டிருந்தன.
கணவனுக்கு அடங்கி போக வேண்டியவள் மனைவி என்பதில் அவன் உறுதியாக நின்றான். அதை விளங்கிக் கொள்வதில் அவள் காட்டிய அலட்சியமும் முடியாதென்ற பிடிவாதமும் அவனைக் கோபப்படுத்தியது. காலம் காலமாக அவனுக்கிருந்த நம்பிக்கையை விட்டுக் கொடுக்க அவன் தயாராக இல்லை. அடங்காப் பிடாரியான ஒரு பெண் தனக்கு மனைவியாக வந்ததையிட்டு துக்கப் பட்டான். என்ன செய்யலாம் இவளை. இவளுடன் சேர்ந்து வாழ்வதெபது இனியும் சாத்தியம் என்று அவனுக்குத் தோன்றவில்லை. பிள்ளைகள் பிறக்கும் போது எல்லாம் சரியாகும் என்று அவனுக்கு சொல்லப் பட்டபோது அதை நம்பினான். பிள்ளை பிறந்தபோதும் எதுவும் சரியாகவில்லை. இன்றும் சில வேளைகளில் முகத்தை தூக்கி வைத்திருக்கும் தந்தையையும் முகத்தை முந்தானையில் துடைத்துக் கொண்டிருக்கும் தாயையும் இப்போது புரிந்து கொள்ள முடிந்தது. ஆறு பிள்ளை பெற்று கரை சேர்த்து பேரப்பிள்ளைகளையும் பார்த்த பின்னும் கண்ணைக் கசக்கும் அம்மாவையும் கோபத்தில் விட்டத்தை வெறிக்கும் அப்பாவையும் புரிந்து கொண்டான். பொய்மையை நம்பி பொய்மையில் வாழும் ஒரு அற்ப வாழ்க்கை.
தானும் அவ்வாறு வாழ்வது சாத்தியமில்லை என்று பட்டது. தனது சுதந்திரம் ஆசை, தேவை எல்லாவற்றையும் விட்டுக் கொடுப்பது அல்லது சமரசம் செய்து கொள்வது தேவையில்லை என்று பட்டது. சமைப்பது வீட்டு வேலை செய்வது எல்லாவற்றிலும் தனது பங்கினையும் அவள் எதிர்பார்த்தபோது அவனுக்கு அதிர்ச்சியாக இருந்தது. தானும் வேலை பார்ப்பதுவும் தனக்கும் இருக்கக் கூடிய அயர்ச்சியையும் களைப்பையும் கூறி மறுத்தபோது படித்ததனால் வந்த தலைக்கனம் என்றே தோன்றியது.
காலையில் இருந்து மாலை வரை சண்டை போடுவதற்கென்றே பொழுது விடிவதாக அவனுக்குத் தோன்றியது. anatomy is not destiny என்ற அவளது வாதம் தான் அவனை மிகவும் கோபப்படுத்தியது. தாய்மையும் இனப்பெருக்கமும் இயற்கையின் தேவையாக பெண்ணை அடங்கிப் போதல் ஒன்றிற்குத் தானே வழிகாட்டுகின்றது. இது தானே காலம் காலமாக சொல்லப்பட்டிருக்கின்றது. அவளுடைய வார்த்தைகள் இந்த சமூகத்தின் அடித்தளத்தையல்லவா புரட்டிப் போடப் போகின்றது. அவன் மிகவும் பயந்தான். தன் மேலாண்மையை கேள்விக்குள்ளாக்கும் அவளை சகித்துக் கொள்ள முடியாதிருந்தது. என்ன மாதிரியான ஒரு பெண் இவள். ஏன் மற்றவர்களைப் போல இவள் இல்லை. கணவனை வேலைக்கனுப்பி மாலையில் எதிர்பார்த்து பணிவிடை செய்து மஞ்சத்தில் சுகம் தந்து ... இதுவல்லவோ வாழ்க்கை. தன்னைத் தவிர ஆண்கள் எல்லோருமே அதிர்ஷ்டசாலிகளாகவே அவனுக்குத் தோன்றியது. தனக்கு மட்டும் ஏன் இப்படி வாய்த்திருக்கின்றது.
பிள்ளையைப் பெத்துக் கொண்டது மகாதப்பு என்று இப்போது தோன்றியது. இவளை விட்டு ஓட முடிந்தாலும் அந்த பிஞ்சுக்குழந்தையை விட்டு ஓட முடியும் என்று அவனுக்குத் தோன்றவில்லை. தன்னிடம் மட்டும் குழந்தையைத் தந்துவிட இந்த ராட்சசி ஒரு போதும் ஒத்துக் கொள்வாள் என்றும் தோன்றவில்லை. தன்னைப்போல இன்னும் ஒரு பெண்ணாகத் தான் அவள் இந்தப் பெண்குழந்தையையும் வளர்க்கச் செய்வாள். என் அம்மாவைப் போல் இந்தக் குழந்தையும் வளர்ந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். குடும்பக் கெளரவத்தை எப்போதும் விட்டுக் கொடுக்காது அடுக்களையுள் மட்டும் தன் துக்கத்தையும் கண்ணீரையும் துடைத்துக் கொள்ளும் அம்மா. கோபத்தையும் துக்கத்தையும் வீட்டினுள்ளேயே அடைத்து வைத்து வெளியுலகில் மஞ்சள் குங்குமத்துடன் பெரு வாழ்வு வாழும் அம்மா. பெண்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு அவன் அம்மாவை விட பெரிய சாட்சியம் யாரும் இருக்க முடியாது. காலால் இட்ட வேலையை தலையால் செய்யும் அம்மாவை அவன் பெரிதும் நேசித்தான். அவளைப் போலவே தனக்கும் ஒரு பெண் கிடைக்க வேண்டுமென்ற அவன் கனவு ஆசை எல்லாம் மண்ணோடு மண்ணாய்ப் போய் விட்டது.
இடையிடயே இரைந்து செல்லும் வாகனங்களைப் போல அவன் வாழ்விலும் அங்கொன்றும் இங்கொன்றுமாக சில சந்தோஷங்கள் இருக்கத் தான் செய்தது. அவள் ஈஷலும் நெருக்கமும் சலனமில்லாக் குளத்தில் தோன்றி மறையும் குமிழிகள் போல் தோன்றித் தோன்றி மறைந்தன. அது மட்டுமா வாழ்க்கை? கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன் என்று போற்ற மறுக்கும் இவள் அவன் மனதை எத்தனை தூரம் காயப் படுத்தியிருக்கின்றாள். கணவனிடம் அடங்கி அன்பைப் பெறுவதைத் தவிர வாழ்க்கை என்று இவள் எதைத் தான் சொல்லுகின்றாள் என்பது அவனுக்கு இன்னும் புரியாத புதிராகவே தோன்றியது.
கண்ணகி சீதை என்று எத்தனை உத்தமிகள் தோன்றிய மண்ணில் இப்படியும் ஒரு பெண்ணா ? கணவனை மதித்ததனாலன்றோ இன்றும் அவர்களை உலகோர் கொண்டாடுகின்றார்கள். படித்த இவள் இவை எல்லாவற்றையும் அறியாமல் போனது எப்படி. ஒரு ஆணாக அவனால் இதையெல்லாம் புரிந்து கொள்ள முடியாது தான். ஆண்களால் புரிந்து கொள்ள முடியாததால்த் தான் விவாகரத்திற்காக ஒரு கூட்டமே காத்திருக்கின்றது. அடங்காப் பிடாரிகளை மனைவிகளாகக் கொண்ட தன்னைப் போன்றவர்களால் வேறு என்ன தான் செய்ய முடியும் என்று அவனுக்குத் தோன்றியது. குழந்தைகளில் வைக்கக் கூடிய பாசத்தையும் குறைத்துக் கொள்ள பழக்கப் படுத்த வேண்டியது தான். கல் மனத்துடன் வாழ்வதற்கு மேற்கு நாட்டவரைப் போல வேறு பழக்கங்களையும் பழகிக் கொள்ளவேண்டும். மது கஞ்சா கட்டை போல.
முடியுமா என்பதற்கு முதல் ஏற்றுக் கொள்வார்களா ? என்று மற்றொரு பயம் தோன்றியது. காசி ராமேச்வரம் என்று கிளம்ப வேண்டியது தான். சன்னியாசிகளும் சாதுகளும் தானே வழிகாட்டியிருக்கிறார்கள். பாவம் அவர்களும் தான் எவ்வளவு பாடுபட்டிருப்பார்கள். சும்மாவா பட்டினத்தார் எல்லாம் இத்தனை பாடி வைத்திருக்கிறார். " பெண் என்னும் மாயப் பிசாசு" என்னைப் போல கஸ்ரப் பட்ட யாரோ ஒருவன் சொல்லிப் போயிருக்கிறான் . நூத்தில் ஒரு வார்த்தை. பெண்னின் சொல் கேட்டு சமையலுக்கு காய் கறி நறுக்குவதை விட இவையெல்லாம் கடினமாயில்லையா ? என்றொரு குரல் எங்கோ ஒரு மூலையில் கேட்டது. உன் சுக துக்கங்களில் பங்கு பெற வந்தவளை மகிழ்ச்சிப் படுத்துவது உனதும் மகிழ்ச்சியில்லையா? என்ற உறுத்தலை மூடி மறைத்துக் கொண்டான். மனம் ஒரு குரங்கென்று சும்மாவா சொல்லியிருக்கிறார்கள். அங்கும் இங்கும் தாவுவதைத் தவிர அதற்கு என்ன தான் தெரியும்.
கண்ணைத் திறந்து நேரத்தைப் பார்த்தான். 4.47 சிவப்பில் உறுத்தியது. இன்னும் விடியவில்லை. ஆனாலும் இனித் தூங்க முடியாது. படுக்கையில் இருந்து எழுந்து ஜன்னல் திரையை விலக்கி வெளியே பார்த்தான். மஞ்சள் வெளிச்சத்தில் தெரு பளிச்சென்று தெரிந்தது. வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்திருந்தது. Early birds இரை தேட வெளிக்கிட்டு விட்டார்கள். புழுக்கள் தூங்கிக் கொண்டிருக்கக் கூடும். எப்படியும் இரையாவதென்னவோ புழுக்கள் தான். வாழ்க்கை அப்படித்தானே இருக்கின்றது. மேலே அண்ணாந்து பார்த்தான். முழு நிலவு மேற்கில் சரிந்திருந்தது. தரையில் தெரியாத நிலவொளி. செயற்கை வெளிச்சங்கள் நிறைந்த இங்கு தேவையில்லாத நிலவொளி. சிம்னி விளக்கில் ஒளியைத் தேடும் கண்களில் பொக்கிஷமான பால் ஒளி. இங்கு தேவையில்லாது வீணாகிக் கொண்டிருக்கின்றது. நிலவிலும் கறை . இங்கு எதுவும் பூரணம் இல்லாதது . மேலும் கீழும் தொங்கிக் கொண்டிருக்கும் வாழ்க்கையப் போல.
Wednesday, February 01, 2006
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
வித்தியாசமான கதை
அனனிமஸ் ,தென்றல் நன்றிகள்
Post a Comment