Sunday, February 05, 2006

ஊருக்கு உபகாரி

அதிகாலையிலிருந்தே தெரு அமர்க்களப் பட்டுக்கொண்டிருந்தது. கூடத்திற்கும் தெருவுக்குமாய் நடையாய் நடந்து என் மனைவி நேர் முக வருணனை கொடுத்துக் கொண்டிருக்கிறாள். போலீஸ் வண்டியும் வேடிக்கை பார்க்கும் கூட்டமுமாய் தெருவே நிறைந்திருந்தது. பாடசாலைக்குப் போவதற்கு ஆயத்தமாய் இருந்தாலும் போவதற்குத் தான் மனம் வரவில்லை. எப்படியும் அந்த வீட்டைத் தாண்டித் தான் போகவேண்டும் அதுவும் ஒரு காரணம். அந்த விழிகளின் பார்வை என்னைத் துவைத்துப் போடுவதை நான் விரும்பவில்லை.

'இவளுகளுக்கு வேணும். நல்லாய் இருந்த ஊரை நாறப் பண்ணும் போதே தெரியும் இப்படி ஒரு நாள் வரும் என்று" சொல்லிச் சொல்லி என் மனைவி மாய்ந்து கொண்டிருந்தாள். அவளுக்கு அவள் கவலை தீர்ந்ததில் பெரும் மகிழ்ச்சி. அவளைப் போல் இன்னும் எத்தனை பேருக்கு நிம்மதி வந்ததோ. ஆனால் எனக்கு மட்டும் மனம் சங்கடப் பட்டது. அவர்கள் வித்தியாசமான பெண்கள் தான். வாழ்க்கையில் வழுக்கி விழுந்தவர்கள் தான். எப்படியென்றாலும் அவர்களும் இந்த சமூகத்தில் தானே வாழ்ந்திருக்கிறார்கள். மாதவி இருக்கப் போய்த்தானே ஒரு சிலப்பதிகாரம் வந்தது. இன்றும் இந்த சமூகத்தில் மாதவிகள் இருக்கத்தானே செய்கிறார்கள். தமிழ் வாத்தியான எனக்கு தமிழ்ச் சரித்திரத்தில் தானே பாடம் சொல்ல முடியும்.

காலையும் மாலையும் அந்த வீட்டைத் தாண்டித் தான் பாடசாலைக்குப் போய் வருவேன். திடீரென்று ஒரு நாள் அந்தக் கதை பரவியது. பூட்டியிருந்த அந்த வீட்டிற்கு யாரோ புதிதாக குடிவந்திருக்கிறார்கள் என்று. பின்னர் அந்த வீட்டுக் கதையே பிரதான கதையாகவும் போய் விட்டது. ஒழுக்கம் கெட்ட பெண்களின் குடியிருப்பு என்று அறியப்பட்டாலும் யாராலும் அவர்களை அகற்றமுடியவில்லை. அரசியல் செல்வாக்கு அது இதுவென்று யாராலும் அசைத்துப் பார்க்கவும் தான் முடியவில்லை. ஒவ்வொரு வீட்டுப் பெண்ணுக்கும் ஒவ்வொரு வேலை கூடிப்போனது. தம் வீட்டுக் காரரைக் காபந்து பண்ணும் வேலையும்.

என் மனைவியும் ஆயிரம் உபதேசம். அதட்டல் உருட்டலுடன் பயமுறுத்தல் வேறு. தன் கணவனையே நம்பாமல் கட்டிப் பிடித்து ஒரு குடித்தனம் வேறு. நானும் ஆரம்பத்தில் அந்தப் பக்கம் பார்ப்பதையே தவிர்த்தபடியே அந்த வீட்டைக் கடந்து போய் வந்தேன். நாளாக நாளாக பேய் பூதம் ஒன்றும் பிடிக்காததனால் பயம் போனதோ ஆசை வந்ததோ என்று அங்கு என்ன தான் நடக்கின்றதென்று கண்காணிக்கத் தொடங்கினேன். நாளாக நாளாக பயந்து பயந்து வீட்டிற்குள் போனவர்கள் எல்லாம் சுயாதீனமாகப் போய் வரத் தொடங்கிவிட்டிருந்தார்கள். யார் யார் போய் வருகிறார்கள் என்றெல்லாம் அத்துப் படியாகிவிட்டது. சில வேளைகளில் புதிய புதிய கார்கள் எல்லாம் வந்து போகத் தொடங்கி விட்டது. எனக்கும் ஒரு வேடிக்கை பார்க்கும் இடமாகவே அது மாறி விட்டது. மனைவி ஆயிரம் சொன்னாலும் என் கண்கள் என்னை அறியாமலே அங்கு பார்க்கத்தொடங்கி விடும்.

பாடசாலைக்குப் போகும் போதும் வரும் போதும் வேடிக்கை பார்ப்பது வழமையாகிப் போனது. என்னையும் ஒரு சோடிக் கண்கள் பார்ப்பதே விதியாகிப் போனது. அழகான கண்கள். கண்களுக்குரியவளை முதல் முதல் பார்த்தபோது எனது சிலப்பதிகார மாதவியே உயிருடன் எழுந்து வந்ததைப் போல ஒரு தோற்றம். அத்தனை அழகு. என் மனைவி மட்டுமல்ல இங்கிருக்கும் அத்தனை மனைவிகளுமே அந்த அழகுக்கு ஈடாக மாட்டார்கள். இவ்வளவு அழகுள்ளவளுக்கு ஏன் இப்படியொரு வாழ்க்கை. வறுமையும் அழகுமே பெண்களுக்கு எப்போதும் எதிரிகளாகப் போய் விடுகின்றன. நான் அந்த வீட்டைக் கடக்கும் போதெல்லாம் அந்தக் கண்களும் என்னைப் பார்த்திருப்பதைக் கவனிக்கத் தொடங்கினேன். கொஞ்ச நாட்களிற்கு பட படப்பாகத் தான் எனக்கும் இருந்தது. அந்த அழகான கண்களில் இருந்த சோகம் என் நெஞ்சத்தில் ஈரத்தை கிளறி விட்டிருந்தது. அவள் பெயர் என்னவோ நானறியேன். என்னைப் பொறுத்தளவில் அவளுக்கு மாதவி என்றே வைத்துக் கொண்டேன். அவளை ஒவ்வொரு காலையில்க் காணும் வரையும் தவிப்பாக தவித்துப் போய்விடுவேன். கண்டு விட்டால் அவள் நலமாய் இருக்கிறாள், உயிருடன் இருக்கிறாள் என்று மனம் நிம்மதியடையும். யாரோ? எவளோ ? நான் ஏன் இப்படி அல்லாடுகிறேன் என்று எனக்குப் புரியாமலேயே இருந்தது. இந்த மாதவிக்கும் ஒரு கோவலன் கிடைக்கவேண்டுமே என்பது நித்தியக் கவலையாகப் போய் விட்டது.

ஒரு முறை ஒரு கவிஞன் அங்கே நுழைவதைக் கண்டேன். கவிஞன் என்று எப்படி அவனைக் கண்டுகொண்டேன். அவன் கையில் இருந்த ஜோல்னாப் பைதான் அவனைக் காட்டிக் கொடுத்தது. அந்தக் கவிஞன் அவளைத் தான் தேர்ந்தெடுத்திருப்பான் என்று நிச்சயமாக நம்பினேன். அழகை ஆராதிப்பவன் தானே கவிஞன். அந்தக் கண்களைப் பற்றி ஒரு காவியம் இல்லாவிட்டடலும் ஒரு கவிதையாவது எழுதியிருக்கக் கூடும். இரவு முழுக்கத் தூக்கம் இல்லாமல் ஏதேதோ எண்ணம். அடுத்த நாள் அந்த வீட்டைக் கடக்கும் போது அவளைத் தேடினேன். அவள் நின்றாள். கண்களைத் தேடினேன். கண்களில் அதே சோகம். ஜோல்னாப் பை வைத்திருப்பவர்களெல்லாம் கவிஞர்களாய்த் தான் இருக்க வேண்டுமென்பது இல்லையே.

ஒரு ராஜ குமாரனாவது அவளைக் காப்பாற்றக் கூடுமென நம்பினேன். அவர்களிடம் தானே பணம் இறைந்து கிடக்கின்றது. ஒரு வாய் சோறும் ஒரு முழத் துணியும் கொடுப்பதால் அவர்கள் ஒன்றும் ஏழையாய்ப் போய்விடப் போவதில்லையே. ஆழ்கடலின் அடியில்த்தான் எத்தனை வைரங்கள். அதில் இதுவும் ஒன்று போல சீந்துவாரில்லாமல்.

இன்று கைதாகியிருக்கும் அந்தக் கண்களைப் பார்க்கவும் திராணியில்லாமல் இதோ கிடக்கிறேன். நீயே கோவலனாக மாறியிருக்கலாம் என்கிறீர்களா? நான் கோவலனாக மாறமுதல் என் மனைவி கண்ணகியாக இருக்கிறாளா என்று பார்க்க வேண்டும். அவள் கண்ணகிதான். கால்ச்சிலம்பைக் கழட்டித் தரும் கண்ணகியல்ல. என் கைகளுக்கு விலங்கு பூட்டிய கண்ணகி. இப்படித்தானே குடும்ப வண்டி ஓடிக் கொண்டிருக்கின்றது. வண்டியோட இரண்டு சக்கரம் வேண்டுமென்பதல்ல. ஒரு சாரதியும் வேண்டும். ஒரேயொரு சாரதி மட்டும்.

இன்னும் தான் போலீஸ் வண்டி கிளம்பவில்லை. போலீஸ் வண்டி கிளம்பிய பின் தான் பாடசாலைக்கு போவேன் என்று கண்டிப்பாகச் சொல்லி விட்டேன். ஒழுக்கம் உள்ள ஆண்பிள்ளை என்று பத்து மார்க் கூட்டிப் போட்டுக் கொள்வாள் என்று தெரியும். இப்படித் தான் சிலவேளைகளில் ஆண்மைத் தனத்தையே கூட்டிக் கொள்ள வேண்டியிருக்கின்றது.

சுற்றி நிற்கும் கூட்டத்தில் என்னையும் கண்டு கொண்டால் சில வேளைகளில் அந்தக் கண்கள் கெஞ்சக் கூடும். பாவப் பட்டவர்கள் மேல் கல்லெறியாதிருக்கச் சொல்லச்சொல்லி கேட்கக் கூடும். முதல் கல் எறிவதற்கு அருகதை இல்லாததைப்போல் இந்தச் சமூகத்தில் முதல் கல் எறிவதைப் பற்றி சொல்வதற்கும் ஒரு தேவ குமாரன் இனிப் பிறக்க முடியாது என்பதை எப்படிச் சொல்வது. உலகம் அப்படித் தான் இருக்கின்றது.

கோவலன்கள் பிறப்பது நல்லது. இல்லையென்றால் பாவப்பட்ட மாதவிகளை யார் காப்பது ?

1 comment:

Anonymous said...

மாதவிகள் வாழ்வதற்கு கோவலன்கள் உருவாக அவசியமில்லை. ஏன் கர்ணன்கள் போல் தங்கை உறவு முறை சொல்லி அரவணைக்கத் தோன்றாதோ.... அது மட்டுமில்லை சங்கடம் ஒரு கண்ணகிக்கே மதுரை கோவிந்தா....... கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க....